`அவர்களுக்கு உரிமை இருக்கிறது; சுனேத்ரா துணை முதல்வராவது பற்றி எனக்கு தெரியாது'...
`சரத் பவார் முயற்சியை தடுத்த பா.ஜ.க' - அஜித் பவார் மனைவி இன்று துணை முதல்வராக பதவியேற்பு
மகாராஷ்டிராவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு துணை முதல்வர் அஜித் பவார் விமான விபத்தில் அகால மரணமடைந்தார். அவரது மரணத்தை தொடர்ந்து அவர் தலைமையில் இயங்கிய தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு யார் தலைமை தாங்குவது என்ற கேள்வி எழுந்துள்ளது.
கட்சி தலைவர்கள் அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா பவாரிடம் துணை முதல்வர் பதவியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். அவரும் அதனை ஏற்றுக்கொண்டதாக தெரிகிறது. இதையடுத்து இன்று தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் மும்பையில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் முறைப்படி சுனேத்ரா பவார் கட்சியின் சட்டமன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்.
இது குறித்து மாநில தேசியவாத காங்கிரஸ் அமைச்சர் சகன் புஜ்பால் கூறுகையில்,''சுனேத்ரா பவார் துணை முதல்வராக பதவியேற்பார். இது ஒரு மித்த கருத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டது. தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூடி சுனேத்ரா பவாரை முறைப்படி சட்டமன்ற தலைவராக தேர்வு செய்ய இருக்கின்றனர்''என்றார்.

இது குறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் கடந்த இரண்டு நாட்களாக முதல்வர் தேவேந்திர பட்னாவிஸை சந்தித்து பேசி வந்தனர். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் இம்முடிவுக்கு முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உடனே ஒப்புதல் கொடுத்து இருப்பதாக கூறப்படுகிறது. இவ்விவகாரத்தில் பா.ஜ.கவும் முக்கிய பங்கு வகித்ததாக கூறப்படுகிறது. இவ்விவகாரத்தில் தேசியவாத காங்கிரஸ் எடுக்கும் முடிவுக்கு பா.ஜ.க ஆதரவு கொடுக்கும் என்று பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
சரத் பவார் முயற்சியை தடுத்த பா.ஜ.க
அஜித் பவார் இறந்த சில நாட்களில் அவசர அவசரமாக அவரது மனைவிக்கு துணை முதல்வர் பதவி கொடுப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அஜித் பவார் இருந்த போது சரத் பவார் தலைமையில் இயங்கிய தேசியவாத காங்கிரஸ் கட்சியை தனது தலைமையில் இயங்கிய தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்.
உள்ளாட்சி தேர்தல் முடிந்த பிறகு இரு கட்சிகளையும் இணைக்க அஜித் பவார் திட்டமிட்டு இருந்தார். ஆனால் இப்போது திடீரென அஜித் பவார் இறந்துவிட்டதால் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சரத் பவார் ஒட்டுமொத்த தேசியவாத காங்கிரஸ் கட்சியையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிடுவார் என்ற அபாயம் இருப்பதாக கட்சியின் மூத்த தலைவர்கள் கருதினர்.
மீண்டும் சரத் பவாரின் கட்டுப்பாட்டில் செல்வதை கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் விரும்பவில்லை. இதேபோன்று தேசியவாத காங்கிரஸ் சரத் பவார் தலைமையில் செல்வதை பா.ஜ.கவும் விரும்பவில்லை.

சரத்பவார் கட்சியில் ஆதிக்கம் செலுத்தினால் எதிர்காலத்தில் பா.ஜ.க கூட்டணியை அவர் விரும்ப மாட்டார் என்று பா.ஜ.க கணக்கு போட்டது. எனவேதான் சுனேத்ரா பவாரை துணை முதல்வராக்குவதில் பா.ஜ.கவும் முக்கிய பங்கு வகித்ததாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். இரண்டு தேசியவாத காங்கிரஸ் கட்சிகளையும் பிப்ரவரி மத்தியில் ஒன்றாக இணைக்க திட்டமிட்டு இருந்தனர்.
சுனேத்ரா பவார் துணை முதல்வராக பதவியேற்றால் மகாராஷ்டிராவில் முதல் பெண் முதல்வர் என்ற பெயரை பெறுவார். சுனேத்ரா பவார் ஏற்கனவே மும்பைக்கு புறப்பட்டு சென்றுவிட்டதாக அவரது குடும்ப வட்டாரங்கள் தெரிவித்தன. துணை முதல்வராக பதவியேற்ற பிறகு பாராமதி இடைத்தேர்தலில் சுனேத்ரா பவார் போட்டியிட்டு சட்டமன்றத்திற்கு தேர்வு செய்யப்படுவார்.
தற்போது சுனேத்ரா பவார் ராஜ்ய சபை உறுப்பினராக இருக்கிறார். துணை முதல்வரான பிறகு அப்பதவியை கட்சியின் மூத்த தலைவர் பிரபுல் பட்டேல் அல்லது தனது மகன்களில் ஒருவருக்கு கொடுப்பார் என்று தெரிகிறது.













