``என்னுடைய ரத்தம் விஜய்க்கும் பயம் கிடையாது; தடைகளை எதிர்கொள்வார்!” - எஸ்.ஏ.சந்த...
Ajit Pawar: 'நிறைவேறாத முதல்வர் கனவு; ஆட்சியைப் பிடித்த வாக்குறுதி' - யார் இந்த அஜித் பவார்?
மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் இன்று அதிகாலை தனி விமானத்தில் தனது பாதுகாவலர்களுடன் தனது சொந்த ஊரான பாராமதிக்குச் சென்று கொண்டிருந்தார்.
விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் பாராமதியில் விமானத்தை அவசரமாகத் தரையிறக்க பைலட் முயற்சி மேற்கொண்டார். ஆனால் விமானம் தரையிறங்க முயன்ற போது தரையில் மோதிக்கொண்டது.
இதில் சம்பவ இடத்தில் இருந்து கரும்புகை கிளம்பியது. விபத்தில் விமானத்தில் இருந்த அனைவரும் உயிரிழந்தனர். விமானத்தில் இரண்டு பாதுகாவலர்கள், பைலட் மற்றும் அஜித் பவார் ஆகியோர் இருந்தனர். அவர்கள் நான்கு பேரும் இறந்துவிட்டனர்.
விபத்தில் விமானம் முற்றிலும் எரிந்து நாசமானது. விமானம் எரிந்து கிடக்கும் காட்சிகள் வெளியாகி இருக்கின்றன. காலை 9 மணிக்கு இச்சம்பவம் நடந்தது. சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும் தீயணைப்புத் துறையினர் மற்றும் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

மகாராஷ்டிராவில் வரும் 5ம் தேதி நடக்க இருக்கும் ஜில்லா பரிஷத் தேர்தலுக்குப் பிரசாரம் செய்வதற்காக இன்று காலையில் அஜித்பவார் மும்பையில் இருந்து பாராமதிக்குப் புறப்பட்டார்.
ஆனால் விமான விபத்தில் அகால மரணம் அடைந்துவிட்டார். அவரது மரணம் மகாராஷ்டிராவில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மகாராஷ்டிரா பா.ஜ.க மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் அஜித்பவார் மரணம் குறித்து அதிர்ச்சியும் இரங்கலும் தெரிவித்துள்ளனர்.
சித்தப்பாவிடம் கட்சியைப் பறித்த அஜித்பவார்
தேசியவாத காங்கிரஸ் தலைவரான அஜித்பவார் கடந்த 2023ம் ஆண்டு தனது சித்தப்பா சரத்பவாரிடமிருந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியை இரண்டாக உடைத்துக்கொண்டு தனியாக வந்தார். அவர் கட்சியின் சின்னம் மற்றும் கொடியை சரத்பவாரிடமிருந்து தேர்தல் கமிஷன் மூலம் பறித்துக்கொண்டார்.
அதோடு பா.ஜ.கவோடு கூட்டணி வைத்து சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று இப்போது துணை முதல்வராக இருக்கிறார். சமீபத்தில் நடந்த மாநகராட்சித் தேர்தலில் கட்சி உடைந்த பிறகு முதல் முறையாக புனே மாநகராட்சியில் இரு தேசியவாத காங்கிரஸ் கட்சிகளும் இணைந்து போட்டியிட்டன. அதோடு ஜில்லா பரிஷத் தேர்தலிலும் இரு கட்சிகளும் ஒரே சின்னத்தில் போட்டியிடத் திட்டமிட்டு இருந்தன.
நிறைவேறாத முதல்வர் கனவு
1959ம் ஆண்டு பிறந்த அஜித்பவார் 1982ம் ஆண்டு முதல் முறையாக சர்க்கரை கூட்டுறவுச் சங்கத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1991ம் ஆண்டு புனே மாவட்ட கூட்டுறவு வங்கிக்கு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவர் அப்பதவியில் தொடர்ந்து 16 ஆண்டுகள் இருந்தார். 1991ம் ஆண்டு முதல் முறையாக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அஜித்பவார், 1992ம் ஆண்டு சரத்பவார் மகாராஷ்டிரா முதல்வராக இருந்தபோது அவரை அமைச்சராக்கினார். அதன் பிறகு காங்கிரஸ் இரண்டாக உடைந்தபோது அஜித்பவார் தனது சித்தப்பாவுடன் இருந்தார்.

காங்கிரஸ் கட்சி தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து மகாராஷ்டிராவில் கூட்டணி ஆட்சி அமைத்தபோது துணை முதல்வர் பதவியேற்ற அஜித்பவார் தொடர்ச்சியாக துணை முதல்வராக இருந்து வந்தார்.
உத்தவ் தாக்கரே, தேவேந்திர பட்னாவிஸ் அரசில் துணை முதல்வராக இருந்த அஜித்பவாருக்கு, தான் முதல்வராக வேண்டும் என்பது நீண்ட நாள் கனவாக இருந்தது. இதைப் பல சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தி இருக்கிறார். ஆனால் அந்தக் கனவு நிறைவேறும் முன்பாக அஜித்பவார் அகால மரணமடைந்துவிட்டார்.
66 வயதாகும் அஜித்பவார் கடந்த தேர்தலில் பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூபாய் 1500 வழங்கப்படும் என்ற அறிவிப்பை பட்ஜெட்டில் அறிவித்தார். இதுதான் பா.ஜ.க கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வருவதற்குக் காரணமாக இருந்தது.
அதேசமயம் அஜித்பவார் தனது சித்தப்பாவிடம் கட்சியைப் பறித்தபோதிலும், அவரது மகன்களை அரசியலுக்கு உயர்ந்த நிலைக்குக் கொண்டு வர வேண்டும் என்று நினைத்தார். ஆனால் அவரது மகன் பாரத்பவார் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். அஜித்பவார் மரணத்தால் அவர் தலைமையில் செயல்படும் தேசியவாத காங்கிரஸ் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருக்கிறது.


















