BB Tamil 9 Day 51: டிரையாங்கிள் லவ் ஸ்டோரி; ‘என்னை ஆன்ட்டின்னு கூப்பிடாத’ - பாரு...
BB Tamil 9 Day 51: டிரையாங்கிள் லவ் ஸ்டோரி; ‘என்னை ஆன்ட்டின்னு கூப்பிடாத’ - பாரு கோபம்
இந்த வாரம் ஸ்கூல் டாஸ்க். 10, +2 மாணவர்களைப்போல் நடந்துகொள்ளச் சொன்னால் எல்கேஜி மாணவர்களைப்போல் இம்சை செய்தார்கள். அதிலாவது என்டர்டெயின்மென்ட் வருமா என்று பார்த்தால் இல்லை.
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 51
வீடெங்கும் எதிரிகளைச் சம்பாதித்து வைத்திருக்கும் பாருவிற்கு, திவாகர் என்கிற அடிமை சென்ற பிறகு கம்ருதீன் என்கிற அடிமையை இழப்பதற்கு மனமில்லை. “நான் இங்க யார்கிட்ட பேசினேன். நீயி... திவாகர்... அவ்வளவுதான். அவ என்னை வெறுப்பேத்தணும்னே.. என் முன்னாடி வந்து டான்ஸ் ஆடறா.. என் கண் முன்னாடி இந்தக் கண்றாவியையெல்லாம் பார்த்தா எனக்கு ஹர்ட் ஆகுது. புரிஞ்சுக்கோடா” என்று கம்முவிடம் அனத்திக் கொண்டிருந்தார் பாரு.

‘தென்னை மரத்துல ஒரு குத்து, பனை மரத்துல ஒரு குத்து’ என்கிற காமெடியைப் போல பாருவிடம் தலையாட்டினாலும் அரோராவிடமும் சென்று இளிப்பதற்கு கம்மு வெட்கப்படவேயில்லை. “ரேஷன் கார்டு வாங்கவா இங்க வந்தே?” என்று கம்முவின் நண்பன் இடித்துரைத்து விட்டுச் சென்றிருந்தாலும் கம்முவிற்கு அதெல்லாம் ஒரு மேட்டரே இல்லை. ‘கண்ணா.. ரெண்டு லட்டு தின்ன ஆசையா?’ மோடிலேயே ரொமான்ஸ் பயணத்தைத் தொடர்கிறார்.
‘இந்த அரோரா எப்ப போய் தொலைவாளோ?’ என்று பாரு மனதிற்குள் குமைந்து கொண்டிருந்தாலும், அவரோடு இணைந்து ‘மாம்பழமாம்.. மாம்பழமாம்’ பாடலுக்கு டான்ஸ் ஆடவும் தயங்கவில்லை. ‘திவ்யான்ற காளையை பாராட்டியே அடக்கிட்டேன்’ என்று கம்முவிடம் பாரு பெருமையடித்துக் கொண்டிருந்தார். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆயுதம். விசே சொன்னதைப்போலவே பாரு பல கதாபாத்திரங்களை அநாயசமாக மாற்றி மாற்றி ஹேண்டில் செய்கிறார். கபடவேஷதாரி.
‘கம்மு - அம்மு - பாரு - இது ஒரு டிரையாங்கிள் லவ் ஸ்டோரி சார்’
“நீ வேணா அவ கிட்ட போ.. என் கிட்ட வராத” என்று அரோரா துரத்தி விட்டாலும் அங்கும் கையைப் பிடித்துக்கொண்டு கெஞ்சி விட்டு, இந்தப் பக்கம் வந்து “பாரு.. உன் கிட்ட பேசாம இருக்க முடியல. நண்பன் சொன்ன மாதிரி ரேஷன் கார்டு வாங்கறதுலதான் முடியும்போல இருக்கு. என்ன செய்யறதுன்னு புரியல” என்று கம்மு புலம்ப “எனக்கு ஃபீலிங் இருக்கு. உனக்கு அரோரா பிரெண்டாவே இருக்கட்டும். ஆனா என் கண் முன்னாடி அவகிட்ட பழகாத” என்று பாருவும் வலையை இறுக்கமாக பின்னிக்கொண்டிருந்தார்.
ஸ்கூல் டாஸ்க். வீடு ரெசிடென்சியல் பள்ளியாக மாறுமாம். மாணவர் பாத்திரத்திற்கு வியானா, சுபிக்ஷா, அரோரா போன்றவர்களைத் தேர்வு செய்ததுகூட ஓகே. ஆனால் விக்ரம், வினோத், சபரி, கம்மு, திவ்யா, சாண்ட்ராவையெல்லாம் ஸ்கூல் யூனிபார்மில் பார்ப்பது டூ மச்.

பிரஜினுக்கு பிரின்சிபல் வேடம். கூடவே ‘மாரல் சயின்ஸ் டீச்சர்’ என்று அறிவிக்கப்பட்டதும் வீடே ஒன்று கூடிச் சிரித்தது. மாரலே இல்லாதவருக்கு அந்தப் பாத்திரத்தைத் தந்து பிக் பாஸ் நையாண்டி செய்தார். கனி தமிழ் டீச்சர். அமித்திற்கு வெறுமனே டீச்சர் என்று சொல்லி விட்டார்கள். எந்த கேரக்டராக இருந்தாலும் அவர் பாட்டுக்கு வெறுமனே உலவப் போகிறார் என்பதால் போல.
எஃப்ஜே உதவி வார்டன். பாரு வார்டன். தங்களை மாணவர் பாத்திரத்தில் அறிவித்த போது ஒவ்வொருவரும் துள்ளிக் குதித்தார்கள். பாருவிற்கும் அந்த ஆசை இருந்திருக்கும் போல. ஸ்கூல் யூனிபார்மில் கம்முவுடன் லூட்டி அடிக்கலாம் என்று கனவு கண்டிருப்பார். ஆனால் குறும்புக்கார பிக் பாஸ், சத்துணவு பணியாளர் போல ஒரு சேலையைக் கட்டி விட்டார். மீசை, தாடியை மழித்து விட்டு வந்த கம்முவைப் பார்த்து ‘அய்யோ. என் கண்ணே பட்டிரும் போல. எனக்கு வெட்கம், வெட்கமாக வருதே’ என்கிற மாதிரி நெளிந்து கொண்டிருந்தார் பாரு.
“ஒரே சமயத்துல ரெண்டு வண்டியை ஓட்ட முடியாது. ஆக்சிடெண்ட் ஆயிடும்’ என்று பாருவை கலாய்த்துக் கொண்டிருந்தார் சபரி. விக்ரம் தனக்கென்று ஒரு மேனரிசத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார் போல. ஹிட்லர் கம் சார்லி சாப்ளின். திடீரென்று முறைத்து திடீரென்று சிரிக்கும் கேரக்டர். ஆனால் சிரிப்புதான் வரவில்லை.
எல்கேஜி பிள்ளைகளாக இம்சை செய்த ஹவுஸ்மேட்ஸ்
எல்கேஜி மாணவர்கள் போல் இவர்கள் சேட்டை செய்வதைப் பார்த்த பிக் பாஸ் “நீங்க எல்லோரும் 10, +2 மாணவர்கள். அதுக்கேத்த மாதிரி பிஹேவ் பண்ணுங்க” என்று வழிகாட்டியும் ஒருவரும் மாறவில்லை.
கம்முவும் அரோவும் வகுப்பறையிலேயே ரொமான்ஸ் செய்து கொண்டிருந்தார்கள். ‘திருவள்ளுவர் யார்?’ என்று தமிழ் பாடத்தை கனி டீச்சர் நடத்த “ஆவடி தாண்டிப் போனா வரும். அதான் திருவள்ளூர்” என்று கோபம் வருவது போல காமெடி செய்தார் கம்மு.

‘புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல், அறங்கூற்றும் ஆக்கத் தரும்.’ என்கிற குறளை பாடமாக நடத்தினார் கனி. பிறர் இல்லாதபோது அவரைப் புறங்கூறிப் பொய்யாக நடந்து உயிர் வாழ்தலைவிட, இறந்து போதல், அறநூல்கள் சொல்லும் ஆக்கத்தைத் தரும் என்பது பொருள். இது பிக் பாஸ் வீட்டிற்கே கச்சிதமாக பொருந்தும் என்பதால் சிலபஸில் வைத்திருக்கிறார்கள்போல.
“அப்படின்னா அரோரா செத்துடுவாளா?” என்று வினோத் கிண்டலடிக்க “ஆமாம்” என்று குறும்பாக கனி சொல்ல “அப்பன்னா நாளைக்கு ஸ்கூல் லீவு. தமிழ் டீச்சரும் செத்துடுவாங்க” என்று அரோரா கவுன்ட்டர் கொடுக்க வகுப்பு மங்கலகரமாக நடந்தது.
க்யூட்டாக செய்கிறேன் என்று சோபாவின் கீழ் ஒளிந்து அலப்பறை செய்தார் சாண்ட்ரா. பட்டையைப் போட்டுக் கொண்டு தலைசீவி அமர்ந்திருந்த பிரின்சிபல் பிரஜின் இருந்த இடத்தை விட்டு நகராமல் அதே முறைப்பிலேயே அமர்ந்திருந்தார்.
‘என்னை ஆன்ட்டின்னு கூப்பிடாத’ - பாரு கோபம்
சமையல் ஏரியாவில் எதையோ கிண்டிக் கொண்டிருந்த பாருவை ‘வசந்தி ஆன்ட்டி’ என்று அழைத்தார் சாண்ட்ரா. வசந்தி என்பது பாருவின் கேரக்டர் பெயராம். பேசாமல் ‘வதந்தி ஆன்ட்டி’ என்று வைத்திருக்கலாம். “என்னை ஆன்ட்டின்னு கூப்பிடாத. எனக்கு கெட்ட கோபம் வந்துடும். வெளியவும் என்னை அத வெச்சுதான் கிண்டல் பண்ணாங்க” என்று பாரு கோபிக்க “ஸாரி மேம்’ என்று பம்மி சென்றார் சாண்ட்ரா. ஒருவேளை மாணவர் கேரக்டரில் இல்லாமல் இருந்திருந்தால் ‘ஆன்ட்டியை அப்படித்தானே கூப்பிட முடியும்?” என்று கேட்டிருப்பாரோ என்னமோ.
நடிகை கீர்த்தி சுரேஷ் என்ட்ரி. ‘ரிவால்வர் ரீட்டா’ என்கிற திரைப்படத்திற்கான புரொமோஷன். ‘உங்களுக்கு வெளில நிறைய ஃபேன்ஸ் இருக்காங்க. ரொம்ப நல்லா பண்றீங்க’ என்று அள்ளிவிட்டார் கீர்த்தி. படத்தையும் கீர்த்தியையும் பாராட்டி இன்ஸ்டன்ட் கானா எழுதிப் பாடினார் வினோத். நல்ல குரல் வளம். கானா என்கிற குறுகிய வட்டத்தில் அவரை அடைக்காமல் மெலடி பாடல்களைப் பாடுவதற்கான வாய்ப்பையும் அளிக்கலாம். வினோத்தின் பாடலை மிகவும் ரசித்துக் கேட்டார் கீர்த்தி.

கிச்சன் ஏரியாவில் பாரு குத்துமதிப்பாக எதையோ சமைத்துக் கொண்டிருந்தார். சமையல் தெரியாவிட்டாலும் கனியைத் தாண்டி விட வேண்டும் என்கிற வெறி மட்டுமே இருந்தது. விளைவு மக்கள்தான் அவஸ்தைப் பட வேண்டியிருந்தது. “கோவமான அக்கா.. கோவக்கா பொறியல் செஞ்சிருக்காங்க” என்று ரைமிங்கில் கிண்டலடித்த விக்ரம், அதை எடுத்து சுவைத்துப் பார்த்து விட்டு ‘உவ்வேக்.. கோவக்கா மேல மிளகாய்பொடியை தடவி வெச்சிருக்காங்க’ என்று முகம் சுளித்தார்.
அமித் பிறந்த நாள். வீட்டிலிருந்து கேக் வந்தது. கூடவே செய்தியும். ‘பொங்கல் அப்பதான் வீட்டுக்கு வரணும். அதுக்கு முன்னாடி வந்துடாத’ என்கிற எச்சரிக்கை தங்கமணியிடமிருந்து.



















