பழைய Actorகிட்ட இருக்கிற dedication புதுசா வர்றவங்ககிட்ட...! - Actress Egavalli ...
Doctor Vikatan: இதய நோயாளிகள் மாடிப்படிகளில் ஏறி, இறங்கலாமா, எப்போது அலெர்ட் ஆக வேண்டும்?
Doctor Vikatan: என் உறவினருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் இதயத்தில் அறுவை சிகிச்சை நடந்தது. ஆறு மாதங்கள்கூட முடியாத நிலையிலும் அவர் வேகமாக மாடிப் படிகளில் ஏறி, இறங்குகிறார். நடைப்பயிற்சி செய்கிறார். இதய நோயாளிகள் இப்படி மாடிப் படிகளில் ஏறி, இறங்குவது சரியானதா, உடல் ஏதேனும் அலெர்ட் சிக்னல் காட்டுமா... அப்போது எச்சரிக்கையாக வேண்டுமா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த இதயநோய் சிகிச்சை மருத்துவர் சு.தில்லைவள்ளல்.

மாரடைப்பு, பைபாஸ் அறுவை சிகிச்சை செய்த நோயாளிகள் உட்பட பெரும்பாலான இதய நோயாளிகள் மாடிப்படிகள் ஏறி இறங்கலாம். அறுவை சிகிச்சை முடிந்த ஐந்தாவது அல்லது ஏழாவது நாளில் டிஸ்சார்ஜ் செய்யும்போது, ஒரு மாடி ஏறி இறங்கிப் பார்த்த பின்னரே மருத்துவர்கள் நோயாளிகளை டிஸ்சார்ஜ் செய்வோம்.
சம்பந்தப்பட்ட நோயாளி, நிலையாக (Stable) இருப்பதாக மருத்துவர் சொல்லி, நடக்க அனுமதி அளித்திருந்தால், முதலில் 5 அல்லது 10 நிமிடங்கள் நடந்துவிட்டு, அதன் பின்னர் மருத்துவ மேற்பார்வையில் (Doctor Supervision) மற்றும் பிசியோதெரபி உதவியுடன் ஒரு மாடி ஏறி இறங்கிப் பழகலாம்.

மருத்துவமனையில் இதைப் பயிற்சி செய்த பிறகு, சம்பந்தப்பட்ட நபர், வீட்டிற்குச் செல்லும்போது ஒரு மாடி ஏறலாம். அதற்கு மேல் ஏறுவதற்கு மருத்துவ அனுமதி தேவை. சிலர், நன்றாக இருந்தால் இரண்டு மாடிகள் கூட ஏறலாம்.
இரண்டு மாடிகள் ஏறும்போது, இடைஇடையே தேவைப்பட்டால் ஓய்வெடுத்து ஏற வேண்டும். தொடர்ந்து ஒரே மூச்சில் ஏறக்கூடாது. ஒரு படி ஏறிவிட்டு சில நொடிகள் இடைவெளி விட்டு அடுத்த படி ஏறவும் அறிவுறுத்தப்படும்.
உங்கள் உறவினர், நடைப்பயிற்சி செய்வதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். அவர் அதை மருத்துவ ஆலோசனையோடு செய்கிறாரா என்று கேளுங்கள். நடைப்பயிற்சி செய்யும்போது அசாதாரண அறிகுறிகள் ஏற்பட்டால், அவர் உடனடியாக நடைப்பயிற்சியை நிறுத்த வேண்டும் என்பதை அறிவுறுத்துங்கள்.

மார்வலி (Chest Pain), மூச்சுத் திணறல் அல்லது மூச்சிறைப்பு, படபடப்பு (Palpitation), தலைச்சுற்றல் (Dizziness), அதிக வியர்வை (Excessive Sweating) போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால், உடனடியாக நிறுத்திவிட்டு, அதற்கான காரணத்தைக் கண்டறிந்து, சரிசெய்த பின்னரே மீண்டும் முயற்சி செய்ய வேண்டும்.
நடக்கும்போது மார்புவலி, மூச்சிறைப்பு அல்லது படபடப்பு வந்தாலோ, ரத்த அழுத்தம் (Blood Pressure) அல்லது இதயத் துடிப்பு சீராக இல்லாமல், கட்டுப்பாடின்றி இருந்தாலோ, சமீபத்தில் பக்கவாதம் (Stroke), இதயச் செயலிழப்பு (Heart Failure) அல்லது பைபாஸ் அறுவை சிகிச்சை செய்திருந்தால், மருத்துவ அனுமதியின்றி நடக்கக் கூடாது. இவற்றையும் உங்கள் உறவினருக்குப் பொறுமையாக எடுத்துச் சொல்லுங்கள்.

















