`இதற்கு பில் கேட்ஸ் பதிலளிக்க வேண்டும்!' - எப்ஸ்டீன் ஃபைல்ஸ் குறித்து முன்னாள் ம...
Doctor Vikatan: மாத்திரை எடுத்தால் மட்டுமே பீரியட்ஸ்; பிசிஓடி பிரச்னைக்குத் தீர்வே கிடையாதா?
Doctor Vikatan: எனக்கு பிசிஓடி பிரச்னை இருக்கிறது. கடந்த இரண்டு வருடங்களாக மாத்திரை எடுத்தால் மட்டுமே பீரியட்ஸ் வருகிறது. மாத்திரைகளின் உதவியின்றி, இயற்கையாக பீரியட்ஸ் வரவழைக்க என்ன செய்வது... பல மருத்துவர்களைப் பார்த்தும் எனக்கு இந்தப் பிரச்னை சரியாகவில்லை. தீர்வு சொல்வீர்களா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர் 'மூலிகைமணி' அபிராமி.

பிசிஓடி (PCOD) எனப்படும் சினைப்பை நீர்க்கட்டி பாதிப்பைக் குணப்படுத்த முடியாது. ஆனால், கட்டுப்பாட்டில் வைக்கலாம். அதனால் ஏற்படும் பிற பாதிப்புகளைச் சரி செய்தாலே, பீரியட்ஸ் ரெகுலராகும்.
முதல் வேலையாக, நீங்கள் நேரடியாக உணவில் சேர்த்துக்கொள்ளும் சர்க்கரை (காபி, டீ, ஜூஸ்) மற்றும் மறைமுகமாக மாவுச்சத்து வழியாகச் சேரும் சர்க்கரையைக் குறைக்க வேண்டும். அதற்குப் பதிலாக உங்கள் உணவில் புரோட்டீன் எனப்படும் புரதச்சத்தின் அளவை அதிகரிக்க வேண்டும்.
பொதுவாக நம் உணவுப்பழக்கத்தில் மாவுச்சத்தும் சர்க்கரைச் சத்தும் அதிகமாகவும் நார்ச்சத்தும் புரதச்சத்தும் குறைவாக இருப்பதுதான் பிரச்னையே. எனவே, குறைவாக உள்ள இந்த இரண்டையும் அதிகப்படுத்துவது அவசியம். பிசிஓடி இருப்பவர்கள் எண்ணெய்ப் பதார்த்தங்களை முழுமையாகத் தவிர்க்கத் தேவையில்லை. மிதமான அளவில் எண்ணெய் மற்றும் கொழுப்புச்சத்துகளை எடுத்துக்கொள்ளலாம்.
பிசிஓடி பெரும்பாலும் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்யும் பெண்களுக்கு (Sedentary lifestyle) வருகிறது. உட்கார்ந்தே வேலை பார்ப்பவர்கள் என்றாலும், அவ்வப்போது எழுந்து நடப்பது உடலின் வளர்சிதை மாற்றத்தைச் சீராக்கும்.
'உட்கார்ந்தே இருப்பது புகைப்பழக்கத்திற்குச் சமம்' எனச் சமீப காலங்களில் மருத்துவர்கள் எச்சரிப்பதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

தினமும் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும். நடைப்பயிற்சி, ஏரோபிக்ஸ், நடனம் அல்லது யோகா என உங்களுக்குப் பிடித்த எதை வேண்டுமானாலும் செய்யலாம். உடற்பயிற்சி செய்யவெல்லாம் நேரமில்லை என்று சமாதானம் சொல்வது சரியானதல்ல.
சோலியஸ் புஷ்-அப்ஸ் (Soleus Pushups) எனப்படும் பயிற்சிகளையும் முயற்சி செய்யலாம். அமர்ந்த இடத்திலேயே குதிகால்களை உயர்த்தி விரல்களைத் தரையில் ஊன்றும் இந்த எளிய பயிற்சி, ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதைக் கட்டுப்படுத்தும்.
ரத்தத்தில் சர்க்கரை அளவு எந்த அளவுக்குக் கட்டுப்படுகிறதோ, அந்த அளவுக்கு பீரியட்ஸ் சுழற்சி ரெகுலராக மாறும். உங்கள் விஷயத்தில் உணவுக்கட்டுப்பாடு, கூடவே முறையான உடற்பயிற்சி இரண்டும் இருந்தால்தான் பலன் கிடைக்கும். சரியான நேரத்திற்கு 7 மணி நேரம் ஆழ்ந்த உறக்கம் மிகவும் அவசியம்.
முதல் நாள் வடித்த பழைய சாதத்தில் தண்ணீர் ஊற்றி வைக்கவும். (மண் பானையில் வைத்தது சிறந்தது). அது ஏற்றுக்கொள்ளாதவர்கள், முதல்நாள் வடித்த சாதத்தை ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டு, அடுத்த நாள் காலையில் எடுத்துக் கரைத்து உப்பு சேர்த்துக் குடிக்கலாம். அத்துடன் கைப்பிடி அளவு சின்ன வெங்காயம் சேர்த்துக்கொள்ளவும். அதுவும் கொழுப்பைக் கரைப்பதில் உதவும்.
காலை உணவுக்கு நொதித்த சிறுதானிய உணவுகள் சிறந்த சாய்ஸ். ராகி தோசை, பச்சைப்பயறு தோசை, வெந்தயக் கஞ்சி/களி, உளுந்தங்களி போன்றவை எடுத்துக்கொள்ளலாம். கறுப்பு உளுந்து சிறந்தது.
அசைவம் சாப்பிடுவோர், நாட்டுக்கோழி முட்டையில் ஆம்லெட் செய்து சாப்பிடலாம். மதிய உணவுக்கு குக்கர் சாதத்தைத் தவிர்த்து, வடித்த சாதம் எடுத்துக்கொள்ளவும். சாதத்திற்கு இணையாக இரண்டு மடங்கு காய்கறிகள் கூட்டு, பொரியல் மற்றும் கீரை சேர்த்துக் கொள்ள வேண்டும். கீரையை பொரியலாகச் செய்து சாப்பிடும்போது நிறைய சாப்பிட முடியும்.
அசைவம் சாப்பிடுவோர், சைவ உணவுகளோடு, சுதும்பு மீன், சுறா மீன், நெய் மீன், கடல் இறால் போன்றவை புரதச்சத்து மிக்கவை என்பதால் இவற்றையும் சேர்த்துக்கொள்ளவும்.

சைவ உணவுக்காரர்கள் தினை தோசை மற்றும் வேகவைத்த வள்ளிக்கிழங்கு மாவும் சேர்த்துக்கொள்ளலாம். இது குளுக்கோஸ் அளவைக் குறைக்க உதவும். முருங்கைக்கீரை, முடக்கத்தான் கீரை மற்றும் கல்யாண முருங்கைக்கீரை ஆகியவற்றைத் தொடர்ந்து உணவில் சேர்க்கவும்.
அடை, தோசை, சூப், துவையல், மசியல், பொடி என ஏதேனும் ஒரு வடிவத்தில் இவற்றைச் சாப்பிடலாம். வெள்ளை வெங்காயம் நிறைய சேர்த்துக்கொள்வதும் நல்லது. சுண்டல், கறுப்பு கொண்டைக்கடலை, பச்சைப்பயறு மற்றும் நட்ஸ் போன்றவற்றை நொறுக்குத்தீனிகளாக எடுத்துக்கொள்ளலாம்.
ஒவ்வொரு வேளை உணவிற்குப் பிறகும் உடனடியாக 10 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்வது ரத்தத்தில் சர்க்கரை அளவு சீராக இருக்க உதவும். உணவு, உடற்பயிற்சி மற்றும் உறக்கம் ஆகிய எல்லாவற்றையும் முறைப்படுத்தினால் மட்டுமே பிசிஓடி பிரச்னையில் முன்னேற்றம் காண முடியும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.




















