TTT: ``ஜீவா ஹீரோவா? அவனுக்குப் படம் ஓடாது என்பார் சௌத்ரி" - நடிகர் இளவரசு ஓப்பன்...
ஐடி சோதனையின் போது விபரீதம்: விசாரணையின்போதே தற்கொலை செய்துகொண்ட தொழிலதிபர் சிஜே ராய்!
தென்னிந்தியாவின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமான 'கான்ஃபிடன்ட் குழுமத்தின்' (Confident Group) நிறுவனர் மற்றும் தலைவர் சி.ஜே. ராய்(57). கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்த இவர், ரியல் எஸ்டேட் துறையில் மிகப்பெரிய ஆளுமையாகத் திகழ்ந்தவர். குறிப்பாக கேரளா மற்றும் கர்நாடகாவில் இவரது நிறுவனம் ஆயிரக்கணக்கான வீடுகளைக் கட்டியுள்ளது. இவர் மோகன்லால் நடித்த 'காசனோவா' உள்ளிட்ட திரைப்படங்களைத் தயாரித்துள்ளார்.
'பிக் பாஸ் மலையாளம்' நிகழ்ச்சியின் ஸ்பான்சராகவும் இவரது நிறுவனம் இருந்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் முதல் வருமான வரித்துறையினர் இவரை கண்காணித்து வந்துள்ளனர். ஜனவரி 28 முதல் தீவிர சோதனை நடைபெற்றுள்ளது. வருமானத்திற்கு அதிகமான சொத்துக்கள் கண்டறியப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், இதனால் அவர் கடும் மன உளைச்சலில் இருந்ததாகத் தெரிகிறது.

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக சி.ஜே. ராய்க்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வந்தனர். நேற்று பிற்பகல் 3 மணி முதல் 3.30 மணி அளவில், பெங்களூரின் அசோகா நகர் பகுதியில் உள்ள சி.ஜே.ராய் அலுவலகத்தில் விசாரணை நடந்துகொண்டிருந்தபோது, சி.ஜே.ராய் தனது துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
வருமான வரித்துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்திக்கொண்டிருந்த போதே இந்தச் சம்பவம் நிகழ்ந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக அவர் எச்.எஸ்.ஆர் லேஅவுட்டில் உள்ள நாராயணா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். எனினும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.

சம்பவ இடத்தை ஆய்வு செய்த பெங்களூரு மாநகர காவல்துறை ஆணையர் சீமந்த் குமார் சிங், ``முதற்கட்ட விசாரணையில் இது தற்கொலை என்பது தெரியவந்துள்ளது. கடந்த மூன்று நாட்களாக வருமான வரித்துறை சோதனை நடந்துள்ளது. இன்றும் அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர். கேரளாவைச் சேர்ந்த ஐடி அதிகாரிகள் இந்தச் சோதனையை மேற்கொண்டுள்ளனர். முழுமையான விசாரணைக்குப் பிறகே உண்மை நிலவரம் தெரியவரும்." எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்தத் தற்கொலை சம்பவம் தொடர்பாக அசோகா நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு பெரும் தொழிலதிபர் ஐடி சோதனையின் போதே தற்கொலை செய்துகொண்டது ரியல் எஸ்டேட் மற்றும் திரையுலகினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.















