TTT: ``ஜீவா ஹீரோவா? அவனுக்குப் படம் ஓடாது என்பார் சௌத்ரி" - நடிகர் இளவரசு ஓப்பன்...
விவசாயம், விவசாயிகள் எதிர்பார்க்கும் '10' அறிவிப்புகள்!|மத்திய பட்ஜெட் 2026
இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பு 'விவசாயம்'. ஒவ்வொரு பட்ஜெட்டிலும் விவசாயத்திற்கான முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும்.
இந்தப் பட்ஜெட்டிலும் அது இடம்பெறும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
ஆனால், அந்த அறிவிப்புகள் என்னவாக இருக்க வேண்டும் என்கிற விவசாயிகளின் எதிர்பார்ப்பைக் கூறுகிறார் காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் இளங்கீரன்.
> C+2 என்கிற குறைந்தபட்ச ஆதரவு விலை கட்டாயம் வேண்டும். 'லாபம் இல்லை' என்று தான் விவசாயிகள் விவசாயத்தில் இருந்து வெளியேறுகின்றனர். இதைத் தடுக்க, குறைந்தபட்ச ஆதரவு விலை என்பது மிக மிக முக்கியம்.
மேலும், விவசாயிகளுக்கு உழைப்புக்கு தகுந்த ஊதியம் கிடைப்பதில்லை. இந்தக் குறைந்தபட்ச ஆதரவு விலை அறிவிக்கப்பட்டால், விவசாயம் லாபகரமானதாக மாறும்.
> விவசாயத்திற்கு தண்ணீர் மிக மிக முக்கியம். 2014-ம் ஆண்டு 'நதிகள் இணைக்கப்படும்' என்பது பாஜகவின் தேர்தல் வாக்குறுதியாக இருந்தது. இப்போது மூன்றாவது முறையாக மத்தியில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது.
ஆனாலும், இன்னும் அவர்கள் இதற்கான முயற்சியை எடுக்கவில்லை. குறைந்தபட்சம் முக்கிய நதிகளையாவது இணைக்க வேண்டும். அப்போது இங்கே மழை பெய்யும்போது, மழை இல்லாத மாநிலத்திற்கு, இங்கிருக்கும் உபரி நீரை திருப்பிவிட்டு, இங்குள்ள பயிர்களைப் பாதுகாக்கலாம்.
> உதய் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் 'இலவச மின்சாரத்தை'த் தடுக்க பார்க்கிறது மத்திய அரசு. மின்சாரம் என்பது இப்போது விவசாயிகளுக்கு ஜீவநாடியாக இருந்து வருகிறது. அதில் கைவைப்பது அவர்களை இன்னும் சிக்கலில் தள்ளும்.
அதனால், இலவச மின்சார திட்டம் தொடர வேண்டும்.
> ரசாயன உரங்களின் விலை மிக அதிகமாக ஏறியிருக்கிறது. ரூ.600-க்கு விற்றுக்கொண்டிருந்த DAP-ன் தற்போதைய விலை ரூ.1,300. இது கிட்டத்தட்ட இருமடங்கு ஆகும்.
இதைக் குறைக்கும் நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க வேண்டும்.

> ரசாயன உரங்களில் இருந்து இயற்கை விவசாயத்திற்கு மாற விவசாயிகளை ஊக்குவிக்கும் திட்டம் இந்தப் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டும்.
> டிராக்டர் உள்ளிட்ட விவசாய இயந்திரங்களுக்கு 0 சதவிகித வட்டி மாதிரியான சலுகைகளை வழங்க வேண்டும்.
> ஒரு பிர்காவே (மூன்று கிராமங்கள்) பாதிக்கப்பட்டால் தான் விவசாயிகளுக்கு காப்பீடு வழங்கப்படுகிறது. இதை மாற்றி ஒரு பகுதியில்... ஒரு விவசாயி பாதிக்கப்பட்டாலே, அவர்களுக்கான தகுந்த காப்பீடு வழங்கப்பட வேண்டும்.
> காப்பீடு இப்போது மாநில அரசின் பட்டியலுக்கு மாறிவிட்டது. ஆனால், மாநில அரசு இதை செயல்பாட்டிற்கு கொண்டுவர ஆர்வம் காட்டுவதில்லை.
அதனால், முன்பு போல, காப்பீட்டிற்கு மத்திய அரசு 90 சதவிகிதமும், விவசாயிகள் 10 சதவிகிதமும் பங்களிக்கும் திட்டத்தைக் கொண்டுவர வேண்டும்.
> 60 வயதைக் கடந்த விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
> விவசாயப் பொருளை விவசாயிகளே மதிப்புக் கூட்டி, விற்பனை செய்யும் அளவிற்கு மாவட்ட அளவில் ஒரு பயிற்சி மையம் அமைக்கப்பட வேண்டும்.













