'கூட்டணிக்கு அவர் வேண்டாம் முதல்வரே!' - தூதுவிட்ட விசிக... குழப்பத்தில் திமுக!
20 ஆண்டுகளில் 3 கட்சிகள்; கட்சி தொடங்கியும் களமிறங்காத கார்த்திக்கின் அரசியல் கதை! | Vote Vibes 3
சினிமாவில் உச்ச நடிகராக உயர்ந்த பிறகு அந்த நடிகர்கள் பலரின் கவனம் அரசியல் மீதும் பாயும். அப்படி தமிழக அரசியல் வரலாற்றில் சினிமா நடிகர்கள் பலரும் அரசியலில் பெரும் தாக்கங்களையும் திருப்பங்களையும் கொண்டு வந்திருக்கிறார்கள். இதில் நடிகர் கார்த்திக்கின் அரசியல் கதை நம்மை குழப்ப வைக்கும் ஒன்றாக இருக்கும்.
அரசியல் என்ட்ரியான தேர்தலில் படுதோல்வி - மீண்டும் புதிய கட்சி, மீண்டும் புதிய கட்சி என ஒரே பாதையை சுற்றியது அவருடைய அரசியல் கதை.

சரணாலயம்
90-களில் உச்ச நடிகராக இருந்த நவரச நாயகன் கார்த்திக்கை பல கட்சிகளும் அவர்கள் பக்கம் இழுக்கப் பெரும் முயற்சிகள் எடுத்தன என்கிற பேச்சுகளும் இருக்கின்றன. ஆனால், அப்படியான நேரத்தில், 2006-ல் ‘ஆல் இந்தியா ஃபார்வர்டு பிளாக்’ கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். கட்சியில் இணைவதற்கு முன்பே ‘சரணாலயம்’ என்ற அமைப்பைத் தொடங்கிய கார்த்திக், அவருடைய ரசிகர்கள் பலரை அதில் இணைத்துக் கொண்டார்.
ஃபார்வர்டு பிளாக்
பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்த கார்த்திக்கின் ‘சரணாலயம்’ அமைப்பிற்கு மக்களிடம் வரவேற்பு கிடைத்தது. 2006 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே அவருடைய அரசியல் வருகையை அவர் பதிவு செய்வார் என பெரும் எதிர்பார்ப்புடன் மக்கள் காத்திருந்தனர். அப்படியான வேளையில்தான், ‘ஆல் இந்தியா ஃபார்வர்டு பிளாக்’ கட்சியில் இணைந்தார்.
பிறகு, அக்கட்சியின் தமிழகத் தலைவராகவும் அவர் நியமிக்கப்பட்டார். ரசிகர் படையைக் கொண்ட கார்த்திக் கட்சியை முன்னெடுத்துச் செல்வார் என நினைத்திருந்தது தலைமை. ஆனால், கட்சியின் முக்கியக் கூட்டங்களிலேயே அவர் அப்சென்ட் ஆகியிருக்கிறார். இதுமட்டுமல்ல, கார்த்திக்கின் அடுத்தடுத்த செயல்களும் கட்சித் தலைமைக்கு அதிருப்தியாகவே இருந்திருக்கின்றன. பிறகு, அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

2009 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு அவருடைய புதிய கட்சியான ‘அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி’யைத் தொடங்குவதாக அறிவித்தார். சொந்தக் கட்சியைத் தொடங்கிய பிறகு ஆதரவாளர்களைத் திரட்டி தேர்தல் அரசியலில் ஈடுபட முடிவு செய்தார். பா.ஜ.க-வுடனான கூட்டணியில் இணைந்து விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டார் கார்த்திக்.
அவருடைய சமூக மக்களின் ஆதரவு தொடங்கி பல்வேறு திட்டமிடல்களுக்குப் பிறகுதான் விருதுநகரில் அவர் களமிறங்க முடிவு செய்தார். ஆனால், அவருடைய கணிப்புகள் தலைகீழாக மாறி பெரும் தோல்வியையே சந்தித்தார். அந்தத் தேர்தலில் வெறும் 2 சதவீத வாக்குகளை (15,000 வாக்குகள்) மட்டுமே பெற்று தோல்வியடைந்தார். இந்தத் தேர்தலில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்றார்.
இதன் பிறகு, 2011 சட்டமன்றத் தேர்தலில் தன்னுடைய நாடாளும் மக்கள் கட்சியை அதிமுகவுடனான கூட்டணியில் இணைத்துவிட முயற்சி செய்தார் கார்த்திக். ஆனால், ஜெயலலிதாவோ அவர் கேட்கும் தொகுதிகளின் எண்ணிக்கையைக் கொடுக்க முடியாது என மறுத்திருக்கிறார். இதனால் வருத்தமடைந்த கார்த்திக் அதிமுகவுடனான கூட்டணி திட்டங்களை கைவிட்டார்.
பிறகு 20-40 தொகுதிகளில் நாடாளும் மக்கள் கட்சி போட்டியிடும் என அதிரடியாக அறிவித்தார். 2011 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில்தான் மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவரின் பெயர் சூட்ட வேண்டும் என உண்ணாவிரதம் இருந்தார். ஆனால், சரியான பரப்புரை திட்டமிடல்கள், வலிமையான வேட்பாளர்கள் இல்லாததால் 2011-லும் இந்தக் கட்சி படுதோல்வியைச் சந்தித்தது.

இதனைத் தொடர்ந்து 2014 நாடாளுமன்றத் தேர்தலிலும், 2016 சட்டமன்றத் தேர்தலிலும் நாடாளும் மக்கள் கட்சி சார்பில் கார்த்திக் போட்டியிடவில்லை. கார்த்திக் நினைத்த கூட்டணிக் கணக்குகள் சரியாக கைகூடி வராததுதான் அவர் இதற்கிடைப்பட்ட காலத்தில் அரசியலிலிருந்து விலகி சைலன்ட்டாக இருந்ததற்கும் காரணமாகச் சொல்கிறார்கள். இந்த நேரத்தில்தான் அவர் ஓரிரு படங்களிலும் நடிக்கத் தொடங்கினார்.
2011 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு நாடாளும் மக்கள் கட்சி எந்தவொரு தேர்தல் செயல்பாடுகளிலும் ஈடுபடவில்லை. பிறகு, 2018-ம் ஆண்டு அரசியலுக்கு ரீ-என்ட்ரி கொடுக்க முடிவு செய்தார் கார்த்திக். அப்போது, “நாடாளும் மக்கள் கட்சி' புதிய வடிவத்தில் வரவிருக்கிறது. அதனுடைய சில பொறுப்பாளர்கள் மாற்றி அமைக்கப்படுவார்கள்” எனக் கூறியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து, 2019-ம் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக டிசம்பர் மாதம் ‘மனித உரிமைகள் காக்கும் கட்சி’ என புதியக் கட்சியைத் தொடங்கினார். இந்தக் கட்சி மக்களின் உரிமைகளுக்காகவும், சமூக நலன், விவசாயம் மற்றும் இளைஞர்களின் நலனுக்காக குரல் கொடுக்கும் எனத் தெரிவித்திருந்தார். 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தன்னுடைய மனித உரிமைகள் காக்கும் கட்சி மூலமாக அதிமுக-வுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யவுள்ளதாகக் கூறியிருந்தார்.

பிறகு அதிமுக-வுக்கு பல்வேறு பகுதிகளுக்குப் பயணித்து பிரச்சாரமும் செய்தார். அதைத் தொடர்ந்து 2021 சட்டமன்ற அதிமுக-பா.ஜ.க கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யவுள்ளதாகத் தெரிவித்தவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
2018-ல் மனித உரிமைகள் காக்கும் கட்சியைத் தொடங்கிய பிறகு எந்தவொரு தேர்தலிலும் அக்கட்சி போட்டியிடவில்லை. அக்கட்சியைத் தொடங்கிய பிறகு அதிமுக-வுக்கு ஆதரவாக மட்டுமே கார்த்திக் பிரச்சாரம் செய்தார். தற்போது உடல்நிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அவர் அரசியல், சினிமா என அனைத்திலிருந்தும் விலகி இருப்பதாகச் சொல்கிறார்கள்.!




















