செய்திகள் :

BB Tamil 9 Day 74: `வலை வீசி பிடிச்சிட்டியே.. திருட்டுப்பயலே' தொடரும் கம்மு - பாரு அலப்பறை

post image

டான்ஸ் டாஸ்க்கில் ‘யம்மாடி ஆத்தாடி’ அணி வெற்றி பெற்றிருக்கிறது. அந்த அணியில் எவருடைய குடும்பத்தினர் 24 மணி நேரத்திற்கு வீட்டில் தங்க வாய்ப்பு கிடைக்கும்? அடம் பிடித்து பாரு வாங்கிவிடுவாரா?

‘என் குழந்தைகளைப் பத்தி பாடாதீங்க’ என்று கனி குறித்து சான்ட்ரா சொன்ன புகார் அபாண்டமானது. சான்ட்ராவின் மனச்சிக்கல் குறித்து அனுதாபம்தான் தோன்றுகிறது.

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 74

‘தக்க தைய்யா.. தைய்யா..’ பாடலுடன் பொழுது விடிந்தது. மற்ற நேரங்களில் அசோகவனத்து சீதை மாதிரி அமர்ந்திருக்கும் சான்ட்ரா, வேக் அப் பாடலுக்கு மட்டும் ‘மன்மத ராசா’ பாடலின் ஸ்பீடில் புன்னகையுடன் ஆடுகிறார்.

எபிசோடை அழுகையுடன் ஆரம்பிப்பது சான்ட்ராவின் வழக்கம். ஆனால் இன்று அது பாருவின் டர்ன். காமிரா மறைவில் எ்னன செய்து தொலைத்தாரோ, தெரியவில்லை. “அய்யோ.. மம்மி வருவாங்களே.. என்ன பண்ணப் போறேன்.. பயமாயிருக்கு” என்றெல்லாம் பாரு கண் கசிய “நான் இருக்கேன் பேபி. என்ன நடந்தாலும்கூட நிக்கறேன். பிராமிஸ்” என்று வாக்கு கொடுத்துக்கொண்டிருந்தார் கம்மு.

BB Tamil 9 Day 74

இத்தனை காமிராக்களுக்கு முன்னால் ரொமான்ஸ் செய்தால் அது என்ன மாதிரியான எதிர்வினைகளை ஏற்படுத்தும் என்பது மீடியாவில் ஊறிய பாருவிற்கு தெரியாதா? அதுதானே அவரது சர்வைவல் ஸ்ட்ராட்டஜிகளுள் ஒன்றாக இருந்தது? பிறகு ஏன் இத்தனை அழுகை?

‘இதையெல்லாம் உங்க அம்மா பார்த்தா என்ன நினைப்பாங்க?’ என்று ஆரம்பத்திலேயே அட்வைஸ் செய்தார் திவ்யா. ஆனால் அவர் மீதே ‘நீ எப்படி எங்க வீட்டைப் பத்தி பேசலாம்?” என்று பாய்ந்தவரும் இதே பாருதான். இப்போது அதைக் குறித்து அச்சப்பட்டு அழுகிறார். விதி வலியது.

பாரு - கம்முவின் உணர்ச்சிகரமான டிராமா ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, நாய் துரத்துவது மாதிரி ஜாக்கிங் செய்து கொண்டிருந்தார் அமித்.

டான்ஸ் டாஸ்க்கில் கலக்கிய ‘யம்மாடி ஆத்தாடி அணி’

பாருவிடம் அனத்திக் கொண்டிருந்த சான்ட்ரா, இப்போதெல்லாம் அமித்திடம்தான் புலம்புகிறார். அமித்தும் அதற்கேற்ற சுமைதாங்கியாக மாறி வருகிறார். “நான் தனியா இருக்கேன்.. அழறேன்னு அக்கறை இருக்கற மாதிரி சொல்றாங்கள்ல. வொர்ஸ்ட் /ஃபெர்பார்மர் வரட்டும் பாருங்க.. என்னைத்தான் குத்துவாங்க. அப்ப அவங்க சொல்ற காரணங்கள்ல முகமூடி கலைஞ்சுடும்” என்று புலம்பிக் கொண்டிருந்தார் சான்ட்ரா. ‘அவ ஒரு சிடுமூஞ்சி’ என்று பாருவே சான்ட்ரா பற்றி சொல்லி விட்டாராம்.

டான்ஸ் மாரத்தான் மீண்டும் ஆரம்பித்தது. கம்முவும் பாருவும் டான்ஸ் ஆட உள்ளே சென்றார்கள். (நல்ல காம்பினேஷன்).

BB Tamil 9 Day 74
BB Tamil 9 Day 74

கனிக்கு லேட்டஸ்ட்டான பாடல்கள் கூட நன்றாகத் தெரிந்திருக்கிறது. முதலில் ஒலித்த மக்காமிஷியை உடனே கண்டுபிடித்து விட்டார்.

கம்முவின் முன்னால் பாரு நடனமாடிக் கொண்டிருந்த அற்புதமான காட்சியை, சமீபத்தில் ரீ ரிலீஸ் ஆன ‘படையப்பா’ நீலாம்பரியுடன் இணைத்து சமூகவலைதளங்களில் மக்கள் டிரோல் செய்து கொண்டிருக்கிறார்கள். இதையே பிரதிபலிக்கும் விதமாக பிக் பாஸூம் அதே பாடலை ஒலிக்க விட்டார். நடன அசைவுகளை வைத்தே ‘மின்சார பூவே’ என்று உடனே கண்டுபிடித்து விட்டார் ஆதிரை.

அடிக்கடி கட்டிப்பிடித்து வெற்றியைக் கொண்டாடிய பாரு - கம்மு

16 வயதினிலே படத்திலிருந்து ‘ஆட்டுக்குட்டி முட்டையிட்டு’ பாடல் ஒலித்தது. இதை மற்றவர்களுக்கு உணர்த்துவது சிரமம். ஆடு மாதிரி முட்டிக் காண்பித்தது கம்முவின் புத்திசாலித்தனம். கனி இதை உடனே கண்டுபிடித்தார். அதைப் போலவே ‘கிளிமாஞ்சாரோ’ பாடலுக்கு ரஜினி பேல கம்மு தலையைக் கோத ஆதிரை கண்டுபிடித்தார். தனியார் ஆல்பம் என்றால் கூட கனி கண்டுபிடித்து விடுகிறார்.

உடனுக்குடன் பாடல்கள் கண்டுபிடிக்கப்பட்டதில் கம்மு - பாரு ஜோடிக்கு அதிக குஷி. சும்மாவே கட்டிப் பிடித்துக் கொள்வார்கள். இப்போது போட்டியில் வெற்றி பெற்றதால் ‘அதிகாரபூர்வ’ கட்டிப்பிடித்தல் சம்பவம் அடிக்கடி நடந்தது. சபரி கூட இதைப் பற்றி கிண்டலடித்து விட்டார். “பாரு.. நீ உன் சந்தோஷத்தை மத்தவங்க கூட பகிர்ந்துக்க மாட்டியா?” (நக்கல்யா உனக்கு!)

BB Tamil 9 Day 74
BB Tamil 9 Day 74

பாரு இருக்கும் அணி குறுகிய நேரத்தில் கண்டுபிடித்து விட்டதால் விக்ரமின் மூளைக்குள் நண்டு பிறாண்டியது. “அடுத்து வர்ற டீம் கிட்ட, பாட்டு பத்தி சொல்லி உதவலாம். அப்பத்தான் பாருவை தோற்கடிக்க முடியும். இல்லைன்னா அப்படியே விட்டுடலாம்” என்று ஐடியா தந்து கொண்டிருந்தார்.

கடைசியாக ஆடவேண்டிய கரகாட்டக் கும்பல் அணியினர் தீவிரமாக ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தார்கள். சான்ட்ரா ஒரு பாடலை ரகசியமாக சொல்ல, அதற்கு அமித் ஆடிக் கொண்டிருந்தார். “என்ன பாட்டு வரின்னு சைகைல சொல்லுங்க..அதுதான் முக்கியம்” என்று வினோத் சொன்னது சரியானது. ஆனால் அமித்தோ “டான்ஸ்.. ஆடணும்ல அதான் முக்கியம்” என்று பிடிவாதம் பிடித்தார்.

அடுத்து ஒரு App-ன் விளம்பர ஷோ. ‘எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனை கால்?’ என்கிற மாதிரி கேள்விகளால் இம்சித்தார்கள்.

டவுன் ஆனதால் அழுத சுபிக்ஷா - அட்வைஸ் செய்த விக்ரமும் அழுகை

‘அட்வைஸ் செய்கிறேன்’ பேர்வழி என்று சுபிக்ஷாவை மனதளவில் டவுன் செய்து விட்டார் விக்ரம். “ஓப்பன் நாமினேஷன்ல ரெண்டு முறையும் எஃப்ஜே என் பெயரைத்தான் சொன்னான்” என்று அனத்திக்கொண்டிருந்த சுபிக்ஷாவிடம் “அரோ.. உன்னைவிட உஷாரா இருக்கா.. எப்படியோ முந்திக்கறா.. முழிச்சிக்கோ” என்று நல்லெண்ணத்தில்தான் விக்ரம் சொன்னார்.

ஆனால் டான்ஸ் டாஸ்க்கில் பாடலைக் கண்டுபிடிக்க முடியாமல் சொதப்பியதால் சோர்ந்திருந்த சுபிக்ஷாவிற்கு அந்த ஊக்க வார்த்தைகள் எதிர்மறையாக அமைந்து விட்டன. “ச்சே.. டான்ஸ் ஆட நான் போயிருக்கணும்… மக்கள் கிட்ட நல்ல பெயர் வாங்கியிருப்பேன்..” என்று அழுது புலம்ப, “அப்படியெல்லாம்..இல்ல. இன்னும் நிறைய சந்தர்ப்பம் இருக்கு.” என்று திரைமறைவில் விக்ரம் ஆறுதல் சொல்ல “ரெண்டு பேரும் வெளில வந்து பேசுங்க” என்று பிக் பாஸ் எச்சரித்தார். இது வழக்கமாக பாரு - கம்முவிற்கு வழங்கப்படும் எச்சரிக்கை.

BB Tamil 9 Day 74

பிக் பாஸின் அறிவிப்பைக் கேட்டு வினோத் பதறி ஓடி வர “சுபிக்ஷா அழுதிட்டு இருந்தா.. அதான் ஆறுதல் சொன்னேன். மைக் போட்டுத்தான் பேசினோம்” என்று விக்ரம் பதட்டத்தைத் தணித்தார். ‘ஆலோசனை சொல்லப் போய் இப்படி ஆகி விட்டதே’ என்று விக்ரமும் கண் கலங்க ஆரம்பித்து விட்டார்.

சுபிக்ஷா அழும் போது ஒரு உபதேசம் வந்தது. “அழாத.. அழறது சொல்யூசன் கிடையாது. வாயைத் திறந்து பேசு” - இந்த உபதேசத்தை சொன்னது யார் என்று தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள். ஆம்.. சான்ட்ரா சொன்னது. இதை அவர் கண்ணாடி முன்னால் சொல்லிக் கொண்டால் பொருத்தமாக இருக்கும்.

மம்மியின் வருகையை நினைத்து பம்மி கலங்கும் பாரு

சுபிக்ஷாவை கன்ஃபெஷன் ரூமிற்கு அழைத்த பிக் பாஸ் ‘நடுக்கடலுல கப்பலை இறங்கி தள்ள முடியுமா?’ என்றெல்லாம் பாட்டுப்பாடி ஆறுதல் சொல்லி சிரிக்க வைத்து அனுப்பினார். பிறகு தன் செல்லப் பிள்ளையான விக்ரமும் கண்கலங்குவதைப் பார்த்து “என்ன விக்ரம்.. சுபிக்ஷா அழவேயில்லையாமே.. நீங்கதான் சீன் போட்டீங்களாம்” என்று கலாய்த்து சிரிக்க வைத்தார்.

அழுவாச்சி முடிந்ததும் விக்ரமும் சுபிக்ஷாவும் ஒருவரையொருவர் சென்ட்டியாக கட்டிக் கொள்ள “பாச மலர்களே.. டாஸ்க் ஆரம்பிக்கணும்.. வாங்க” என்று கிண்டலடித்தார் பிக் பாஸ்.

BB Tamil 9 Day 74

இன்னொரு பக்கம் பாரு - கம்முவின் ரொமான்ஸ் நடந்து கொண்டிருந்தது. “நான் பாட்டுக்கு ரூத்லெஸா ஆடலாம்ன்னு இந்த கேமிற்கு வந்தேன். அப்படிப்பட்ட என்னை வலை வீசி பிடிச்சிட்டியே.. திருட்டுப்பயலே’ என்று பாரு கொஞ்சலுடன் சிணுங்க “நீ என்ன மீனா.. வலை வீசி பிடிக்க?” என்று கம்முவும் பதிலுக்கு வழிந்து கொண்டிருந்தார். (என்ன கொடுமை சரவணன்).

பல்லைக் கடித்த சான்ட்ரா - போங்காட்டம் ஆடிய வினோத்

டான்ஸ் மாரத்தான் தொடர்ந்தது. திவ்யாவும் அமித்தும் டான்ஸ் ஆடச் செல்ல, வினோத்தும் சான்ட்ராவும் பாடல்களைக் கண்டுபிடிக்க வேண்டும். கோன் பனேகா க்ரோர்பதி நிகழ்ச்சியில் பதில் சொல்வது போல நகத்தைக் கடித்துக் கொண்டு சீரியஸான முகத்துடன் இருந்தார் சான்ட்ரா. அவ்வப்போது வினோத்தையும் ‘சீரியஸா ஆடுங்க’ என்று கடித்துக் கொண்டிருந்தார்.

முதல் பாடல் ‘கில்லி’ படத்திலிருந்து ‘கொக்கரக்கோ’. அதன் நடன அசைவுகள் பிரபலம் என்பதால் உடனே கண்டுபிடித்துவிட்டார்கள். இரண்டாவது பாடல் ‘பாட்சா’ படத்திலிருந்து ‘நீ நடந்தால் நடையழகு’. ரஜினி மாதிரி அமித் தலையைக் கோதியதால் ‘ரஜினி படம்’ என்று கண்டுபிடித்து விட்டார் சான்ட்ரா. பாட்சா படத்தின் மற்ற பாடல்களை சொல்லி பிறகு சரியாக வந்து விட்டார்கள்.

BB Tamil 9 Day 74

மூன்றாவது பாடல்தான் சோதனையாக அமைந்தது. ‘கன்னித்தீவு பொண்ணா.. கட்டெறும்பு கண்ணா’.. இதற்கு எறும்பு கடிப்பது போல் எல்லாம் செய்து காட்டினார் அமித்.

சான்ட்ரா நகத்தைக் கடித்துக் கொண்டிருக்க, மற்ற அணியினர் சுற்றி நின்று எல்லாம் ‘பாபா பிளாக் ஷீப்” ரைம்ஸ் முதல் பல பாடல்களைப் பாடி வெறுப்பேற்றினார்கள். (கொஞ்சம் ஓவர்தான்!)

பாடல் வரியை கண்டுபிடிக்க முடியாமல் வினோத் தத்தளித்தார். நமக்கு கூட இது நிகழ்ந்திருக்கும். ஏதோவொரு திரையிசைப்பாடலின் சரணம் ஞாபகத்திற்கு வந்து விடும். ஆனால் பல்லவி நினைவிற்கு வராது. அல்லது வரிகள் நினைவிற்கு வராது. பல்லிடுக்கில் மாட்டிய பல்லி போல அது குறுகுறுப்பாகவே இருக்கும். உடனே நண்பர்களிடம் அல்லது இணையத்தில் தேடி அறிந்த பிறகுதான் ஆசுவாசமாக இருக்கும். அதிலும் பாடல்கள் அதிகம் தெரிந்த வினோத்திற்கு இது சவாலாக இருக்கவே பொறுக்க மாட்டாமல் எழுந்து சென்று பாத்ரூமில் தனியாக யோசித்தார். அங்கு வந்தும் மக்கள் வெறுப்பேற்றினார்கள்.

ஒரு கட்டத்தில் தவிப்பு தாங்காமல் ஆக்டிவிட்டி ஏரியா கதவு பக்கம் ஒட்டு கேட்க போய் விட்டார் வினோத். மற்றவர்கள் இதை ஆட்சேபித்தார்கள். “தப்புன்னா பிக் பாஸ் சொல்வாரு.. போங்கப்பா” என்று லாஜிக் இல்லாமல் பேசினார் வினோத். இது விஜய் சேதுபதி அடிக்கடி சொன்ன ஆலோசனை.

BB Tamil 9 Day 74

“டாஸ்க்கை சுவாரசியமா நகர்த்திட்டுப் போங்க. ஏதாவது தப்புன்னா பிக் பாஸ் சொல்லப் போறாரு.. என்ன ஆயிடப் போகுது” என்று விசே சொன்னதை வினோத் ஃபாலோ செய்கிறார் போல. ஆனால் இது பிட் அடித்து தேர்வில் பாஸ் செய்ய முயல்வதைப் போன்ற தவறு.

‘கன்னித்தீவு பொண்ணா’விற்கு நீண்ட நேரம் ஆடியதால் ‘யோவ் பெரிசு. சீக்கிரம் கண்டுபிடிச்சு தொலைய்யா” என்று காமிராவைப் பார்த்து வினோத்தை ஜாலியாக திட்டினார் திவ்யா. மறுபடியும் பாத்ரூம் பக்கம் சென்று யோசித்து பாய்ந்து வந்து பதிலைச் சொன்னார் வினோத். (பல பேருக்கு பாத்ரூம் சென்றால்தான் அரிய யோசனைகள் வரும்!)

கனி மீது அபாண்டமாக பழி போட்ட சான்ட்ரா

அடுத்த பாடல் ‘அடிக்கிற கை அணைக்குமா?’ அமித்தும் திவ்யாவும் அடித்து அணைப்பதை பல முறை செய்து காட்டியும் கண்டுபிடிக்க முடியவில்லை. ‘அடி’ன்றதுல ஏதாவது பாட்டு இருக்கா?” என்று சான்ட்ரா க்ளூ கொடுத்தும் வினோத்திற்கு தலை சுற்றியதுதான் மிச்சம். இந்தப் பாடலை இறுதி வரை இவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.

அடுத்த பாடல் - கவிதையே தெரியுமா?.. ஒரிஜினல் பாடலில் படுத்திருக்கும் சதா மீது ஊஞ்சலில் தொங்குவார் ஜெயம் ரவி. அமித் படுத்திருக்க, இதை வில்லங்கமான போஸில் செய்துகாட்டினார் திவ்யா. சான்ட்ரா உடனே கண்டுபிடித்து விட்டார்.

ஒருவழியாக இந்த டாஸ்க் முடிந்த நிலையில், ஆவேசமாக எழுந்த சான்ட்ரா, கனி மீது அபாண்டமாக ஒரு பழியைப் போட்டார். “என் குழந்தைகளைப் பத்தி பாட்டு பாடாதீங்க” என்று கோபத்துடன் சொல்ல, யாருக்கும் எதுவும் புரியவில்லை. கனி அதிர்ச்சியுடன் “என்ன பாட்டு பாடினேன்.. என் குழந்தைங்க மேல சத்தியமா சொல்றேன். அப்படி எதுவும் பாடலை. அப்படிப் பண்ணியிருந்தா என்னையே நான் துப்பிப்பேன். இதெல்லாம் சீப்பான பிஹேவியர்” என்று பதிலுக்கு கோபப்பட்டார் கனி.

“என்ன பாட்டு?” என்று விசாரித்தால் சான்ட்ராவிற்கு அதெல்லாம் தெரியாதாம். ஆனால் சான்ட்ராவின் குழந்தைகளைப் பற்றி கனி பாடினாராம். யாராவது இப்படிச் செய்வார்களா? அதிலும் குழந்தைகள் பெற்ற தாய் செய்வாரா? இப்படிச் சம்பந்தமில்லாம் யோசித்து குரூரமாக குற்றம் சாட்ட சான்ட்ராவால்தான் முடியும். அவரது மனநிலை அனுதாபத்துக்குரியது.

டான்ஸ் டாஸ்க்கில் ஒட்டுமொத்தமாக அதிக புள்ளிகள் பெற்று ‘யம்மாடி ஆத்தாடி’ வெற்றி பெற்றது. இந்த அணி தல போட்டிக்கு தகுதியாவதோடு, இந்த அணியில் இருந்து ஒருவரின் குடும்பத்தினர் 24 மணி நேரம் பிக் பாஸ் வீட்டில் இருப்பார்கள்?

பாரு, கம்ருதீன், கனி, ஆதிரை என்று நால்வர் இந்த அணியில் இருக்கிறார்கள்? யார் அடுத்த ‘தல’ ஆவார்.. யாருடைய குடும்பம் 24 மணி நேரம் இருக்கும் வாய்ப்பைப் பெறும்? என்பதுதான் டிவிஸ்ட்.

BB 9 : "இது உங்க வீடு இல்ல; நீங்க எப்படி ரூல்ஸ் போடலாம்?"- சாண்ட்ராவிடம் காட்டமாக பேசிய விஜய்சேதுபதி

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 75 நாட்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடைபெற்ற டபுள் எவிக்ஷனில் ரம்யா ஜோ, வியானா வெளியேறினர். இந்த வாரத்திற்கான வீட்டுத் தலையாக வினோத் இருந்தார்.நாமினேஷனில் சான்ட்ரா, FJ,... மேலும் பார்க்க

BB Tamil 9: "இதுக்கு இவ்வளவாமா? ஓவர் ரியாக்ஷனா இருக்கே"- சான்ட்ராவை சாடுகிறாரா விஜய் சேதுபதி?

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 75 நாட்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடைபெற்ற டபுள் எவிக்ஷனில் ரம்யா ஜோ, வியானா வெளியேறினர். இந்த வாரத்திற்கான வீட்டுத் தலையாக வினோத் இருந்தார்.நாமினேஷனில் சான்ட்ரா, FJ,... மேலும் பார்க்க

BB Tamil 9 Day 75: அலப்பறை செய்த சான்ட்ரா; பாருவை வென்ற திவ்யா - 75வது நாளில் நடந்தது என்ன?

ரயில் பயணங்களில் பக்கத்து இருக்கைக்காரரிடம் சில மணி நேரங்கள் பழகி விட்டாலே நமக்கு முகதாட்சண்யம் ஏற்பட்டு விடுகிறது. அவருடைய தவறுகளை சகித்துக் கொள்கிறோம்.ஆனால் பிக் பாஸ் வீட்டில் பல நாட்கள் பழகிய ஒருவர... மேலும் பார்க்க

`என்னைப் பத்தி அவங்க சொன்னதெல்லாம் பொய்னு சட்டப்படி நிரூபிச்சிட்டேன்!’ - பிக்பாஸ் தினேஷ்

சில தினங்களுக்கு முன் மோசடிப் புகார் தொடர்பாக பிக்பாஸ் தினேஷ் கைது என செய்தி வெளியானது நினைவிருக்கலாம்.வள்ளியூரைச் சேர்ந்த கருணாநிதி என்பவர், அரசு வேலை வாங்கித் தருவதாக தன்னிடம் தினேஷ் பணம் பெற்றுக் க... மேலும் பார்க்க

BB Tamil 9: "அப்படி தான் தெரியுது; பச்சையா தெரியுது FJ"- வாக்குவாதம் செய்யும் அரோரா

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 11 வாரங்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடைபெற்ற டபுள் எவிக்ஷனில் ரம்யா ஜோ, வியானா வெளியேறினர். இந்த வாரத்திற்கான வீட்டுத் தலையாக வினோத் இருக்கிறார்.நாமினேஷனில் சாண்ட்ரா, ... மேலும் பார்க்க