விருதுநகர்: "பிறந்த மண்ணுக்கு எதுவும் செய்யவில்லை" - 20 சென்ட் நிலத்தை சாலை அமைக...
BB Tamil 9 Day 43: ‘திவாகர் போன பிறகுதான் தெளிவா இருக்கேன்’ - பாரு அதிரடி; நாமினேஷன் சடங்கு
‘வந்தவளும் சரியில்ல.. வாய்ச்சவளும் சரியில்ல’ என்று ஒரு திரைப்படத்தின் நகைச்சுவைக் காட்சியில் புலம்புவார் ஜனகராஜ்.
அதைப் போல, பழைய போட்டியாளர்களும் சரியில்லை, புதிதாக வைல்ட் கார்டில் வந்தவர்களும் சரியில்லை என்று நாம் புலம்ப வேண்டியிருக்கிறது.
‘பினாயில் ஊத்தி வீட்டை கழுவணும்’ என்று பில்டப் கொடுத்த சாண்ட்ரா, குடும்பத்துடன் சௌக்கியமாக வாழ்கிறார். ‘சொல்ல மாட்டேன், செய்வேன்’ என்று பன்ச் டயலாக் பேசிய அமித், எதையும் சொல்லாமலும் செய்யாமலும் அமைதியான வாழ்க்கைய கழித்து வருகிறார்.
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 43
அன்பு கேங்கிற்கு எதிராக வம்பு கேங் ஒன்று உருவாகியிருக்கிறது. பாருவை கடுமையாக வெறுத்தபடி உள்ளே வந்த பிரஜின், சாண்ட்ரா எல்லாம் இப்போது அவருடன் கூட்டணி அமைத்திருக்கிறார்கள். எதிரிக்கு எதிரி நண்பன் என்கிற பாலிசி. முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும் என்பது போல க்ரூப்பிஸத்தை இன்னொரு க்ருப்பிஸத்தால்தான் உடைக்க முடியும் என்பது இவர்களின் தத்துவம் போல.
“சபரியை முதல்ல குத்தணும்” என்று சாண்ட்ரா ஆவேசமாக சொல்ல “ஆமாம். அழுது சீன் போடறான்” என்று ஒத்து ஊதினார் பாரு. இவர்களின் குத்துப்பட்டியலில் விக்ரம், கெமி, கனி என்று பெரிய வரிசையே இருக்கிறது. நள்ளிரவு தாண்டியும் இவர்களின் சதியாலோசனை ஓயவில்லை.

நாள் 43. “திவாகர் போயிட்டாருல்ல.. இப்ப பாரேன்.. பாரு வேற யார் கூடவாவது கூட்டணி தேடுவா. கூடவே வெச்சு யூஸ் பண்ணுவா” என்று ஜோசியம் சொல்லிக் கொண்டிருந்தார் எஃப்ஜே. அதெல்லாம் பாரு எப்போதே பிளான் செய்து மீண்டும் கம்ருதீனுடன் இழைந்து கொண்டிருக்கிறார். அரோரா வெளியேறிவிட்டால் அவருக்கு ரூட் கிளியர் ஆகிவிடும்.
“இனிமே அது நடக்காது. கூட இருந்த திவாகரையே அனுப்பி வெச்சிட்டால்ல. மக்கள் உஷாரா இருப்பாங்க” என்று மறுத்துக் கொண்டிருந்தார் விக்ரம்.
‘திவாகர் போன பிறகுதான் தெளிவா இருக்கேன்’ - பாரு அதிரடி
அந்தப் பக்கம் பாரு அரோராவிடம் பேசிக் கொண்டிருந்தார். “திவாகர் போன பிறகுதான் எனக்கு தெளிவா இருக்கு. (பார்றா).. அந்த அளவுக்கு அண்ணணோட ஆளுமை சிந்தனைல நான் மூழ்கிட்டேன். ‘திவாகரைஸ்ட்’ ஆயிட்டேன்.. இனிமே பாரு. என்னோட ஆட்டம்தான்” என்று உற்சாகமாக சொல்லிக் கொண்டிருந்தார் பாரு. வெளியில் இருந்து திவாகர் இதைப் பார்க்கும்போது நொந்தே போயிருப்பார். (‘அடிப்பாதகத்தி.. நான்தான் உன் கிட்ட மாட்டிட்டிருந்தேன். தனியா ஆடியிருந்தா கூட உள்ளே இருந்திருப்பேன்’)
பாருவின் கருத்தை அரோராவும் ஆமோதித்து “கரெக்ட். துஷார் இருந்த வரைக்கும் நானும் அப்படித்தான் இருந்தேன். சுத்தி நடந்த கேமை கவனிக்கவேயில்ல. இப்பத்தான் தெளிவா இருக்கு”. (அதாவது இவர்கள் செய்கிற தவறுக்கு கூட காரணம் ஆண்கள்தானாம்.. இந்தப் பொம்பளைங்களே... என வெளியேறிய இருவரும் புலம்பக்கூடும்!)

இன்றைக்கு பிக் பாஸ் குஜாலான மூடில் இருந்தார் போலிருக்கிறது. சகலரையும் கலாய்த்துக் கொண்டிருந்தார். ‘இவர்கள்தான் காமெடி செய்யவில்லை. நாமாவது செய்வோம்’ என்கிற முடிவுக்கு வந்துவிட்டார் போல. மற்றவர்கள் பாட்டு பாடிக் கொண்டிருக்க, கனியும் இணைந்து சில வரிகள் பாட “கனி.. டாஸ்க் லெட்டரை ஏன் இப்ப படிச்சீங்க?” என்று பங்கம் செய்தார் பிக் பாஸ். ‘பிக் பாஸ்..’ என்று வெட்கத்துடன் கனி சிணுங்க, மற்றவர்களும் சிரித்து ரகளையைக் கூட்டினார்கள். (சண்டைக்காட்சிகளையே அதிகம் காட்டாமல் இது போன்ற காமெடிகளையும் காட்டலாம்!)
சபையைக் கூட்டிய பிக் பாஸ் “ஏழு வாரமாயிடுச்சு.. வழக்கம் போல நல்லா திட்டு வாங்கினீங்க போல. இந்த வாரமாவது என் மானத்தைக் காப்பாத்துங்க” என்று கதறாத குறையாக வேண்டினார். வாயைத் திறந்து பேச ஆரம்பித்திருக்கும் அரோராவிற்கு பாராட்டு கிடைத்தது. “நீங்க என் கூட தனியா பேசி மோட்டிவேட் செஞ்சதுதான் காரணம்” என்று அரோரா சிணுங்கிக் கொண்டே சொல்ல “பப்ளி்க்.. பப்ளிக்” என்று பிக் பாஸூம் ஜாலியாக ரகசியம் பேசினார்.
ஜாலியாக நடந்து முடிந்த நாமினேஷன் சடங்கு
இந்த முறை நாமினேஷன் பிராசஸை வித்தியாசமான முறையில் செய்தார் பிக் பாஸ். அவர் அழைக்கும்போது, யார் எங்கு இருக்கிறார்களோ, அந்த நிலையிலேயே நாமினேட் பெயர்களை சொல்ல வேண்டும். பிக் பாஸ் முதலில் ‘ப்ரீஸ்’ என்று சொல்ல ‘அய்.. ஃபேமிலி டாஸ்க்’ என்று மக்கள் சந்தோஷப்பட்டார்கள்.
ஓப்பன் நாமினேஷன் என்பதால், எல்லோருமே எவிக்ஷன் பிராசஸில் வருவதுபோல் திட்டமிட்டார்கள். குறிப்பாக யார் சொல்கிறாரோ, அங்கேயே சாப்பாட்டு தட்டை தூக்கிக் கொண்டு ஓடிப் போய் பெயர்களை அறிவதில் பாரு அதிக ஆர்வம் காட்டினார். “அமித்திற்கு ரெண்டு ஓட்டு வந்துடுச்சு. அடுத்த ஆளை டார்கெட் பண்ணலாம்” என்று சாண்ட்ராவிடம் ரகசியம் பேசினார்.

“க்ருப்பிஸத்திற்கு எதிரா வோட்டு போடணும்ன்னு சொல்றீங்க. ஆனா அதையே நீங்க க்ரூப்பாத்தான் பண்றீங்க” என்று சுபிக்ஷா பாருவை சரியாக மடக்கியபோது “என்ன பண்றது..அப்படித்தான் செஞ்சாகணும்” என்று பாரு டீம் சமாளித்தது.
இந்த நாமினேஷன் பிராசஸில் பரவலாகப் பெயர்கள் வந்து விழுந்தாலும் பிரஜின் - சாண்ட்ரா ஜோடிக்கு கணிசமான வாக்குகள் தொடர்ந்து விழுந்தன. ‘கணவன் மனைவியாக இருந்தாலும் தனித்தனியாகத்தான் விளையாடுவோம்’ என்று சொல்லி அவர்கள் உள்ளே வந்தது நடக்கவேயில்லை. குடும்பமாகத்தான் இருக்கிறார்கள். ஒருவருக்கொருவர் ஆதரவாகச் செயல்படுகிறார்கள்’ என்று பல போட்டியாளர்கள் சொன்னது உண்மை.
‘பிரஜின் - சாண்ட்ரா ஃபேமிலியாவே வாழறாங்க’
“நாங்கள்லாம் இங்க குடும்பத்தை விட்டு வந்திருக்கோம். ஆனா இந்த ஜோடிக்கு அதுவே சூப்பர் பவரா இருக்கு. ஒருத்தருக்கொருத்தர் எமோஷனல் சப்போர்ட் பண்ணிக்கறாங்க.. ரொம்ப ஈஸியா அது கிடைக்குது. இது மத்த போட்டியாளர்களுக்கு செய்யப்படுகிற அநீதி. இதை உடைச்சே ஆகணும்” என்று நாமினேட் செய்யும் போது ஆவேசப்பட்டார் விக்ரம்.
“தனித்தனியா இவங்க விளையாடறதில்லை. நாமினேஷன் ஃப்ரீ பாஸ்ன்றது எத்தனை முக்கியமான விஷயம். ஆனா சாண்ட்ரா ஈஸியா தூக்கி கணவருக்குத் தந்துட்டாங்க. இது சரியில்லை” என்று கனியும் தனக்கான காரணத்தைச் சொல்லி விட்டு ‘ஹப்பாடா.. இப்பதான் மனசு நிம்மதியா இருக்கு’ என்று ஆசுவாசமானார்.
“நம்மளைத்தான் டார்கெட் பண்றாங்களாம்.. பயமுறுத்தறாங்களாமாம்.. போங்கடா.. டேய். நீங்க நினைச்சா எங்களை வெளியே அனுப்ப முடியாது’ என்று அப்போதும் சாண்ட்ரா - பிரஜின் ஜோடி நமட்டுச் சிரிப்புடன் இருந்தார்கள்.

யார் நாமினேட் செய்தாலும் அங்கு ஓடிச்சென்று பெயர்களை அறிய பாரு ஆர்வம் காட்டியதால் பாருவிற்கே ஜாலியாக ஒரு செக்மேட் வைத்தார் பிக் பாஸ். ‘இன்னமும் சரியாக இரண்டு நிமிடங்கள் கழித்து பாரு நாமினேட் செய்வார். இது மற்ற போட்டியாளர்களின் கவனத்திற்கு’ என்று அவர் குறும்பாக அறிவிக்க “அய்யோ.. பிக் பாஸ்.. ஏன் இப்படி பண்றீங்க?” என்று சிணுங்கினார் பாரு. திவ்யாவை ‘திவ்யூ’ என்று அழைத்து அவருக்கு ஷாக் சர்ப்ரைஸ் தந்தார் பிக் பாஸ். (திவாகர் போன இடத்தை பிக் பாஸ் ஃபில் பண்றாரு போல!).
ஆக.. இந்த வாரம் நாமினேட் ஆன நபர்கள் அமித், சுபிக்ஷா, ரம்யா, திவ்யா, பிரஜின், சபரி, கனி, கெமி, வியானா, விக்ரம், அரோரா, பாரு மற்றும் சாண்ட்ரா. பிக் பாஸ் மட்டும்தான் பாக்கி. ஏறத்தாழ அனைவருமே நாமினேஷன் லிஸ்ட்டில் இருந்தார்கள். வீட்டு தல எஃப்ஜே தவிர, வினோத் மற்றும் கம்ருதீன் எஸ்கேப் ஆனது ஆச்சரியம்.
“நான் ரம்யா பெயரைச் சொன்னதுக்கு அவ கோச்சுக்கிட்டாபோல. முகத்தை திருப்பிக்கிட்டு போறா.. எனக்கு இங்க விளையாடணும்.. ஃபைனல் போகணும். ஆனா அவளைப் பார்த்தா அப்படித் தெரியல. இந்நேரம் வீடா இருந்தா சிக்கன் சாப்பிட்டு ஜாலியா இருப்பேன்ற மாதிரி சொல்றா” என்று வியானாவிடம் புலம்பிக் கொண்டிருந்தார் சுபிக்ஷா.
“சினிமா வாய்ப்பு எனக்கு ஈஸியா கிடைச்சது’ - விஜய்சேதுபதி மகனின் நேர்மையான ஸ்டேட்மென்ட்
ஓப்பன் நாமினேஷன் என்றாலும் இந்தச் சடங்கு இந்த முறை ஜாலியாகவே நடந்தது. ‘எனக்கு ரெண்டு ஓட்டு வந்துடுச்சு.. வேஸ்ட் பண்ணாதீங்க’ என்று பாரு வெளிப்படையாக அறிவித்தார். போலவே மற்றவர்களும் தங்களின் நாமினேஷனை ஜாலியாக எடுத்துக் கொண்டது போலவே பாவனை செய்தார்கள்.
‘நடு சென்டர்’ என்கிற வெப்சீரிஸ் பிரமோஷன் தொடர்பாக சூர்யா சேதுபதியுடன் நிறைய இளைஞர்கள் உள்ளே வந்தார்கள். “ஆக்டரோட பையன்றதால எனக்கு ஈஸியா வாய்ப்பு கிடைச்சது. ஆனா இவங்கள்லாம் ரொம்ப கஷ்டப்பட்டு இந்த இடத்திற்கு வந்திருக்காங்க” என்று விஜய் சேதுபதியின் மகன் நேர்மையாக ஒப்புக் கொண்டது சிறப்பு.

பேஸ்கெட் பால் ஆட்டத்தை மையமாகக் கொண்ட இந்த இணையத் தொடருக்கான டிரைய்லர் வெளியானதும் பிக் பாஸ் வீடும் புரமோஷன் டீமும் கூடைப்பந்து ஆடினார்கள். “ஆறு மாசம் டிரையினிங் எடுத்துக்கிட்டோம்” என்று சொன்ன வெப்சீரிஸ் தோற்றுப் போனது. பிக் பாஸ் வீடு ஜெயித்தது. “இந்த சீனையெல்லாம் கட் பண்ணிடுங்க. மானம் போயிடும்” என்று ஜாலியாக கேட்டது புரமோஷன் டீம்.
ஈவ்னிங் ஆக்டிவிட்டி. ‘உங்க மனசுல யாரு’ என்கிற தலைப்பு. ‘இவரை என்னோட கடுமையான போட்டியாளரா நெனக்கறேன்.. இவரையெல்லாம் ஒரு ஆளாவே நான் கருதலை. போட்டியே கிடையாது’ என்று ஒவ்வொருவரும் அறிவிக்க வேண்டும்.
‘கம்ரூதீன் ஒரு காமெடியன்’ - கனியக்கா ஆவேசம்
“நான் காமெடி பண்ணலாம்ன்னு வந்தேன். ஆனா என்னைவிட வினோத் சூப்பரா பண்றாரு..” என்று விக்ரம் நோ்மையாகச் சொன்னது பாராட்டத்தக்கது. தனக்கான போட்டியாக வினோத்தை பார்க்கும் விக்ரம், ‘இவரெல்லாம் ஆளே கிடையாது’ என்று பாருவை தேர்ந்தெடுத்து அவரை காண்டாக்கினார்.
தன்னுடைய முறை வரும் போது விக்ரமின் பெயரைச் சொல்லி பழிவாங்கிய பாரு, தனக்கான போட்டியாளராக எஃப்ஜேவின் பெயரைச் சொன்னார். பாருவின் ஆண் வெர்ஷன் எஃப்ஜேவாம். இதைக் கேட்டு ‘அடக் கண்றாவியே’ என்பது மாதிரி முகத்தை வைத்துக்கொண்டார் எஃப்ஜே.
சாண்ட்ரா வரும்போது தன்னுடைய போட்டியாளராக திவ்யாவை அறிவித்து விட்டு ‘இவரு ஆளே கிடையாது’ என்கிற கேட்டகிரியில் கனியின் பெயரைச் சொன்னார். திவாகருடன் கனி ஜெயிலில் இருக்கும்போது சாண்ட்ராவைப் பற்றி நிறைய புறணி பேசினாராம். இதுதான் காரணம்.

‘கம்ரூதீன்லாம் எனக்கு ஒரு ஆளே கிடையாது. பொண்ணுங்களை பாதுகாக்கிற மாதிரி சீன் போடறாரு. அவரு ஹீரோ கிடையாது. காமெடியன்” என்று கம்முவை கடுமையாக தாக்கினார் கனி. பதிலுக்கு கம்முவும் கனியைத் தாக்கினார்.
இந்த டாஸ்க் முடிந்ததும், “சாண்ட்ராவையெல்லாம் நான் போட்டியாவே நெனக்கலை. ஜெயில்ல திவாகர் கிட்ட நான் உண்மையைத்தான் சொன்னேன். அது போய்ச் சேரும்ன்னு தெரியும்” என்று விக்ரமிடம் சொல்லிக் கொண்டிருந்தார் கனி.
ஆக.. வீடு மறுபடியும் இரண்டு பிரிவுகளாக இயங்கிக் கொண்டிருக்கிறது. அன்பு டீம் Vs வம்பு டீம். அதாவது கனி Vs பாரு. ஓரளவிற்காவது individual players என்று வியானா மற்றும் சுபிக்ஷாவை சொல்லலாம் என்று தோன்றுகிறது.



















