`சித்ரவதை, தற்கொலை முயற்சி, அச்சத்தில் வாழ்க்கை' மோடியிடம் நியாயம் கேட்கும் மும்...
BB Tamil 9 Day 77: `அரைமனதாக மன்னிப்புக் கேட்ட சாண்ட்ரா; பாருவுக்கு பயமாம்! - 77வது நாளின் ஹைலைட்ஸ்
‘காலைல தூங்குச்சு.. மதியம் தூங்குச்சு.. நைட்டு தூங்க டிரை பண்ணுச்சு.. டிஸ்டர்பன்ஸா இருந்துச்சு’ -
இப்படியாக பொழுதைக் கழிக்கிற சான்ட்ரா இன்னமும் உள்ளே இருக்கிறார். ஆனால் எஃப்ஜே, ஆதிரை வெளியேறி விட்டார்கள்.
மக்கள் வாக்குகள்படிதான் எவிக்ஷன் நடக்கிறதா? பிக் பாஸுக்கே வெளிச்சம்.

வீட்டுக்குள் வந்த விசே, பிறந்த நாள் வாழ்த்துகளைச் சொல்லி விட்டு, டான்ஸ் டாஸ்க்கில் சிறப்பாக செயல்பட்டவர்களை பாராட்டி விட்டு நேரடியாக விஷயத்திற்கு வந்தார்.
பொதுவாக எந்தவொரு பஞ்சாயத்தாக இருந்தாலும் நீண்ட நேரம் விசாரணை செய்து இழுப்பது விசேவின் பாணி. ஆனால் ‘பாப்பா பாட்டு’ விஷயத்தில் கனியை விட்டு விட்டு, சான்ட்ராவை மட்டும் எழுப்பி ‘அவங்க பாடினதுக்கும் உங்க குழந்தைகளுக்கும் சம்பந்தம் இல்ல. இங்க இருக்க ஒவ்வொருத்தரும் மத்தவங்க சொந்த வாழ்க்கையை வேல்யூ பண்றாங்க. கனி அப்படி கேக்கலை. இனிமே நீங்கதான் மன்னிப்பு கேக்கணும்” என்று வலிக்காமல் வேண்டினார் விசே.
அப்போதும் சாண்ட்ராவிற்கு தன் தவறு புரியவில்லை அல்லது அப்படியாக நடித்தார் “இல்ல.. சார்.. பாரு கூட அம்மா அம்மான்னு பாடினாங்க” என்று தன் தவறை மீண்டும் நியாயப்படுத்த, விசே மீண்டும் கன்வின்ஸ் செய்ய “ஓகே.. அப்ப எனக்கு அப்படித்தான் தோணுச்சு.. இப்ப நீங்க சொல்லும் போது புரியுது. ஸாரி” என்று அரை மனதாக சொன்னார் சான்ட்ரா.
அதாவது “எனக்கு இன்னமும் தப்புதான்னு தோணுது. விஜய்சேதுபதி சொல்றதால, மன்னிப்பு கேட்கறேன்” என்பது மாதிரியே சாண்ட்ராவின் அலட்டலான மன்னிப்பு இருந்தது.
சாண்ட்ராவிற்கு மனக்குழப்பங்கள், தடுமாற்றங்கள் இருக்கட்டும். அப்போதைய சூழலில் கூட பாட்டு அவருக்கு தவறாக தெரிந்திருக்கலாம். ஆனால் சற்று நிதானமாக யோசித்தால், கடுமையான எதிரி கூட குழந்தைகளை இழுத்து வைத்து பேச மாட்டார், அதுவும் இன்னொரு தாய் அப்படி செய்யவே மாட்டார் என்கிற எளிமையான லாஜிக் புரிந்து, இவராகவே கனியைத் தேடிச் சென்று மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும். ஆனால் விஷயம் சபைக்கு வந்த பிறகும் அழுத்தமாக நிற்பதை என்னவென்று சொல்வது?
ஒரு சாதாரண பிரச்னைக்கு கூட மற்ற போட்டியாளர்களை அடித்து துவைக்கும் விசே, சான்ட்ராவை மயிலிறகால் வருடி விட்டு, ‘ஆர் யூ ஓகே பேபி’ என்கிற மாதிரி இறுதியில் விசாரித்து அமர வைத்தார். ஏன் இந்த பாரபட்சம் விசே அவர்களே?!

உண்மையிலேயே சாண்ட்ராவிற்கு ஏதாவது உளப்பிரச்சினை இருந்தால் அவரை காட்சிப் பொருளாக வைத்திருக்காமல், வெளியே அனுப்பி வைப்பதுதானே அவருக்கும் செய்யும் நல்ல விஷயம்?!
பிரேக்கில் கூட ‘அவர் சொன்ன பிறகுதான் புரியுது. ஸாரி’ என்று கால் மேல் கால் போட்டுக் கொண்டு கனியிடம் மிதப்பாக சொன்னார் சாண்ட்ரா. ஃபேமிலி டாஸ்க்கில் இவர் செய்யப் போகும் அலப்பறையை நினைத்தால் இப்போதே ‘கெதக்’ என்றிருக்கிறது.
பிரேக் முடிந்து விசே திரையில் தோன்ற, வழக்கம் போல் கம்மு லேட். அவர் பரபரப்புடன் பாய்ந்து ஓடி வர, ‘மைக் போட்டுட்டு வாடா’ என்று பாரு கத்தினார். ‘இத யார் சொல்றாங்கன்னு பாரேன்’ என்று கிண்டலடித்தார் விசே.
“உங்க குடும்பத்தினர் வரப் போறாங்க.. இதில் எந்தப் போட்டியாளருக்கு பயம் அல்லது மகிழ்ச்சி?’ என்று நேரத்தைக் கடத்தும் டாஸ்க்கில் இறங்கினார் விசே.
எதிர்பார்த்தபடியே ‘பாருவிற்குத்தான் அம்மாவின் வரவைக் கண்டு பயம்’ என்று பலரும் சொன்னார்கள். இத்தனை நாள் அம்மாவைப் பற்றி பேசாத பாரு, சமீபத்தில் நிறைய பேசுகிறாராம்.

அவர் செய்த ரொமான்ஸ் சேட்டைகள் அப்படி. பாருவும் தன் அம்மாவின் வரவைக் கண்டு நடுங்குவது போல் பாவனை செய்கிறார். ஆனால் அப்படியெதும் சீன் நடக்காது என்று தோன்றுகிறது. ஏனெனில் அவர் தன் அம்மாவுடன் பேசிய உரையாடல்கள் சிலதைக் கண்டிருக்கிறேன்.
‘சாண்ட்ராவை நெனச்சா பயமா இருக்கு’ என்று அமித் சொன்னது உண்மை. நமக்குமே அப்படித்தான் இருக்கிறது. என்னென்ன டிராமா நடக்கப் போகிறதோ?! ஆதிரையின் அம்மா வரப்போவதை நினைத்து எஃப்ஜேவிற்கு உள்ளுக்குள் பயமாம். ஆனால் வெளியே காட்டிக் கொள்ளாமல் இருக்கிறாராம். (ஆனால் இதற்கு பயனில்லாமல் போய் விட்டது).
“பாரு அம்மா வர்ரதை நெனச்சு கம்முவிற்கு பயம்’ என்று போட்டுக் கொடுத்தார் அரோ. “மத்தவங்களுக்கு ஃபரீஸ் டாஸ்க். பாருவிற்கு மட்டும் ஃப்ரீசர் பாக்ஸ் டாஸ்க்” என்று ஜாலியாகச் சொன்னார் சபரி.
“ஓகே.. நாமினேஷன்ல இருக்கறவங்கள்லாம் ஒண்ணா உக்காருங்க” என்று சற்று சீக்கிரமே விசே சொன்ன போதே மெலிதாக சந்தேகம் வந்தது. டபுள் எவிக்ஷன் இருக்கலாமோ என்று. பண்டிகை கால சலுகையாக எலிமினேஷன் இருக்காது என்று சிலர் நம்ப விரும்பினார்கள்.

காப்பாற்றப்பட்டவர்களின் பெயர்களைச் சொல்லி விட்டு ‘எஃப்ஜே’வின் பெயரைக் காட்டினார் விசே. முகத்தில் ஏமாற்றம் தெரிந்தாலும் சட்டென்று சுதாரித்துக் கொண்டு “என் கேமைத்தான் ஆடினேன். எல்லாமே கேமிற்காகத்தான். ஆதிரை.. உன்னை எனக்கு அவ்வளவு பிடிக்கும். உன்னை ஹக் பண்ண விரும்பறேன்” என்று எஃப்ஜே உருக்கமாகச் சொல்ல, ஆதிரையும் நெகிழ்ந்து விட்டார்.
வினோத்தும் கண்ணீர் விட்டார். எஃப்ஜேவிற்காக பாரு அழுததுதான் ஆச்சரியம். “என்னோட பீட் பாக்சிங் குரு” என்று நெகிழ்ந்தார் சுபிக்ஷா. “டைட்டிலை விட இது சந்தோஷமா இருக்கு” என்றார் எஃப்ஜே.
மேடைக்கு வந்த எஃப்ஜே, பயண வீடியோவைப் பார்த்து விட்டு ‘செமயா இருக்கு. கோபம்ன்ற விஷயத்தை ஜெயிக்கறதுக்காக உள்ளே வந்தேன். ஆனா தோத்துட்டேன். வெளில பிடிச்சிடுவேன். என் கேமை நான் நோ்மையா ஆடினேன்.
வாய்ஸை கொஞ்சம் கம்மி பண்ணியிருக்கலாம்” என்று சொல்லி விட்டு மறக்காமல் விசேவின் கண்ணாடியை கேட்டு வாங்கி வாயால் சப்தம் எழுப்பிக் கொண்டே விடைபெற்றார்.
கெமி, எஃப்ஜே என்று இருவர் தொடர்ந்து தன்னுடைய கூலர்ஸை ஆட்டையைப் போட்டு விடுவதால், அடுத்த முறை விசே உஷாராகி கண்ணாடி போடாமல் வந்தது சுவாரசியம்.
பிரேக் முடிந்து வந்த விசே “இவங்க ஆட்டம் முடிஞ்சு போச்சு. அவ்வளவுதான்’ன்னு யாரைச் சொல்வீங்க?” என்கிற கேள்வியை வைத்தார்.

பலரும் சான்ட்ராவின் பெயரைச் சொன்னது உண்மை. ஃபேமிலி டாஸ்க்கில் உணர்ச்சிவசப்பட்டு விட்டு பிறகு மீண்டும் அசோகவனத்து சீதையாக சாண்ட்ரா அமரப் போவதால் நிகழ்ச்சிக்கு ஒரு உபயோகமும் இல்லை. “பாரு செய்ய வேண்டிய குழப்பம் அனைத்தையும் செஞ்சுட்டாங்க. இனிமே டாஸ்க்தான். அங்கயும் குழப்பம்தான் செய்வாங்க. அவங்க விட்ட எந்த சர்ப்ரைஸூம் இல்ல” என்று அரோ சொன்னதும் சரியானது.
“பாரு என் பெயரைத்தான் சொல்வாங்கன்னு முன்னாடியே கெஸ் பண்ணிட்டேன்” என்றார் திவ்யா. (அவ்வளவு சத்தமாவா கேக்குது?!) திவ்யா கம்முவின் பெயரைச் சொன்ன போது, அவர் நக்கலாக தலையாட்ட ‘இப்படிப் பண்ணாதீங்க” என்று எச்சரித்தார் விசே. (பாருவின் சகவாசம்!)
கனியும் கம்முவின் ஆதிரையின் பெயரைச் சொன்னார்கள். எஃப்ஜேவை எக்ஸ்போஸ் செய்ய வந்த வேலை முடிந்து விட்டது என்பது அவர்கள் சொன்ன காரணம். அது உண்மையாகி விட்டது.
‘அடுத்த எவிக்ஷன்’ என்று விசே கார்டை தூக்கியவுடன் மக்கள் அதிர்ச்சியடைந்தார்கள். ‘ஆதிரை’ என்கிற கார்டை விசே காட்டியவுடன் ஆதிரை பயங்கர ஏமாற்றத்தை முகத்தில் காட்டினார். ‘தனது அம்மாவுடன் 24 மணி நேரம் இருக்கலாம்’ என்கிற ஆசையுடன் இருந்த எண்ணம் இப்படி போய் விட்டதே என்கிற ஏமாற்றம் முகத்தில் அப்பட்டமாக தென்பட்டது. பாருவின் முகத்தில் மகிழ்ச்சி தென்பட்டது. (ஒருவேளை அந்த சான்ஸ் நம்மளுக்கு அடிச்சா?!)

“நீங்கள் விடைபெறுவதற்கு முன்னால் 24 மணி நேரம் வாய்ப்பை மற்றவருக்கு வழங்கலாம்” என்று பிக் பாஸ் அறிவிக்க, சற்றும் யோசிக்காமல் பாருவின் பெயரைச் சொன்னார் ஆதிரை. இதைக் கேட்டு பாருவிற்கு இன்ப அதிர்ச்சி. இரவு பத்து மணிக்கு அரக்கப் பரக்க ஓடியவனுக்கு கூலிங் பியர் கிடைத்ததைப் போல நம்பவே முடியாமல் ஆனந்தக் கண்ணீர் விட்டார்.
ஒருவேளை தனக்கு கிடைக்கலாம் என்று நினைத்திருந்த கனியின் முகத்தில் மீண்டும் ஏமாற்றம். ஆனால் பிறகு கனி சொன்ன காரணம் சிறப்பானது. “பாருவிற்கும் சரி, ஆதிரைக்கும் சரி.. ஒரே பிரச்சனைதான். அம்மாவை கன்வின்ஸ் பண்ணணும். அதுக்காக பாருவிற்கு போனது சரிதான்” என்று கனி சொன்னது அவருடைய நுண்ணுணர்வையும் பெருந்தன்மையையும் காட்டுகிறது.
ஆதிரை வெளியே சென்ற பிறகு “அவ செஞ்ச இந்த உதவியை வாழ்நாள் முழுக்க மறக்க மாட்டேன்” என்று உணர்ச்சிவசப்பட்ட பாரு “இந்த அரோ இருக்காளே.. மத்தவங்க எமோஷன்களை வெச்சு விளையாடறதே அவளுக்கு பிழைப்பு. இது தப்பான விஷயம். நானா இருந்தா அதைப் பண்ணவே மாட்டேன்” என்று கம்முவிடம் சொல்லிக் கொண்டிருந்தார். (பாரு அதைச் செய்ததே இல்லையா?.. என்னடா இது கொடுமை!)
மேடைக்கு வந்த ஆதிரை “மக்களே.. உங்களைப் புரிஞ்சுக்கவே முடியலை. ரீஎன்ட்ரில சிறப்பா விளையாடினேன். டாஸ்க்லாம் நல்லா பண்ணேன். அப்படி இருந்தும் அனுப்பிச்சிட்டீங்களே..” என்று உண்மையான ஏமாற்றத்துடன் புகார் சொல்ல, ஆதிரையின் அம்மாவை திடீர் சர்ப்ரைஸ் ஆக மேடையில் ஏற்றி தற்காலிக சந்தோஷத்தை ஆதிரைக்கு அளித்தது, பிக் பாஸ் டீம்.
“என் பொண்ணு நல்லா ஆடினா.. எனக்கு பெருமையாத்தான் இருக்கு” என்று சந்தோஷப்பட்டார் ஆதிரையின் அம்மா. அதே மேடையில் நிற்க வைத்திருந்தால் கன்டென்ட் கிடைத்திருக்கும்.

பலூன் டாஸ்க்கில் ஆதிரையை கீழே தள்ளி விட்டிருந்தாலும் அதைப் பற்றி ஒன்றுமே பேசாமல் மன்னித்து விட்ட பெருந்தன்மையை நினைத்து விக்ரம் அழுது கொண்டிருந்தார். (இப்போதெல்லாம் ‘இவன் ரொம்ப நல்லவன்ப்பா’ என்று நினைக்கும்படியாக விக்ரம் அடிக்கடி அழுகிறாரோ?!)
போட்டி இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்தாலும் கூட ‘இவர்தான் டைட்டில் வின்னர்’ என்று யாரையும் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. ஒருவேளை பிக் பாஸ் டீம், பாரு அல்லது சாண்ட்ராவிற்கு கொடுத்தால் கூட நாம் ஆச்சரியமோ அதிர்ச்சியோ அடையக்கூடாது. இப்போதே மனதை இரும்பாக்கிக் கொள்ள வேண்டும்.!



















