TTT: ``ஜீவா ஹீரோவா? அவனுக்குப் படம் ஓடாது என்பார் சௌத்ரி" - நடிகர் இளவரசு ஓப்பன்...
Doctor Vikatan: பிரபலங்கள் சொல்லும் 'பீட்ரூட் ஜூஸ்' சீக்ரெட்... கிட்னி ஸ்டோன் வருமா?!
Doctor Vikatan: இன்று சமூக வலைதளங்களில் இன்ஃப்ளுயென்ஸர்கள் தொடங்கி, சினிமா பிரபலங்கள் வரை பலரும் தினமும் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதாகவும் அதுதான் அவர்களது இளமைத் தோற்றத்துக்கான காரணம் என்றும் சொல்வதைப் பார்க்கிறோம். அதே சமயம், பீட்ரூட் ஜூஸ் குடித்தால் கிட்னி ஸ்டோன் வரும் என்றும் சிலர் சொல்கிறார்கள். இவற்றில் எது உண்மை...?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த இதயநல மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்.
பீட்ரூட் என்பது சத்துகள் நிறைந்த காய்களில் ஒன்று என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அதை யார் சாப்பிட வேண்டும், எவ்வளவு சாப்பிட வேண்டும் என்ற வரையறை தெரிந்து எடுத்துக்கொள்ள வேண்டியது மிகமிக முக்கியம்.
பீட்ரூட்டில் நைட்ரேட் சத்து மிக அதிகம் என்பதால், அது உடலில் நைட்ரிக் அமிலமாக மாற்றப்படும். அதன் விளைவாக ரத்த அழுத்தம் குறையும். அதனால் இதயநலன் மேம்படும். மூளையின் ஆரோக்கியத்துக்கும் உதவக்கூடியது இது. பீட்ரூட்டிற்கு அந்த அடர் சிவப்பு நிறத்தைக் கொடுப்பது 'பீட்டலைன்' (Betalain) என்ற சத்து. இது வெறும் நிறமி மட்டுமல்ல, நம் உடலுக்குத் தேவையான ஒரு முக்கியமான பாதுகாப்புக் கவசம். இதற்கு ஆன்டிஆக்ஸிடன்ட் தன்மையும் உண்டு.
நமது உடல் இயந்திரம் இயங்கும்போது, செல்கள் சில சேதங்களைச் சந்திக்கும் இதை 'ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்' என்பார்கள். நம் செல்கள் சிதைவடையாமல் தடுக்கும் வேலையை இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் செய்கின்றன. உடலில் ஏற்படும் உள் காயங்கள் மற்றும் வீக்கங்களைக் குறைக்கும் ஆன்டி-இன்ஃப்ளமேட்டரி குணங்களையும் கொண்டது பீட்ரூட்.

சருமம் பளபளப்பாக மாற வேண்டும் என விரும்புவோருக்கு பீட்ரூட் ஜூஸ் நிச்சயம் உதவும். விளையாட்டுத்துறையில் ஈடுபடுவோருக்கு உடல் திறனை அதிகரிக்கவும் பீட்ரூட் ஜூஸ் உதவுவதாக நிரூபிக்கப்பட்ட ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விளையாடுவதற்கு அல்லது உடற்பயிற்சி செய்வதற்கு 2-3 மணி நேரம் முன்னதாக பீட்ரூட் ஜூஸ் எடுத்துக்கொள்ளலாம். காலையில் ஒரு டம்ளர் அளவுக்குக் குடிக்கலாம்.
பீட்ரூட் ஜூஸ் குடிக்கும்போது, சிறுநீரின் நிறம் லேசான சிவப்பாக மாறுவது இயல்புதான். எனவே, அது குறித்துக் கவலைப்படத் தேவையில்லை. அதே சமயம், அளவுக்கதிகமாக பீட்ரூட் ஜூஸ் குடிக்கும்போது கிட்னி ஸ்டோன்ஸ் உருவாகும் ஆபத்தும் இருக்கிறது. தவிர, வயிற்று உப்புசம், வாய்வுத் தொந்தரவு போன்றவையும் வரலாம். ரத்தச் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இல்லாதவர்கள், பீட்ரூட் ஜூஸை தவிர்ப்பது அவசியம்.
எனவே, பிரபலங்களும் சோஷியல் மீடியா இன்ஃப்ளுயென்ஸர்களும் சொல்வதைக் கேட்டு, எந்தச் சிகிச்சையையும் உணவுப்பழக்கத்தையும் கண்மூடித்தனமாகப் பின்பற்றாமல், மருத்துவ ஆலோசனையோடு பின்பற்றுவதுதான் பாதுகாப்பானது.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.














