Mrunal Thakur: `பிப்.14 ஆம் தேதி எனக்கு திருமணமா?' - மிருணாள் தாகூர் விளக்கம்
Alert: வெள்ளைக் கலர் LED லைட் உங்க வாகனத்தில் மாட்டியிருக்கீங்களா? - விரட்டிப் பிடிக்கும் போலீஸ்!
வரிசையாக வாகனங்களை நிறுத்தி, ஒரு வாரத்தில் சுமார் 242 வாகனங்களுக்கு அபராத சலான் விதித்திருக்கிறது போக்குவரத்துக் காவல்துறை. இதன் மூலம் ஒரே நாளில் சுமார் 3 லட்சம் ரூபாய் வரையெல்லாம் வசூல் நடந்திருக்கிறது. இது தவிர, ஸ்பாட் ஃபைன் மற்றும் வாகனங்களை சீஸ் செய்தது என்று கடுமையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருக்கின்றன.
காரணம் இதுதான்; அந்த வாகன ஓட்டிகள் அனைவரும் High Intensity LED Lights எனக்கூடிய வெள்ளை நிற எல்இடி ஹெட்லைட்களைப் பொருத்தியிருந்ததுதான் காரணம். போக்குவரத்துக்குப் பெரிய இடையூறாக இருந்ததற்காகவும், எதிரே வரும் வாகன ஓட்டிகளைத் தொந்தரவு கொடுத்ததற்காகவும், சட்டத்தை மீறியதற்காகவும் இந்த அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. வெள்ளை எல்இடி ஹெட்லைட்கள் பொருத்திய கார்களை காவல்துறை விரட்டி விரட்டிப் பிடித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது. இது குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத்தில் நடந்திருக்கிறது.
Watch : In viral video clips, Surat Police can be seen fining those having illegal, nuisance-creating, menacing and dangerous white LED lights fitted in their vehicles pic.twitter.com/jxXEuFK6J5
— DeshGujarat (@DeshGujarat) February 8, 2026

மோட்டார் வாகனச் சட்டத்தில் இது தடை செய்யப்பட்ட ஒன்று. High-Intensity Discharge (HID) எனக்கூடிய, போக்குவரத்து விதிகளுக்கு மீறிய, அதாவது AIS (Automotive Industry Standards) -க்குப் புறம்பான பீம் பேட்டர்ன் கொண்ட லைட்களைப் பொருத்துகிறார்கள். இப்படி ஆஃப்டர் மார்க்கெட்டில் பொருத்தக்கூடிய லைட்கள், கன்னாபின்னாவென கோணங்களில் வெளிச்சத்தை சீரில்லாமல் உமிழ்ந்து எதிரே வரும் வாகன ஓட்டிகளைக் கண் கூசச் செய்கின்றன.
வாகன ஹெட்லைட்களில் Cut-off Line என்றொரு விஷயம் இருக்கிறது. இதைத் தாண்டி வெளிச்சம் பாய்ந்தால், அது எதிரே உள்ள டிரைவரின் கண்களை நேரடியாகப் பாதித்து, அவர்களின் ஓட்டுதலைக் குலைக்கும். உதாரணத்துக்கு, ஒரு கார் சுமார் 50 மீட்டருக்குள்தான் இல்லுமினேஷன் கொண்டிருக்க வேண்டும் என்பதாக சில விதிமுறைகள் இருக்கின்றன. ஆனால் இதைத் தாண்டி வெளிச்சத்தை உமிழக் கூடிய எல்இடி லைட்களைப் பொருத்தக் கூடாது என்று சூரத் RTO எச்சரித்தும், அங்குள்ள வாகன ஓட்டிகள் தொடர்ந்து இந்தத் தவற்றைச் செய்ததற்காக இப்படி ஒரு கடுமையான நடவடிக்கை எடுத்திருக்கிறது காவல்துறை.
அதாவது - கார்களில் ஃபேக்டரி ஃபிட்டட் ஆக வரும் லைட்களை வெளிச்சம் போதவில்லை என்று கழற்றிவிட்டு மாட்டினால் இப்படிப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும் என்று எச்சரித்திருக்கிறார்கள். இதுபோன்ற High Intensity எல்இடி லைட்களை மாடிஃபை செய்து பொருத்தும் ஆட்டோ ஒர்க்ஷாப்கள் மீதும் இனி நடவடிக்கை பாயும் என்று சொல்லப்படுகிறது.
என்னது, அப்போ வெள்ளைக் கலர் எல்இடி ஹெட்லைட் பைக்/கார்களில் பொருத்துவது சட்டப்படி குற்றமா?
நீங்கள் அப்படிச் செய்யும்பட்சத்தில் - இதற்காக Central Motor Vehicle Rules (CMVR) சட்டத்துக்குட்பட்டுத்தான் இருக்கிறது என்கிற சர்ட்டிஃபிகேஷனை, முறையான ஆர்டிஓ அலுவலகத்தில் இருந்து பெற வேண்டும். தரம் குறைந்த ஆஃப்டர் மார்க்கெட் ஹெட்லைட்களைப் பொருத்தினால், ஆர்டிஓ-விடம் இருந்து அப்ரூவல் வாங்குவது மிகவும் கஷ்டம் என்பதையும் புரிந்து கொள்ளுங்கள். இந்தச் சம்பவம் தற்போது குஜாரத்தில்தான் நடந்திருக்கிறது என்றாலும், நம் மாநிலத்துக்கும் இதே விதிகள் பொருந்தும் என்பதால், எப்போது வேண்டுமானாலும் நம்மூர் காவலர்களும், இத்தகைய நடவடிக்கையைத் தொடங்கலாம். எனவே, அடுத்தவர்களுக்குத் தொந்தரவு இல்லாமல் வாகனம் ஓட்டுவோமே!

















