'லட்சக்கணக்கில் முறைகேடு அம்பலம்? கிராமசபை கூட்டத்தில் கேள்விகளால் துளைத்த மக்கள...
`400 மீட்டர் பயணத்துக்கு ரூ.18,000' - அமெரிக்க பெண் சுற்றுலா பயணியை ஏமாற்றிய மும்பை டாக்சி டிரைவர்
மும்பைக்கு தினமும் ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து கொண்டிருக்கின்றனர். பொதுவாக மும்பையில் உள்ள ஆட்டோ மற்றும் டாக்சிகள் மீட்டரில் உள்ளபடிதான் கட்டணம் வசூலிக்க வேண்டும். ஆனால் அமெரிக்காவில் இருந்து மும்பை வந்த பெண் சுற்றுலா பயணி ஒருவரிடம் டாக்சி டிரைவர் ஒருவர் ஏமாற்றி இருக்கிறார்.
அர்ஜெண்டினா அரியானோ என்ற அந்த பயணி எக்ஸ் தளத்தில் தான் ஏமாற்றப்பட்டது குறித்து குறிப்பிட்டுள்ளார். அதில், ``நான் சமீபத்தில் மும்பை வந்தேன். ஹில்டன் ஹோட்டலுக்கு செல்ல டாக்சியில் ஏறினேன். இரண்டு பேர் என்னை அடையாளம் தெரியாத இடத்திற்கு அழைத்து சென்று 200(ரூ.18000) அமெரிக்க டாலர் பெற்றுக்கொண்டு என்னை ஹோட்டலில் கொண்டு போய்விட்டனர்.
ஆனால் அந்த ஹோட்டல் நான் ஏறிய இடத்தில் இருந்து 400 மீட்டர் தூரத்தில்தான் இருந்தது'' என்று குறிப்பிட்டு டாக்சி நம்பரையும் அதில் குறிப்பிட்டு இருந்தார்.
அந்த பதிவு வைரலானது. டாக்சி டிரைவர் பெண் சுற்றுலா பயணியை டாக்சியில் ஏற்றி 20 நிமிடம் சுற்றிவிட்டு அப்பயணியை ஏற்றிய இடத்திற்கு அருகில் கொண்டு வந்து ஹோட்டலில் இறக்கிவிட்டுள்ளார். அமெரிக்க பெண்ணின் பதிவை தொடர்ந்து மும்பை போலீஸார் தாங்களாக இதனை விசாரிக்க ஆரம்பித்தனர்.

டாக்சி பதிவு எண் அடிப்படையில் அதன் டிரைவர் தேஷ்ராஜ்(50) என்பவரை கைது செய்தனர். அவருடன் இருந்த நபரை தேடி வருகின்றனர். இப்புகார் குறித்து விசாரிக்கும்படி சாகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோஜ் என்பவரிடம் துணை போலீஸ் கமிஷனர் மனீஷ் கேட்டுக்கொண்டார். அதன் அடிப்படையில் போலீஸார் அமெரிக்க சுற்றுலா பயணி தங்கி இருந்த ஹோட்டலுக்கு சென்று தகவல்களை சேகரித்தனர். அவர் ஜனவரி 12ம் தேதி ஹோட்டலுக்கு வந்துள்ளார். அடுத்த நாளே ஹோட்டலை காலி செய்துவிட்டு புனே சென்றுள்ளார். அங்கிருந்து அவர் அமெரிக்கா சென்றுவிட்டார்.
இது குறித்து இன்ஸ்பெக்டர் மனோஜ் கூறுகையில்,'' பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வாக்குமூலம் பெற முயன்று வருகிறோம். அவர் தனக்கு நடந்த சம்பவம் குறித்து ஹோட்டல் ஊழியர்களிடம் கூட கூறவில்லை'' என்றார்.
















