''எங்களுக்கு குப்பை வேண்டாம்!" - டிரெண்டாகும் #BoycottMajorRavi ஹாஷ்டேக் - பின்...
Delhi Blast: "அந்தக் காட்சிகள் உண்மையிலேயே இதயத்தை உடைக்கின்றன" - மு.க.ஸ்டாலின் அறிக்கை!
டெல்லியில் செங்கோட்டை அருகே நடந்த கார் வெடிப்பில் குறைந்தபட்சம் 8 பேர் உயிரிழந்துள்ளனர். வெடிப்பு சம்பவம் குறித்து விசாரணைகள் முடுக்கப்பட்டுள்ளன.
தேசிய பாதுகாப்புப் படை (NSG) மற்றும் தேசிய புலனாய்வு முகமை (NIA) மற்றும் தடயவியல் துறை மற்றும் பிற பாதுகாப்பு அமைப்புகளின் குழுக்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளன. டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு குழுவும், சி.ஆர்.பி.எஃப் டி.ஐ.ஜி-யும் முன்னதாகவே சம்பவ இடத்திற்கு வந்து சேதத்தை கணக்கிட்டனர்.
உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பிரதமர் மோடி சூழலை ஆராய்ந்து வருகின்றனர்.
Delhi Blast: ஸ்டாலின் வேதனை
இந்த சூழலில் வாகன வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், "டெல்லியின் செங்கோட்டை அருகே நடந்த வெடிப்பு பல அப்பாவி உயிர்களைப் பறித்ததால் அதிர்ச்சியும் ஆழ்ந்த வேதனையும் அடைந்தேன்.

அங்கிருந்து வரும் காட்சிகள் உண்மையிலேயே இதயத்தை உடைக்கின்றன. இழப்பைச் சந்தித்துள்ள குடும்பங்களுக்கு எனது இதயப்பூர்வமான அனுதாபங்களையும், காயங்களுடன் போராடுபவர்களுக்கு எனது ஆதரவையும் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களின் வலிமை மற்றும் விரைவான குணமடைதலுக்காக வேண்டுகிறேன்." என எழுதியிருக்கிறார்.
டெல்லி வெடிப்பைத் தொடர்ந்து தமிழகத்தின் பல இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னையிலும் கோவையிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. டெல்லி கார் வெடிப்பு சம்பவம் எதிரொலியாக தமிழகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல், எழும்பூர், உள்ளிட்ட ரயில் நிலையங்களில் ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை இணைந்து சோதனை நடத்தி வருகின்றனர். கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும் மார்கெட் பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
கோவை நகர காவல் ஆணையர் A சரவண சுந்தர், "வழக்கமாக இரவு ரோந்து பணியில் 300 காவலர்கள் ஈடுபடுவார்கள். இன்று 600 ஆக உயர்த்தியிருக்கிறோம். நகரம் முழுவதும் வாகன சோதனை நடைபெறுகிறது. முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது" எனக் கூறியிருப்பதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா தளம் செய்தி வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் கூடும் இடங்களில் போலீசார் கண்காணிப்பு, ரோந்து பணி மற்றும் சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர்.















