Ashes: டிராவிஸ் ஹெட்டின் அதிரடி சதம்!; 104 வருடங்களுக்குப் பிறகு இரண்டாவது நாளில...
Ashes: டிராவிஸ் ஹெட்டின் அதிரடி சதம்!; 104 வருடங்களுக்குப் பிறகு இரண்டாவது நாளில் முடிந்தப் போட்டி!
104 வருடங்களுக்குப் பிறகு ஆஷஸ் போட்டி இரண்டாவது நாளிலேயே முடிவடைந்திருக்கிறது. ஆஸ்திரேலியா 8 விக்கெட் வித்தியாசத்தில் முதல் போட்டியில் வெற்றிப் பெற்றிருக்கிறது.
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையிலான 74-வது ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நேற்றைய தினம் பெர்த் மைதானத்தில் தொடங்கியது.
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. களமிறங்கிய இங்கிலாந்து அணியின் பேட்டர்கள் பெரிதளவில் சோபிக்காமல் சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழந்தனர்.

அதிகபட்சமாக, ஆலி போப் 46 ரன்களும், ஹாரி ப்ரூக் 52 ரன்களும் எடுத்திருந்தார்கள். மிடில் ஆர்டர் பேட்ஸ்மென்களும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க 172 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இங்கிலாந்து அணி. 13 ஓவர்கள் வீசிய ஸ்டார்க் மொத்தமாக 7 விக்கெட்களை வீழ்த்தினார்.
பிறகு பேட்டிங்கிற்கு வந்த ஆஸ்திரேலியா அணியின் பேட்டர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 123 ரன்களுக்கு 9 விக்கெட்களை இழந்திருந்தது. முதல் நாளில் மொத்தமாக 19 விக்கெட்டுகள் விழுந்தன.
இத்தனை வருட ஆஷஸ் வரலாற்றில் ஆஸ்திரேலியா மண்ணில் முதல் நாளில் 19 விக்கெட்கள் விழுவது இது முதல் முறை. இரண்டாவது நாளில் 132 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது ஆஸ்திரேலியா அணி.
அதிகபட்சமாக அலெக்ஸ் கேரி 26 ரன்கள் அடித்திருந்தார். அதிரடியாக பந்து வீசிய பென் ஸ்டோக்ஸ் வெறும் 26 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தினார்.
இரண்டாவது இன்னிங்ஸிற்கு பேட்டிங் வந்த இங்கிலாந்து அணியின் பேட்டர்களுக்கு சறுக்கலே தொடர்ந்தது. அடுத்தடுத்து பேட்டர்கள் ஆட்டமிழந்து 164 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகினர்.

பிறகு 205 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணியின் பேட்டர்கள் 28 ஓவரிலேயே டார்கெட்டை எட்டி வெற்றியைத் தொட்டனர். ஓப்பனிங் வந்த டிராவிஸ் ஹெட் 123 ரன்களும், லபுஷேன் 51 ரன்களும் அடித்து இரண்டாவது நாளிலேயே போட்டியை முடித்து வைத்தனர்.
69 பந்துகளில் சதம் விளாசிய டிராவிஸ் ஹெட் ஆஷஸ் வரலாற்றில் அதிவேக சதமடித்த இரண்டாவது வீரர் என்ற சாதனையையும் படைத்திருக்கிறார்.பாஸ்ட் பவுலர்களுக்கு இந்த பிட்ச் சாதகமாக அமைய இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா அணி அதை கச்சிதமாகப் பயன்படுத்திக்கொண்டது.
இந்தப் போட்டியில், ஸ்டார்க் மட்டும் மொத்தமாக 10 விக்கெட்களை எடுத்திருக்கிறார்.



















