பழனி: எங்கும் அரோகரா முழக்கம்... கோலாகலமாக நடந்த வைகாசி விசாகம் தேரோட்டம் | Phot...
Doctor Vikatan: சாப்பிட்ட உடன் குளிக்கக் கூடாது என்பதற்கு விஞ்ஞானரீதியான காரணம் உண்டா?
Doctor Vikatan: பொதுவாகவே சாப்பிட்ட உடன் குளிக்கக்கூடாது என்பது காலங்காலமாகச் சொல்லப்படுகிற அறிவுரையாக இருக்கிறது. இது உண்மையிலேயே அறிவியல்ரீதியான அறிவுரையா அல்லது மூட நம்பிக்கையா... சாப்பிட்ட உடனே குளித்தால் செரிமானம் பாதிக்கப்படுமா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர் அபிராமி.

'உண்ட களைப்பு தொண்டருக்கும் உண்டு' என்பார்கள். சாப்பிட்ட பிறகு நம் உடல் மிகப்பெரிய ஆற்றல் சார்ந்த வேலையை, அதாவது ஆற்றலைச் செலவழிக்கத் தொடங்குகிறது. அந்த நேரத்தில் நாம் செய்யும் சில தவறுகள் ஒட்டுமொத்த உடல் நலனையும் பாதிக்கும். அதில் முதன்மையானது, சாப்பிட்ட உடனே குளிப்பது.
நாம் உணவை உட்கொண்டவுடன், அதைச் செரிக்க வைப்பதற்காக நம் உடலின் பெரும்பான்மை ஆற்றலும், ரத்த ஓட்டமும் வயிற்றுப் பகுதியை நோக்கிப் பாயும். இதனால் வயிற்றுப் பகுதியில் தற்காலிகமாக வெப்பம் அதிகரிக்கும். இந்த வெப்பமும், ரத்த ஓட்டமும் தான் செரிமான அமிலங்கள் (Digestive Enzymes) சீராகச் சுரப்பதற்கும், குடல் சுவர்கள் உணவிலுள்ள சத்துகளை உறிஞ்சுவதற்கும் உதவுகின்றன.
சாப்பிட்ட உடனே நாம் குளிக்கும் போது (குறிப்பாக, குளிர்ந்த நீரில்), உடலின் வெளிப்புற வெப்பநிலை சட்டென்று குறைகிறது. நம் உடல் எப்போதும் தன் வெப்பநிலையைச் சீராக வைத்திருக்க விரும்பும். எனவே, வெளிப்புற வெப்பநிலையைச் சமன் செய்வதற்காக, வயிற்றுப் பகுதியில் இருக்க வேண்டிய ரத்த ஓட்டம், திடீரென கை, கால்கள் மற்றும் சருமத்தின் மேல் பகுதிக்குத் திசைமாறிச் சென்றுவிடுகிறது. இதனால் செரிமானப் பகுதிக்குச் செல்லும் ரத்தத்தின் அளவு கணிசமாகக் குறைகிறது. வயிற்றுக்குத் தேவையான ரத்தம் கிடைக்காததால், ஜீரண செயல்பாடு மிகவும் மந்தமாகிறது. உணவானது வயிற்றில் நீண்ட நேரம் தேங்கிப்போகும்.
உணவு சரியாகச் செரிக்காததால் அது புளித்துப் போய், வயிற்று உப்புசம், கடுமையான நெஞ்செரிச்சல் (Acid Reflux), வாயுத் தொந்தரவு மற்றும் வயிற்று வலி ஆகியவற்றை ஏற்படுத்துகிறது. சாப்பிட்ட பிறகு இதயம் ஏற்கெனவே செரிமானத்திற்காகக் கூடுதலாக உழைத்துக் கொண்டிருக்கும். இந்நிலையில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் ரத்த நாளங்கள் சுருங்கி விரியும் போது, இதயத்திற்குக் கூடுதல் அழுத்தம் ஏற்படுகிறது.

ரத்த ஓட்டம் திடீரென உடலின் பிற பகுதிகளுக்குப் பாய்வதால், மூளை மற்றும் வயிற்றுப் பகுதிக்குச் செல்லும் ரத்த அழுத்தத்தில் மாற்றம் ஏற்பட்டு தலைச்சுற்றல், மயக்கம் அல்லது வாந்தி உணர்வு உண்டாகலாம். 'நான் குளிர்ந்த நீரில் குளிப்பதில்லை, வெந்நீரில் தான் குளிக்கிறேன், அதனால் சாப்பிட்ட பின் குளிக்கலாமா?' என்ற கேள்வி சிலருக்கு எழலாம்.
அதுவும் கூடாது. சுடுநீரில் குளிக்கும் போது உடலின் வெப்பநிலை உயர்கிறது. அதைச் சமன் செய்ய ரத்த நாளங்கள் விரிவடைந்து (Vasodilation), ரத்தம் சருமத்தின் மேற்பரப்பிற்குப் பாயும். எனவே, வெந்நீராக இருந்தாலும் செரிமானம் பாதிக்கப்படுவது உறுதி.
நம் உடல் சாப்பிட்ட உணவை ஓரளவாவது உடைத்து, செரிமானப் பாதையைச் சீரமைக்கக் குறைந்தது 30 முதல் 45 நிமிடங்கள் எடுத்துக்கொள்ளும். தினமும் சாப்பிடுவதற்கு முன்பே குளித்து முடிப்பது உடலுக்குக் சுறுசுறுப்பைத் தரும்... பசியைத் தூண்டும்.
தவிர்க்க முடியாத காரணங்களால் சாப்பிட்ட பின் குளிக்க வேண்டியிருந்தால், குறைந்தது ஒரு மணி நேரம் கழித்துக் குளிப்பதே பாதுகாப்பானது.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.




















