Big Boss Kannada: `சாதி பாகுபாடு' - கிச்சா சுதீப், போட்டியாளர்கள் மீது மகளிர் ஆண...
Big Boss Kannada: `சாதி பாகுபாடு' - கிச்சா சுதீப், போட்டியாளர்கள் மீது மகளிர் ஆணையத்தில் புகார்
கடந்த சில வருடங்களாக பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், தமிழ் எனப் பல மொழிகளில் தயாரிக்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது.
கன்னட நட்சத்திரம் கிச்சா சுதீப் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் கன்னட நிகழ்ச்சிக்கு கர்நாடகா முழுவதும் அதிக பார்வையாளர்கள் இருக்கின்றனர். இந்த நிலையில், சுற்றுச்சூழல் விதிகளை மீறியதாக கன்னட பிக் பாஸ் வீட்டுக்குக் கடந்த மாதம் சீல் வைக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது.

அதைத் தொடர்ந்து அந்தப் பிரச்னை சரிசெய்யப்பட்டு மீண்டும் நிகழ்ச்சி தொடங்கியது. இந்த நிலையில், சமூக ஆர்வலர் சந்தியா பவித்ரா என்பவர் நிகழ்ச்சித் தொகுப்பாளர் கிச்சா சுதீப் மீதும் போட்டியாளர்கள் அஸ்வினி கவுடா, ரஷிகா மீதும் கர்நாடக மாநில மகளிர் ஆணையத்தில் புகார் அளித்திருக்கிறார்.
அந்தப் புகாரில், ``கிச்சா சுதீப் ஒரு எபிசோடின் போது போட்டியாளர் ரக்ஷிதாவை நோக்கி அவமானகரமான கருத்துக்களைத் தெரிவித்தார். அவரின் தொனியும், கருத்தும் தேசிய தொலைக்காட்சியில் பெண்கள் மீதான அவமரியாதையை ஊக்குவிப்பதாக அமைந்திருந்தது.
மக்களிடம் மதிப்புள்ள நபரின் இத்தகைய கருத்துக்கள் பார்வையாளர்களை எதிர்மறையாகப் பாதிக்கும். பொழுதுபோக்கு இடங்களில் பெண்களை அவமானப்படுத்துவதை இயல்பாக்கும். போட்டியாளர்கள் ரஷிகா ஒரு தருணத்தில், மாலவள்ளி நடராஜை உடல் ரீதியாகத் தாக்கினார்.
பிக் பாஸ் வீட்டிற்குள் நடக்கும் உடல் ரீதியான வன்முறை நிகழ்ச்சியின் நடத்தை விதிகளை நேரடியாக மீறுவதாகும். ரக்ஷிதாவைக் குறிவைத்து போட்டியாளர் அஸ்வினி கவுடா சாதி அடிப்படையிலான கருத்துக்களைத் தெரிவிக்கிறார்.
போட்டியாளரின் பின்னணியைக் கேலி செய்கிறார். பட்டியல் சாதி/பட்டியல் பழங்குடி அடையாளங்களை மறைமுகமாகக் குறிப்பிட "S பிரிவு" போன்ற குறியீட்டு மொழியைப் பயன்படுத்துகிறார். இத்தகைய நடத்தை சாதி பாகுபாட்டை நிலைநிறுத்துகிறது.
பிக் பாஸ் போன்ற பரவலாகப் பார்க்கப்படும் தளத்தில் இதை அனுமதிக்கக்கூடாது" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்தப் புகாரைத் தொடர்ந்து, இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து நிகழ்ச்சியின் குழுவும் சேனலும் இன்னும் அதிகாரப்பூர்வ பதிலை வெளியிடவில்லை. ரியாலிட்டி ஷோவின் நெறிமுறைகள் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்ந்து சரிவது விவாதத்தைத் தீவிரப்படுத்தியிருக்கிறது.


















