`10 வயதில் தொடங்கிய பயணம்' - 92 வயதில் பாடகி ஆஷா போஸ்லே மரணம்; விடைபெற்ற 80 ஆண்ட...
Asha Bhosle: `இந்திய திரையிசையின் முடிசூடா அரசி!' - ஆஷா போஸ்லே காலமானார்
இந்தியத் திரையிசையின் முடிசூடா அரசியாகத் திகழ்ந்த பழம்பெரும் பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92), உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார்.
ஏப்ரல் 11-ம் தேதி மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக, ஆஷா போஸ்லே மும்பையில் உள்ள பிரீச் கேண்டி (Breach Candy) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் அவர் மரணமடைந்த செய்தி வெளியாகியிருக்கிறது. இத்தகவலை அவரது மகன் ஆனந்த் போஸ்லே உறுதிப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பாக தன்தாயின் மறைவு குறித்து ஆனந்த் போஸ்லே வெளியிட்டுள்ள அறிக்கையில், "எனது தாய் ஆஷா போஸ்லே இன்று இயற்கை எய்தினார். அவரது இறுதிச் சடங்குகள் நாளை மாலை 4 மணி அளவில் நடைபெறும்" எனத் தெரிவித்துள்ளார்.
ஆஷா போஸ்லே மறைவைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
மகாராஷ்டிராவின் சாங்கிலியில் பிறந்த ஆஷா போஸ்லே, இந்திய இசை வரலாற்றில் யாராலும் எட்ட முடியாத ஒரு சகாப்தத்தைப் படைத்தவர். 'தில் சீஸ் க்யா ஹை' மற்றும் 'மேரா குச் சமான்' ஆகிய பாடல்களுக்காக தேசிய விருதுகளை வென்றுள்ள இவருக்கு இந்தியத் திரையுலகின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது வழங்கி இவரை இந்திய அரசு சிறப்பித்துள்ளது.
தமது தனித்துவமான குரலால் பல தலைமுறைகளை மயக்கிய ஆஷா போஸ்லேவின் மறைவு, இந்திய இசைத் துறைக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகக் கருதப்படுகிறது.

















