"'மூக்குத்தி அம்மன்' படத்துக்கு 3 டிக்கெட் வசனத்தை சூர்யா சார் நிக்கச் சொன்னார்!...
7 நாடுகள், 23 துறைமுகங்கள் - உலகம் முழுக்க கொகைன் சப்ளை செய்துவிட்டு இந்தியா வந்து சிக்கிய கப்பல்!
குஜராத் மாநிலம் முந்த்ராவில் இரண்டு நாட்களுக்கு முன்பு நடுக்கடலில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டு இருந்த கப்பலில் கடலோர பாதுகாப்பு படையினர் ரெய்டு நடத்தினர். இதில் 115 கிலோ கொகைன் போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
MV Europe என்ற அந்த கப்பல் இரண்டு நாட்களாக முந்த்ரா துறைமுகத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டு இருந்தது. அந்த கப்பலை கடலோர பாதுகாப்பு படையினர் கண்காணித்து வந்தனர். இதில் 26-ம் தேதி அதிகாலையில் குஜராத் தீவிரவாத தடுப்பு படையும், கடலோர பாதுகாப்பு படையும் அந்த கப்பலை நெருங்கின.
இதனை கவனித்த கப்பலில் இருந்தவர்கள் அக்கப்பலில் இருந்து சாக்குமூட்டைகளை கடலுக்குள் தூக்கிப்போட்டனர். அந்த சாக்குமூட்டைகளில் 5 மூட்டைகளை மட்டும் கடலோர பாதுகாப்பு படையினரால் பறிமுதல் செய்ய முடிந்தது.

அந்த மூட்டைகளில் தலா ஒரு கிலோ வீதம் 115 கிலோ கொகைன் போதைப்பொருள் பாக்கெட்கள் இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு ரூ.1,150 கோடியாகும். அக்கப்பலில் இருந்தவர்களை கைது செய்து கப்பலை பறிமுதல் செய்தனர்.
அக்கப்பல் பயணம் செய்த விபரங்களை ஆய்வு செய்தபோது அதிகாரிகள் அதிர்ச்சியாகிவிட்டனர். அக்கப்பல் கடந்த 196 நாட்களாக தொடர்ந்து கடலில் பயணம் செய்து 7 நாடுகளுக்கு சென்றுள்ளது. 7 நாடுகளில் இருக்கும் 23 துறைமுகங்களுக்கு சென்றுள்ளது.
இதில் சில துறைமுகங்களுக்கு ஒன்றுக்கும் அதிகமான முறை சென்று வந்துள்ளது. தென் அமெரிக்காவிலிருந்து தொடங்கி இந்தியா வரை நீளும் கப்பலில் சிக்கலான கடல்வழிப் பாதை விசாரணையில் தெரிய வந்ததாக தீவிரவாத தடுப்புப்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து தீவிரவாத தடுப்பு படை அதிகாரிகள் கூறுகையில், கடந்த ஆண்டு மே மாதத்தில் போதைப்பொருட்கள் கப்பலில் ஏற்றப்பட்டுப்பட்டு அனுப்பப்பட்டபோதே உளவுத்துறைக்கு அது குறித்த தகவல் கிடைத்தது. கப்பலில் இருந்த கொகைன் பிரேசிலில் இருந்து வந்ததாகும். இந்திய எல்லைக்குள் நுழைவதற்கு முன்பு, அந்தச் சரக்குக் கப்பல் பல மாதங்களாக பல்வேறு நாடுகளுக்கு பயணம் செய்துள்ளது. கொகைன் கப்பலின் இயந்திர அறையிலேயே மறைத்து வைக்கப்பட்டிருந்தது.
கப்பல் போக்குவரத்து ஆவணங்களை ஆய்வு செய்ததில், அக்கப்பலின் முதல் நிறுத்தம் நவம்பர் 11, 2025 அன்று பிரேசிலின் சாவ் விசென்டேவில் அமைந்திருந்ததாக கூறுகிறது. அதைத் தொடர்ந்த அடுத்து வந்த மாதங்களில், பனாமா கால்வாயில் நுழைவதற்கு முன்பு, அக்கப்பல் பிரேசில், அர்ஜென்டினா மற்றும் உருகுவே ஆகிய நாடுகளிலுள்ள துறைமுகங்கள் வழியாகப் பயணித்தது. பின்னர், அக்கப்பல் பஹாமஸ், டொமினிக்கன் குடியரசு மற்றும் அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரையோரத்தில் அமைந்துள்ள பல்வேறு துறைமுகங்களுக்குப் பயணம் மேற்கொண்டது.
குறிப்பாக பிரேசில், பனாமா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் உள்ள குறிப்பிட்ட துறைமுகங்களுக்கு இக்கப்பல் மீண்டும் மீண்டும் சென்று வந்தது. இதன் விளைவாக, இப்பயணத்தின் போது 40 முறை துறைமுகங்கள் மற்றும் இடங்களில் நின்றதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இறுதியில், இக்கப்பல் தெற்காசியாவை நோக்கிப் பயணித்து, மே 19 அன்று நவி மும்பைக்கு அருகிலுள்ள ஜவஹர்லால் நேரு துறைமுகத்தை அடைந்தது.
பின்னர் மே 22 அன்று பாகிஸ்தானின் காசிம் துறைமுகத்திற்குச் சென்று, இறுதியாக மே 26 அன்று முந்த்ராவைச் சென்றடைந்தது. கடத்தல் பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டிய மற்றொரு கப்பலுக்காக அந்தக் கப்பல் முந்த்ராவில் நங்கூரமிட்டு இரண்டு நாட்கள் நின்றது. கொக்கைன் நங்கூரமிட்டு இருந்த கப்பலில் இருந்து மற்றொரு படகிற்கு மாற்றப்பட இருந்தது. கப்பல் வரும் போது கொகைன் ஒவ்வொரு நாட்டிலும் இறக்கப்பட்டு இருக்கவேண்டும் என்று நம்புகிறோம்''என்று தெரிவித்தனர்.




















