புதுச்சேரி: `மூன்று கொலைகளையும் செய்தது பாஜக எம்.எல்.ஏ-தான்!’ - பகீர் கிளப்பும் ...
Australia: முதன்முறையாக 2 பூர்வகுடி வீரர்கள்; ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் வரலாற்று சிறப்புமிக்க தருணம்
பெர்த் ஸ்டேடியத்தில் தொடங்கவிருக்கும் ஆஷஸ் தொடரில் ஜேக் வெதாரால்ட் மற்றும் பிரெண்டன் டாகெட் ஆகிய இரண்டு பூர்வீக குடி வீரர்கள் ஆஸ்திரேலிய அணியில் இணைகின்றனர். 2019ம் ஆண்டுக்குப் பிறகு ஆஸ்திரேலிய அணியில் ஒரே டெஸ்ட் போட்டியில் இரண்டு புதிய வீரர்கள் தேர்வுசெய்யப்படுவது இதுவே முதன்முறை. பிளேயிங் 11ல் இரண்டு பூர்வகுடி வீரர்கள் இடம்பெறுவதும் இதுவே முதன்முறை.
ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், 31 வயதாகும் இந்த இரண்டு வீரர்களின் ஆட்டத்தைப் பார்க்க மிகவும் ஆவலுடன் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். டேவிட் வார்னர் ஓய்வு பெற்றதால் உஸ்மான் கவாஜாவுடன் வெதரால்ட் ஓப்பனராக களமிறங்குகிறார்.

இதனால் மார்னஸ் லாபஸ்சாக்னே தனக்கு விருப்பமான மூன்றாவது இடத்தில் களம்காண்பார். ஸ்மித், டிராவிஸ் ஹெட், கேமரூன் கிரீன், அலக்ஸ் கேரி முறையே அடுத்தடுத்த இடங்களில் களமிறங்குவர்.
ஆஸ்திரேலிய உள்நாட்டு போட்டிகளில் சிறப்பாக விளையாடிவரும் மீடியம் பேசர் பிரெண்டன் டாகெட், காயம் காரணமாக ஓய்விலிருக்கும் ஜாஷ் ஹேசல்வுட்டுக்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மிட்செல் ஸ்டார்க், போலண்ட் உடன் டாகெட்டும் சேர்ந்து அட்டாகில் பங்காற்றுவார். இவர்களுடன் மூத்த சுழற்பந்துவீச்சாளர் நாதன் லியோன் இணைந்துள்ளார்.
2010-11 ஆண்டுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் ஆஷஸ் கோப்பையை வெல்லாத இங்கிலாந்து அணிக்கு இந்த பிளேயிங் 11 சவாலானதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
History ❤️
— Cricket Australia (@CricketAus) November 20, 2025
For the first time in Test cricket, Australia will field two Indigenous cricketers in the same side for tomorrow's #Ashes opener. pic.twitter.com/WBjRAcP2gF
ஆஸ்திரேலிய பழங்குடியினர் யார்?
ஆஸ்திரேலிய கண்டத்தில் வெள்ளையர்கள் வருகைக்கு முன் வசித்த மக்கள் அந்த நாட்டின் பூர்வ குடிகள். இவர்களில் பிரதானமாக இரண்டு பிரிவுகள் உள்ளனர். ஆஸ்திரேலியா மற்றும் டாஸ்மேனியாவின் பிரதான நிலப்பகுதியில் வாழ்ந்த பழங்குடி மக்கள், ஆஸ்திரேலியா மற்றும் பப்புவா நியூ கினியா இடையே உள்ள தீவுகளைச் சேர்ந்த டோரஸ் ஸ்ட்ரெய்ட் தீவுவாசிகள்.
ஆஸ்திரேலிய பழங்குடியினர் மற்றும் டோரஸ் ஸ்ட்ரெய்ட் தீவுவாசிகள் ஆய்வுகள் நிறுவனம் (AIATSIS) படி, இந்த சமூகங்கள் 60,000 ஆண்டுகளுக்கும் மேலான பல்வேறு மொழிகள், கலாச்சாரங்கள் மற்றும் மரபுகளைக் கொண்டுள்ளன. இவை உலகின் பழமையான தொடர்ச்சியாக 'வாழும்' கலாச்சாரங்களாகக் கருதப்படுகின்றன.
இவர்கள் 250 க்கும் மேற்பட்ட தனித்துவமான மொழி குழுக்களாக இருந்துள்ளனர். இவர்களால் ஆஸ்திரேலியா பன்முகத்தன்மை கொண்ட நிலமாக காணப்படுகிறது. ஒவ்வொரு குழுவும் தனித்துவமான பழக்கவழக்கங்கள், வரலாறுகள், நிலம் மற்றும் சமூக தொடர்புகளைக் கொண்டிருக்கின்றன. வெள்ளையர்களால் ஆதிக்கம் செலுத்தப்படும் ஆஸ்திரேலியாவில் இன்றளவும் பூர்வகுடி மக்கள் தங்கள் உரிமைகளுக்காகவும், வாய்ப்புகளுக்காகவும் போராடி வருகின்றனர்.

















