ரஜினிகாந்த் 75-வது பிறந்தநாள் விழா: போயஸ் கார்டனில் கொண்டாடிய ரசிகர்கள் | Photo ...
HBD Rajini: `ரஜினி பாதுகாக்கும் அந்த கடிதம் டு '16 வயதினிலே' சம்பளம்.!’ - 75 சுவாரஸ்ய தகவல்கள்!
இந்திய திரையுலகில் 50-வது ஆண்டை கொண்டாடுகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். பவர்ஃபுல்லான கண்கள்.. அறிமுகமான 'அபூர்வ ராகங்கள்' படத்திலிருந்து தனித்துவமான உடல்மொழி, விதவிதமான ஸ்டைல்கள், கவர்ந்திழுக்கும் வசன உச்சரிப்பு, இயல்பான நடிப்பு, எந்த வேடம் என்றாலும் அந்த வேடமாகவே அசத்தும் தன்மை ஆகியவற்றால் தமிழ் மக்களின் இதயங்களில் இடம் பிடித்தவர் ரஜினிகாந்த். அவரது திரையுலக வாழ்வில் நடந்த 75 சுவாரசிய தருணங்களை அவரது பிறந்தநாள் ஸ்பெஷலாக இங்கே பார்க்கலாம்!
1. ரஜினியை தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் சேர்த்த படம் '16 வயதினிலே'. அதில் அவர் 'பரட்டை' என்ற கதாபாத்திரத்தில் புது மாதிரியான வில்லத்தனம் செய்திருப்பார். 'இது எப்படி இருக்கு?' என்று இந்தப் படத்தில் ரஜினி பேசிய வசனம், இன்றும் பிரபலம்! அந்த படத்திற்கு ரஜினியின் சம்பளம் வெறும் 2,500 ரூபாய்தான்.
2. 'குரு சிஷ்யன்' பட சமயத்தில் ரஜினி தனது கதை கேட்கும் அறை முழுவதிலும் கண்ணாடிகள் பதித்து வைத்திருந்தார். அதில் அவர் முகத்தை அடிக்கடி பார்த்து, 'இந்த முகத்தை எப்படி இப்படி கொண்டாடுகிறார்கள்' என்று அவருக்குள் இருந்த சிவாஜி ராவுடன் மனம் விட்டுப் பேசிக் கொள்வதுண்டு. ரஜினியின் எளிமைக்கு இந்த ஒரு விஷயமும் காரணமாகும்.

3. ஒரு படத்தில் கமிட் ஆவதற்கு முன்னர் கதை மற்றும் ஸ்கிரிப்ட் விஷயத்தில் தனக்கு திருப்தியாகும் வரை தெளிவாக கேட்டுத் தெரிந்து கொள்வார். ஆனால், படப்பிடிப்பு என்று வந்த பின், இயக்குநரிடம் எந்தத் தலையீடும் இருக்காது. இசை வெளியீட்டு விழாவில் 'நெல்சன்', 'லோகேஷ்..' எனப் பெயர் சொல்லி அழைத்தாலும் ஷூட்டிங் ஸ்பாட்டில் 'டைரக்டர்' என்று மரியாதையுடன் அழைப்பார்.
4. ரஜினியின் வரலாறை பார்ப்போமா! பூர்வீகம் தமிழ்நாடு தான். கிருஷ்ணகிரி அருகே உள்ள நாச்சிக்குப்பத்தில் பிறந்த ராமோஜி ராவ் கெய்க்வாட்டிற்கும், கோவை அருகே உள்ள கிராமம் ஒன்றில் பிறந்த ராமாபாயிக்கும் 1950-ம் ஆண்டு டிசம்பர் 12-ம் தேதி பிறந்த மூன்றாவது மகன், சிவாஜி ராவ் என்ற இயற்பெயர் கொண்ட 'ரஜினிகாந்த்'. அவருக்கு இரு சகோதரர்களும், ஒரு சகோதரியும் உண்டு. ரஜினியின் தந்தை ராமோஜி ராவ் கர்நாடக காவல் துறையில் 'ஹெட் கான்ஸ்டபிள்' பதவி வகித்தவர். தனது மகனாவது காவல் துறையில் உயர் அதிகாரி ஆகவேண்டும் என்று அவர் ஆசைப்பட்டார். ஆனால் ரஜினியோ சிறு வயது முதலே நடிப்பின் மீது ஆர்வம் காட்டி வந்தார். வீட்டுக்கு தெரியாமல் சென்னை வந்து நடிக்க வாய்ப்பு தேடியும் அலைந்தும் இருக்கிறார். தன்னுடைய ஒன்பதாவது வயதிலேயே தாயை இழந்தவர் ரஜினி.
5. பெங்களூருவில் கண்டக்டர் வேலையில் இருந்த ரஜினி, வேலையை உதறாமல் நீண்ட விடுப்பு எடுத்துக்கொண்டு சென்னையில் நடிப்புப் பயிற்சி பெற்றிருக்கிறார். சென்னை அமைந்தகரையில் தங்கி தினமும் அண்ணா சாலையில் உள்ள பயிற்சி நிலையத்திற்கு பஸ்ஸில் சென்று வந்திருக்கிறார். அவர் பெங்களூருவில் இருந்த போது மூட்டை தூக்குவது, கூலி வேலை எனச் செய்திருந்தாலும் சென்னை வந்த பிறகு நடிப்பை கற்பதில் மட்டுமே கவனம் செலுத்தினார். அவரது செலவிற்கு நெருங்கிய நண்பர்கள் பணம் அனுப்பி அவரை கவனித்துக்கொள்வார்களாம்.
6. ரஜினி - இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் கூட்டணி பற்றி ஒருமுறை கே.பாலசந்தர் சொன்னது இது. ''நான் ரஜினி என்ற வைரத்தை கண்டுபிடிச்சேன். ஆனால் அந்த வைரத்தை பட்டை தீட்டியவர் எஸ்.பி.எம். தான்!'' என சொன்னதை, பத்ம விருதாக கருதுகிறார் எஸ்.பி.எம். அதைப் போல எஸ்.பி.எம். தனது மூத்த சகோதரர் என பாசமும் பிரியமுமாக சொல்வார் ரஜினி.

7. திரைப்பட கல்லூரியில் பயிலும் போது அங்கே நடந்த ஒரு விழாவில் இயக்குநர் சிகரம் கே. பாலச்சந்தரை சந்தித்தபின், ரஜினியின் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்பட்டது. 'அபூர்வ ராகங்கள்' படத்தின் மூலம் அறிமுகமானவர் ரஜினிகாந்த். 1975-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி அந்தப் படம் வெளியானது. ஒரு ஹோலி பண்டிகை நாளில்தான் சிவாஜி ராவுக்கு ரஜினி காந்த் என்று பெயர் சூட்டியிருக்கிறார் கே.பாலசந்தர்.
8. 'அபூர்வ ராகங்கள்' பட சமயத்தில் ரஜினிக்கு தமிழ் சரிவரத் தெரியாததால், வேறு யாரையாவது அவருக்கு குரல் கொடுக்கச் சொல்லலாம் என்று கே.பி.யிடம் சிலர் கூறினார்கள். ஆனால் பாலசந்தர் அதை ஏற்கவில்லை. 'ஒரிஜினல் வாய்ஸ்தான் வேண்டும்' என்று சொல்லி ரஜினியைப் பேச அழைத்திருந்தார். ரஜினி முதல் முறையாக டப்பிங் பேசினார். எப்படி உச்சரிக்க வேண்டும் என்று பாலசந்தர் சொல்லிக் கொடுத்தார். அதை அப்படியே வாங்கிப் பேசியதில் வியந்து விட்டார் கே.பாலசந்தர்.
9. இயக்குநர் கே. பாலசந்தரும் இயக்குநர் சங்கத்தின் 40 ஆண்டுகால விழாவில் ரஜினியிடம், "சிவாஜி ராவை நான் ரஜினிகாந்த் ஆக்கினேன். நீ சொந்த முயற்சியில் விஸ்வரூபம் எடுத்து அகிலம் போற்றும் நடிகனாகிவிட்டாய்! 'எந்திரன்' படத்துக்குப் பிறகு நீ மூன்று இமயமலை உயரத்திற்கு வளர்ந்துவிட்டாய்" என மெச்சிப் பாராட்டியிருப்பார்.
10. 1977-ம் ஆண்டில் 15 படங்களில் ரஜினி நடித்தார். அதில் சிவகுமார் ஹீரோவாக நடித்த 'கவிக்குயில்' படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் ரொம்பவே பேசப்பட்டது. அதே வருடத்தில்தான் எஸ்.பி.முத்துராமன் இயக்கிய 'புவனா ஒரு கேள்விக்குறி' படத்தின் மூலம், அதுவரை ஹீரோவாக நடித்த சிவகுமார் வில்லனாகவும், வில்லனாக நடித்து வந்த ரஜினி ஹீரோவாகவும் நடித்தனர். இத்திரைப்படம் ரஜினியின் கலைப்பயணத்தில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அதுவரை ஸ்டைல் வில்லனாக நடித்த ரஜினி, எல்லா வித ரோல்களுக்கும் பொருந்துவார் என்பது எல்லோருக்கும் புரிய வந்தது.

11. ஒரு காலகட்டத்தில் வருடத்திற்கு 5 தமிழ்ப் படங்கள், 2 அல்லது 3 இந்திப் படங்கள், சில தெலுங்குப் படங்கள் என நடித்துக் கொண்டிருந்த ரஜினி, பின்னர் நடிக்கும் படங்களின் எண்ணிக்கையை படிப்படியாகக் குறைத்துக் கொண்டார். 1986 தொடங்கி 1990 வரை ஆண்டுக்கு மூன்று தமிழ்ப் படங்கள் நடித்திருக்கிறார்.
12. 1995-க்குப் பிறகு ஆண்டுக்கு ஒரு படம் மட்டுமே நடிப்பது என்ற தன் முடிவை அறிவித்தார். எத்தனையோ பேர் வற்புறுத்தியும் கூட அதை மாற்றிக் கொள்ளவே இல்லை. 1995-ல் கே.பாலசந்தர் தயாரிப்பில் 'முத்து' வெளியானது. அடுத்த ஆண்டு எந்தப் படமும் வெளியாகவில்லை. ஒரு ஆண்டு இடைவெளி விட்டு 'அருணாசலம்' வெளியானது. மீண்டும் ஒராண்டு இடைவெளி. 1999-ல் 'படையப்பா'. அதன்பிறகு வெளியான 'பாபா' படத்தின் தோல்வியால், அடுத்த படத்தை வெளியிட மூன்றாண்டுகள் இடைவெளி எடுத்துக் கொண்டார் ரஜினி. பி.வாசுவின் இயக்கத்தில் 'சந்திரமுகி'யில் 'நான் யானை அல்ல குதிரை' என்று சொன்னதோடு விஸ்வரூபமெடுத்தார் ரஜினி!
13. ரஜினியின் 'சிவாஜி' படப்பிடிப்பில் ஷங்கரின் மேக்கிங் ஸ்டைலை கண்டு வியந்த ரஜினி ஷங்கரிடம், ''நானும் கமல் சாரும் சேர்ந்து ஒரு படம் பண்ணினால் எப்படியிருக்கும்.. கமலிடம் நானே பேசுறேன்'' என்று கேட்டிருக்கிறார். அதற்கு ஷங்கர் ''இரண்டு பேரும் கன்வின்ஸ் ஆகிற அளவிற்கு சப்ஜெக்ட் அமைந்தால் பண்ணலாம்'' என்றதோடு '2.0' படத்தை அப்படியான காம்பினேஷனில்தான் முதலில் நினைத்திருந்ததாக ஷங்கரே சொன்னதுண்டு.
14. ஜப்பானில் 'முத்து' படம் டப் ஆகி வெற்றி பெற்றதைப் போல, தமிழ்ப் படங்கள் ரஷ்ய மொழியிலும் டப் ஆகின்றன. முதல் படம் 'சந்திரமுகி'.
15. ரஜினி இந்திய சினிமா மட்டுமல்ல ஹாலிவுட் வரை பயணித்திருக்கிறார். 'Bloodstone' திரைப்படம்தான் ரஜினி நடித்த ஒரே ஆங்கிலப் படம்.

16. தனது ஆரம்பகாலத்தில் அவரிடம் பிரதிபலன் பார்க்காமல் உதவிய நண்பர்கள் அத்தனை பேருக்கும் சொந்த வீடு கட்டிக் கொடுத்துவிட்டார் ரஜினி. 'சூப்பர் ஸ்டார்' என்ற டைட்டில் வெளியான 'பைரவி' பட தயாரிப்பாளர் கலைஞானம் வரைக்குமே அவர் வீடு கட்டிக் கொடுத்திருக்கிறார்.
17. தனது சிறுநீரக அறுவை சிகிச்சையை அமெரிக்காவில் செய்துகொண்டார் ரஜினி. சென்னையில் உள்ள டாக்டர் ராஜன் ரவிச்சந்திரன் 2010-ம் ஆண்டில் நண்பரானவர். அவர் தான் 'சிறுநீரக அறுவை சிகிச்சை கட்டாயம் என்றும் இந்தியாவில் செய்தால் உங்களைப் பற்றிய செய்திகள் வந்து கொண்டிருப்பதைத் தவிர்க்க முடியாது. ஆகையால் அமெரிக்காவில் சிகிச்சை எடுத்துக்கொள்வோம்' என்று சொல்லி, ரஜினிக்கு சிகிச்சை செய்து வைத்தார்.
18. ரஜினியை வைத்து மகேந்திரன் இயக்கிய 'முள்ளும் மலரும்' இப்போதும் கல்ட் கிளாசிக் படம். ரஜினிக்கும் ரொம்பவும் பிடித்த படமிது. வில்லனாக பல படங்களில் நடித்துக் கொண்டிருந்த ரஜினியின் நடிப்பில் பெரும் நம்பிக்கை வைத்து 'முள்ளும் மலரும்' படத்திற்குள் அழைத்து வந்தவர் இயக்குநர் மகேந்திரன். ''படத்தின் தயாரிப்பாளர் ரஜினி வேண்டவே வேண்டாம் என்றார். ஆனால், ரஜினி இல்லையேல் இந்த படமே வேண்டாம் உறுதியாக சொன்ன பிறகுதான் தயாரிப்பாளர் ரஜினிக்கு 'ஓகே' சொன்னார்'' எனக் கூறியிருக்கிறார் மகேந்திரன்.
19. 'முள்ளும் மலரும்' பார்த்துவிட்டு இயக்குநர் பாலசந்தர் எழுதிய கடிதத்தை இப்போதும் பொக்கிஷமாகப் பாதுகாக்கிறார் ரஜினி!
20. ரஜினி முன்பு தன் கையில் அணிந்திருந்த காப்பு, நெல்லையைச் சேர்ந்த தன்னுடைய தீவிர ரசிகரான திருமாறன் என்பவருக்கு பரிசளித்துள்ளார்.

21. ரஜினியின் 171வது படமான ‘கூலி’ ‘ஏ’ சர்டிபிகேட் வாங்கியது. இதற்கு முன் அவரின் ‘சிவா’ படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் கிடைத்தது. இது தவிர ‘புவனா ஒரு கேள்விக்குறி’, ‘காயத்ரி’, ‘இளமை ஊஞ்சலாடுகிறது’, ‘அவள் அப்படித்தான்’, ‘என் கேள்விக்கு என்ன பதில்’, ‘ரங்கா’, ‘நெற்றிக்கண்’, ‘காளி’, ‘புதுக்கவிதை’, ‘மூன்று முகம்’, ‘பாயும் புலி’, ‘சிவப்பு சூரியன்’, ‘நான் மகான் அல்ல’, ‘கை கொடுக்கும் கை’, ‘நான் சிகப்பு மனிதன்’, ‘ஊர்க்காவலன்’, ‘கொடி பறக்குது’, ‘விடுதலை’ ஆகிய படங்கள் ‘ஏ’ சர்டிபிகேட் வாங்கிய படங்களாகும்.
22. ‘ஊர்க்காவலன்’ படத்தில் இருந்து தான் ரஜினின் ஹேர் ஸ்டைல் பிரபலமானது. ரஜினிக்கு முதன் முதலில் மேக்கப் டெஸ்ட் எடுத்தவர் கே.பாலசந்தரின் யூனிட்டில் உள்ள மேக்கப்மேன் சுந்தரமூர்த்தி ஆவார். ‘அபூர்வ ராகங்கள்’ படத்தில் இருந்து பல படங்களுக்கு சுந்தரமூர்த்திதான் மேக்கப்மேனாக இருந்திருக்கிறார். அதைப் போல எஸ்.பி.முத்துராமன் படங்களில் மேக்கப்மேன் முஸ்தபா இருந்தார். ‘சிவாஜி’யிலிருந்து உமன் பானு என்பவர் ஒப்பனையாளராக இருக்கிறார். ரஜினியின் தலைமுடி இப்படிக் கொட்டியதற்கு காரணமாக சுந்தரமூர்த்தி, “முள் மாதிரி உள்ள ஒரு பிரஷ்ஷால் தான் தலையை அவர் வாரிக்கொள்வார். ஷாட்டுக்கு ஷாட் அவர் அந்த பிரஷ்ஷில் வாரிவதும் தான், தலைமுடியின் வேர்கள் பாதிப்படைந்தது. அதுபோல அடிக்கடி ஹேர் டை அடித்ததும் ஒரு காரணம். அதனால் தான் அவருக்கு சீக்கிரமே முடி கொட்டியது” என்று ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார்.

23. ரஜினியின் படங்களுக்கு அனிருத் தான் தொடர்ந்து இசையமைத்து வந்தாலும், ரஜினிக்கும் இளையராஜாவிற்குமான நட்பு ஆழமானது. ராஜாவை ‘சாமி’ என்று தான் அழைப்பார் ரஜினி. ரமண மகரிஷியின் மகிமைகளை ரஜினிக்கு எடுத்துச் சொன்னதே இளையராஜா தான். அதன்பிறகே ரஜினியும் திருவண்ணாமலைக்கு அடிக்கடி போய் வந்தார். இப்போது மகள் ஐஸ்வர்யாவும் ஆன்மிகத்தில் ஈடுபாடாக உள்ளார்.
24. ரஜினிக்கு ‘சூப்பர் ஸ்டார்’ என்ற டைட்டிலில் வெளியான படம் ‘பைரவி’. ரஜினியைத் தனிக் கதாநாயகனாக முன்னிறுத்திய முதல் படமும் அதுதான். பாம்புடன் ரஜினியின் நட்பு இந்தப் படத்தில் தொடங்கி, பல படங்களில் தொடர்ந்தது. ஆனால் ரஜினி ஒரு பேட்டியில் தனக்கு பாம்பு என்றாலே பயம் என்று சொல்லியிருக்கிறார்.
25. ‘பைரவி’ படத்தின் விநியோகஸ்தரான கலைப்புலி எஸ். தாணு, ரஜினிக்கு 80 அடி உயர கட்-அவுட் ஒன்றைச் சென்னை அண்ணா சாலையில் அமைத்து ரஜினியையே வியக்க வைத்தார். அதைப் போல ‘கபாலி’ படத்திற்கு விமானத்திலும் விளம்பரம் செய்து சர்வதேச அளவில் ‘கபாலி’யைத் திரும்பிப் பார்க்க வைத்தவர் தாணு.
26. ‘பொல்லாதவன்’ படத்தில் நடித்துக்கொண்டிருந்த சமயத்தில் சென்னை எத்திராஜ் கல்லூரி மாணவிகள் சிலர் ஒரு சிறப்பிதழுக்கு ரஜினியைப் பேட்டியெடுக்க வந்தனர். அப்போது தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும் சரமாரியாகக் கேள்விகளைக் கேட்ட மாணவி ஒருவர் ரஜினியை அசத்தினார். அப்போது அவர், “உங்களுக்கு எப்போது திருமணம்?” என்ற கேள்வியைக் கேட்டார். அதற்கு ரஜினி, “உங்களைப் போல ஒரு பெண்ணைப் பார்த்தவுடன்!” என்று கூறிய பதில் மூலம் இருவருக்கும் காதல் மலர்ந்து பின்னர் திருமணத்தில் முடிந்தது. அந்தப் பெண் நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் மனைவியின் தங்கையான லதா. இவர்களின் திருமணம் 26.02.1981 அன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடந்தது.

27. அமிதாப்பின் தீவிர ரசிகர் ரஜினி. “சூரிய உதிப்பதற்கு முன் எழுந்து விடு. இந்தப் பழக்கம்தான் வாழ்க்கையில் இந்த இடத்தைத் தொட்டதற்கான காரணம்” என்று அமிதாப் ரஜினியிடம் ஒருமுறை சொன்னார். அதை இப்போது வரை கடைப்பிடிக்கிறார் ரஜினி. இன்றும் காலை ஆறு மணி ஷாட் என்றால், ஐந்தே முக்காலுக்கே படப்பிடிப்பு இடத்திற்கு வந்துவிடுகிறார் ரஜினி.
28. ரஜினியின் திரை வாழ்க்கையில் அவரை மனதளவில் பாதித்தது இரண்டு படங்களின் தோல்விகள். ஒன்று ‘ஸ்ரீராகவேந்திரர்’, இன்னொன்று ‘பாபா’. இரண்டுமே அவரது சொந்த விருப்பத்தின் பேரில் எடுக்கப்பட்ட படங்கள். ராகவேந்திரரை ரஜினிக்காக கே. பாலச்சந்தர் தயாரித்தார். பாபாவை ரஜினியே தயாரித்தார்.
29. ‘பாபா’ படத்தின் தோல்விக்குப் பிறகு தயாரிப்பின் பக்கமிருந்து முழுவதுமாக விலகினார் ரஜினி. ‘பாபா’ படத்திற்குப் பிறகு அவராகவோ, அவர் நண்பர்கள் மூலமாகவோ எந்தப் படத்தையும் அவர் தயாரிக்கவில்லை.
30. புத்தகங்கள் வாசிப்பதில் ரஜினி அலாதி இன்பம். ஆன்மிக சார்ந்த புத்தகங்கள் தொடங்கி பலவற்றை ரஜினி படிப்பாராம். அப்படி ‘பொன்னியின் செல்வன்’ கதையைப் படித்த ரஜினி அதில் வரும் நந்தினி கதாபாத்திரத்தின் குணாதிசயங்களை அடிப்படையாகக் கொண்டுதான் ‘படையப்பா’ நீலாம்பரி கேரக்டருக்கான ஐடியாவைப் பிடித்திருக்கிறார் ரஜினி.
31. தயாரிப்பு மட்டும் கிடையாது. ரஜினி திரைக்கதாசிரியர் முகமொன்றும் இருக்கிறது. அவர் தயாரித்த ‘வள்ளி’ படத்தின் திரைக்கதை ரஜினி எழுதியதுதான். அதுபோல, ‘படையப்பா’ படத்தின் கதை ஐடியாவும் ரஜினி எழுதியதுதான். அதற்கு இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் திரைக்கதை எழுதினார். அதுபோல, ‘பாபா’ படத்தின் திரைக்கதையை எழுதியதும் ரஜினிதான்.

32. இப்போது சூர்யாவிலிருந்து புது ஹீரோக்களின் பிறந்தநாள் வரை அவரது ரசிகர்கள் ரத்த தானம் செய்வது வாடிக்கை. ஆனால் ரஜினி ரசிகர்களும் ஒரு காலத்தில் ரத்த தானம் செய்து அசத்தியிருக்கிறார்கள். 25 முறைக்கு மேல் ரத்த தானம் செய்துள்ள ரசிகர்களுக்கு, தன்னுடைய கையெழுத்திட்ட சர்டிஃபிகேட் கொடுத்தும் இருக்கிறார் ரஜினி.
33. கே.பாலசந்தரின் இயக்கத்தில் 7 படங்களிலும் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் 23 படங்களிலும் நடித்திருக்கிறார் ரஜினி. அதில் ஏவிஎம் நிறுவனம் 7 படங்களைத் தயாரித்திருக்கிறது.
34. ரஜினியின் ‘அண்ணாமலை’ வெளியாகி 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. “அண்ணாமலை’ ரிலீஸின் போது ஜெயலலிதா அரசின் கெடுபிடிகளால் படத்திற்கு பெரியளவில் விளம்பரமே இல்லை. “ரஜினியின் செல்வாக்கை ஒன்றுமில்லாமல் செய்துவிட வேண்டும் என்ற ஜெயலலிதாவின் வாய்மொழி உத்தரவால் காவல் துறையும் இந்த விஷயத்தில் கறாராக நடந்துகொண்டது. ஆனால் படம் எல்லோராலும் கொண்டாடப்பட்டது. ரஜினிக்கு தமிழகத்தின் கிராமப்புறங்களில் இருந்த செல்வாக்கை, ரசிகர் பலத்தை ஜெயலலிதா தெரிந்துகொள்ள ஒரு வாய்ப்பாக இது அமைந்தது என்கிறார்கள் அவரது ரசிகர்கள்.
35. ‘ராகவேந்திரர்’ படத்தால் ஏற்பட்ட இழப்பைக் காட்டிலும் பல மடங்கு தனது குருநாதருக்கு திருப்பிக் கொடுத்துவிட்டார் ரஜினி. பாபாவினால் ஒருவர்கூட நஷ்டம் என்று சொல்லக் கூடாது என நினைத்த ரஜினி, படம் வெளியான சில நாட்களிலேயே படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் அனைவருக்கும், அவர்கள் நஷ்டம் என்று குறிப்பிட்ட தொகைக்கு மேல் சில லட்சங்களைச் சேர்த்துத் திருப்பிக் கொடுத்துவிட்டார். திரையுலக வரலாற்றில் இப்படியொரு நிகழ்வு எங்கும் நடந்ததில்லை, எந்த நடிகரும் செய்ததில்லை எனும் அளவுக்கு ஒரு செயலைச் செய்துகாட்டினார் ரஜினி.
36. கமலின் ‘நாயகன்’ படம் பார்த்துவிட்டு ரொம்பவே வியந்துவிட்டார் ரஜினி. அன்றே கமலுக்கு போன் செய்து, “மூன்று பெக்கை விட (அப்போது அவருக்கு மது பழக்கம் இருந்தது) வேலுநாயக்கர் போதை அதிகமாக இருந்தது” என்று சொல்லி ‘நாயகன்’ படத்தை சிலாகித்துப் பாராட்டியிருக்கிறார் ரஜினி.
37.ரஜினியின் 25-வது ஆண்டு கொண்டாட்டத்தின் போது விஜய்யின் வாழ்த்து போஸ்டரிலும் வெளியானது. அதில் அவர் ‘தலைவா திரையுலகில் நீ கால் பதித்து இது 25-வது ஆண்டு. உன்னுடைய 50-வது திரையுலக வாழ்க்கையிலும் இதைப் போல பூச்செண்டு கொடுத்து மகிழ இறைவனை வேண்டுகிறேன். பிரியமுடன் உங்கள் ரசிகன் விஜய்’ என்று வாழ்த்தியிருந்தது பலருக்கும் நினைவில் இருக்கலாம்!

38. ‘பாபா’ படப்பிடிப்பின் போது ஒரு சம்பவம். பாடல் எழுதுவது தொடர்பாக வைரமுத்துவை அழைத்திருக்கிறார் ரஜினி. பளீர் வெள்ளை உடையில் வந்திருந்த வைரமுத்துவின் கால்களை கவனித்தார் ரஜினி. அந்த வெண்மை உடைக்கு கொஞ்சமும் பொருத்தம் இல்லாத காலணிகளை அணிந்திருந்தார் வைரமுத்து. உடனே தன் உதவியாளரிடம் வெள்ளை காகிதமும், பேனாவும் எடுத்து வரச் சொல்லி, அதை வைரமுத்துவிடம் கொடுத்து ‘உங்கள் காலுக்கான அளவை கொடுங்கள். பொருத்தமான காலணிகளை அனுப்புகிறேன்’ என்று சொல்லியிருக்கிறார் ரஜினி. இதில் ஆச்சரியமான வைரமுத்து, காலணிகளின் அளவுகளை கொடுத்துவிட்டு ‘பாபா’ பாடல் பதிவிற்காக நேரடியாக ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்டூடியோவிற்குள் சென்று சேருவதற்குள் அவருக்கு புது காலணிகள் அனுப்பி வைத்து வியக்க வைத்திருக்கிறார் ரஜினி.
39. இதே போல, ‘ஜெயிலர்’ படத்தின் ஒரு காட்சியில் நடிப்பதற்கு ஜூனியர் ஆர்டிஸ்ட் ஒருவர் அழைத்து வரப்பட்டிருக்கிறார். ஆனால், அவரிடமிருந்து திருப்திகரமான நடிப்பு வராததனால் அவரைத் திருப்பி அனுப்ப யோசித்திருக்கிறார்கள். அந்த சமயத்தில் ரஜினி, “அவர் அவருடைய வீட்டாரிடம் ரஜினி படத்தில் நடிக்கப் போவதாக ஆசையுடன் சொல்லிவிட்டு வந்திருப்பார். அவர் டைலாக் பேசவில்லை என்றாலும் பரவாயில்லை, அவர் தோள் மீது நான் கையை வைத்து நிற்கிறேன்” எனக் கூறி அவரை நடிக்க வைத்திருக்கிறார். ரஜினியின் இந்த பெருந்தன்மை செயல் குறித்து அந்த ஜூனியர் ஆர்டிஸ்ட் நெகிழ்ந்துப் பேசியிருக்கிறார்.
40. ‘தளபதி’ படத்தில் ரஜினியின் நடிப்பு பிரமாதமாகப் பேசப்படும். மேக்கப் கூட இல்லாமல் இயல்பாக நடித்ததுடன் அவரது தோற்றமும் இயல்பானதாக அமைந்திருக்கும். அதன் படப்பிடிப்பின் போது பல நாட்கள் மணி ரத்னம் எதிர்பார்ப்பிற்கேற்ப நடித்துவிடுவது என ரஜினி முடிவு செய்துவிட்டார். மணிரத்னத்திடம் ‘நீங்கள் நடித்துக் காண்பித்து விடுங்கள் அதை அப்படியே செய்து விடுகிறேன்’ என்று சொல்லிவிட, மணியும் பல காட்சிகளில் நடித்துக் காட்டியிருக்கிறார். ரஜினியும் அதை அப்படியே உள்வாங்கி வெளிப்படுத்தினார்.

41. சுவாமி ரமா எழுதிய ‘Living with the Himalayan Masters’ ஆன்மிக புத்தகத்தைப் படித்த பிறகு இமயமலை மீது ரஜினிக்கு தீராக் காதல் பிறந்தது. அதன் பிறகே அவர் அடிக்கடி இமயமலை பயணம் செய்ய ஆரம்பித்தார். அந்தப் பயணத்தில் தான் ‘என்னை நான் நாடிச் செல்கிறேன்’ என்பார்.
42. எப்போதும் அவருடைய பட ரிலீஸுக்கு முந்தைய நாள் இமயமலைக்கு ஆன்மிக பயணம் கிளம்பி விடுவார். அதுபோல, இந்தாண்டு ‘கூலி’ பட ரிலீஸுக்கு முந்தைய நாள் கிளம்பிவிடலாம் எனத் திட்டமிட்டிருக்கிறார் ரஜினி. ஆனால், அந்த சமயம் நிலச்சரிவு ஏற்பட்டதால் பயணத்தை அக்டோபர் மாதத்திற்குத் தள்ளிவைத்துச் சென்று வந்தார்.
43. ரஜினி வருடத்திற்கு பத்து படங்களுக்கு மேல் நடித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் அவரிடம் ‘நீங்கள் அடுத்த பிறவியில் யாராகப் பிறக்க விரும்புகிறீர்கள்?’ என்று கேள்வி கேட்டார்கள். அதற்கு ரஜினி சொன்ன பதில் இதுதான். “இந்த பிறவியையே கடைசி பிறவியாக்கிக் கொள்ள முயற்சி பண்ணிக்கிட்டிருக்கேன். சத்தியமா! அடுத்த பிறவியே வேண்டாம்” என்று ஆணித்தரமாக சொல்லிவிட்டார்.
44. ரஜினியின் எளிமையும், பண்பும் பணிவும் இப்போதும் வியக்க வைக்கும். “இதையெல்லாம் சிவாஜி ராவ்விடமிருந்து கற்றுக்கொண்டேன்” என்பார். அவர் கண்டக்டராக இருந்த போது அணிந்த யூனிஃபார்ம்களை இப்பவும் பொக்கிஷமாகப் பாதுகாத்து வைத்துள்ளார்.

45. ரஜினியின் பள்ளிக் கால நண்பர்களை பெங்களூரு செல்லும்போது சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அவர்களில் ரஜினிக்கு ஆங்கிலம் பேசக் கற்றுத் தந்தவர், குண்டண்ணா என்பவர்தான்.
46. முன்பெல்லாம் ரஜினி தன்னோட பிறந்த நாளின் போது இமயமலைக்கோ அல்லது பெங்களூருவுக்கோ செல்வதை வழக்கமாக வைத்திருப்பார். அன்று ரசிகர்களைச் சந்திப்பதை தவிர்த்துவிடுவார். அதாவது அவர் சென்னையில் இருந்தாலும் கூட அன்று ரசிகர்களைச் சந்திப்பதை மறுத்து விடுவார். இதற்கு அவர் கூறும் காரணம் என்ன தெரியுமா? “என் பிறந்தநாளில் வெளியூரில் இருந்து ரசிகர்கள் வந்து பார்க்க விரும்பும் போது அவங்களுக்கு பணம் செலவாகிறது. தவிர அவங்க பஸ், வேன்கள், லாரிகளில் வருவதனால் சில சமயம் விபத்துகள் ஏற்பட்டுள்ளது. அதில் சிலர் மரணமடைந்துள்ளார்கள். இன்னொரு முக்கியமான விஷயம் இதனால் பொதுமக்களுக்கு இடைஞ்சல் நிறைய வருது” என்பது போன்ற காரணங்களினால் தான் ரசிகர்களைச் சந்திப்பதை பிறந்த நாளின் போது மறுத்து வந்தார் என்கிறார்கள்.
47. ‘பாட்ஷா’ படத்தின் திரைக்கதையை வெகுவாகப் பாராட்டியிருக்கார். ‘ஸ்கிரிப்ட்டிலேயே பிரமாதமான ஸ்கிரிப்ட் ‘பாட்ஷா’ தான்’ என்று சொல்லியிருக்கிறார். ஆனால் ‘பாட்ஷா 2’ பண்ணுவதில் ரஜினிக்கு விருப்பம் கிடையாது. அதற்கு அவர் சொல்லும் காரணம், “இப்பெல்லாம் ஆக்ஷன் ஹீரோவுக்காகக் கதை பண்றாங்க. ஆனால் ‘பாட்ஷா’ படத்தில் அந்த கேரக்டரிலே ஆக்ஷன் இருக்கும். நெகிழ வைக்கற ஒரு எமோஷன் இருக்கும். அந்த எமோஷனை மறைத்து வைத்து நகைச்சுவையும், தியாகமுமாக இருக்கற அந்த கதாபாத்திரம் அதுல அமைந்து வந்தது. அதனாலதான் அந்த படத்தை மேஜிக் என்கிறோம்” என்று ரஜினி ஒரு முறை சொல்லியிருக்கிறார்.
48. பள்ளியில் படிக்கும்போது ‘சான்கான்’, ‘எச்சம்மா நாயகா’ ஆகிய நாடகங்களில் நடித்திருக்கிறார். பள்ளிப் பருவத்தில் நண்பர்களுடன் ‘ப்ரெண்ட்லி ஃபைட்டிங்’ செய்வதிலும் ரஜினிக்கு ஆர்வம் அதிகம்.

49. “ஆன்மீகம், அரசியல் ரெண்டையுமே ஒப்பிட முடியாது. ரெண்டுமே பாம்பும், கீரியும் போல..” என்பது ஒரு சமயம் அவரது கருத்தாக இருந்தது. ரஜினி அரசியல் கட்சி ஒன்றில் சேரப் போகிறார் என்று 90 காலகட்டங்களில் பேச்சு வந்த போது, “அப்படி எந்த கட்சியிலும் சேர மாட்டேன். ஆரம்பித்தால் தனிக் கட்சி தான்” என்று ரசிகர்களிடம் வெளிப்படையாகவே சொன்னதும் உண்டு.
50. 1978-ம் ஆண்டில் மட்டும் தமிழ், தெலுங்கு, கன்னடம் என 3 மொழிகளில் சேர்த்து 21 படங்களில் நடித்தவர் ரஜினிகாந்த்.
51. கமலின் ‘இந்தியன்’ படத்தில் முதலில் நடித்திருக்க வேண்டியவர் ரஜினி தான். ‘இந்தியன்’ படத்தின் திரைக்கதை முழுமையாகத் தயாராகாத சூழலில் அதில் ரஜினியிடம் நடிக்கக் கேட்டார் ஷங்கர். ஆனால் ஏனோ ரஜினி தயங்கினார். அதன்பிறகு கமலை வைத்து ‘இந்தியன்’ எடுத்துவிட்டு ரஜினியிடம் போட்டுக் காட்டியிருக்கிறார் ஷங்கர். ‘சூப்பர்...’ என்று வியந்து பாராட்டிய ரஜினி, ‘நீங்க என்னிடம் கதை சொல்லும் போது இப்படிச் சொல்லவில்லையே’ என்று ஃபீலிங்காகச் சொன்னதும் உண்மை!
52. ரஜினி கல்லூரியில் சேரும்போது அவரும் அவருடைய தந்தையும் கையெழுத்திட்ட அட்மிஷனுக்கான ரெஜிஸ்டரை இப்போதும் பாதுகாத்து வருகிறார், ரஜினி படித்த ஏ.பி.எஸ் கல்லூரியின் முதல்வர் சுதர்சன்.

53. குடும்ப விஷயம், பொதுக் காரியம் என எதுவாக இருந்தாலும் அவருடைய அண்ணன் சத்யநாராயணராவிடம் கலந்து பேசாமல் எதையும் செய்யவே மாட்டார்.
54. எந்த மேடைக்குச் சென்றாலும் அங்கும் அவருடைய நண்பர் ராஜ்பகதூரின் பெயரை ரஜினி உச்சரிக்க மறந்தது கிடையாது. அவருடன் இணைந்து பல கோவில்களுக்கு செல்வதை ரஜினி எப்போதும் விரும்புவார்.
55. கருப்பு வெள்ளை, கலர், 3டி, மோஷன் கேப்சர் என சினிமாவின் அனைத்து பரிமாணங்களிலும் நடித்த ஒரே இந்திய நடிகர், ரஜினிகாந்த்.
56. ரஜினியின் தீவிரமான ரசிகர்களில் ஒருவர் சந்தானம் இங்கே ரஜினியின் நகைச்சுவை உணர்வைப் பகிர்கிறார். சந்தானம் காமெடியனாக நடித்துக் கொண்டிருந்த போது ‘எந்திரன்’ வாய்ப்பு வர, கனவு நனவான சந்தோஷத்தில் மிதந்தார் சந்தானம். ரஜினியை நேரில் பார்த்த ஆச்சரியத்தில் ஷாட்டின் போதும் ரஜினியையே வியந்து பார்த்துக்கொண்டிருந்தார் சந்தானம். உடனே ரஜினி, ‘என்னாச்சு சந்தானம்?’ எனக் கேட்க, ‘உங்களோட நடிப்பைப் பார்த்துக்கிட்டே இருக்கணும் போல இருக்கு சார்’ என்று சொல்லியிருக்கிறார். உடனே ரஜினி சொன்னதுதான் ஹைலைட். ‘நான் நடிச்சதை நீங்க பார்த்துட்டீங்க. நீங்க நடிக்கறதை நான் பார்க்கணுமில்லையா.. அதற்காகவாவது நடிங்க’னு என்று ரஜினி டைமிங்காகக் கலாய்த்ததை இப்பவும் சொல்லி மகிழ்வார் சந்தானம். ‘எந்திரன்’ பிறகு ‘லிங்கா’விலும் ரஜினியுடன் நடித்திருந்தார் சந்தானம்.

57. அவர் மூன்று கெட்டப்களில் நடித்த முதல் படம் ‘அலெக்ஸ் பாண்டியன்’ தான்.
58. அதைப் போல அவர் முதன்முதலாக நடிக்கும் இரண்டாம் பாகம் படம் என்றால் அது ஜெயிலர்தான்.
59. இதுவரை அமிதாப் பச்சன் நடித்த 11 படங்களை தமிழில் ரஜினி ரீமேக் செய்திருக்கிறார்.
60. சினிமாவில் அப்டேட் ஆக இருப்பார். தமிழில் கவனம் ஈர்க்கும், வெற்றியை குவிக்கும் படங்களைத் தவறாமல் பார்த்துவிடுவதுடன், சம்பந்தப்பட்ட நடிகர்கள், ஹீரோக்களை நேரில் கூப்பிட்டும் பாராட்டிவிட்டுவார். அதைப் போல படப்பிடிப்பில் சக நடிகர்கள் நன்றாக நடித்தால் ‘சூப்பர்.. சூப்பர்’ என மனம்விட்டுப் பாராட்டுவார். மானிட்டரில் அவரைப் பார்க்க நேர்ந்தால், ‘ரொம்ப அழகா காட்டியிருக்கீங்க’ என ஒளிப்பதிவாளர்களையும் பாராட்டுவது வழக்கம்.

61. ரஜினிக்கு இரண்டாவது இன்னிங்கை கொடுத்த படம் ‘சந்திரமுகி’. பி.வாசு இயக்கத்தில் 2005-ம் ஆண்டு வெளியான ‘சந்திரமுகி’ சென்னை சாந்தி திரையரங்கில் 800 நாட்களுக்கு மேலாக ஓடி சாதனைப்படைத்தது.
62. கே.பாலசந்தர் - ரஜினி கூட்டணியில் உருவான ‘தில்லு முல்லு’ படத்தின் திரைக்கதையை எழுதியவர் மறைந்த இயக்குநர், நடிகர் விசு. அவர் ரஜினியைப் பற்றி சொல்லும் போது “இயக்குநர்களின் நடிகர் என்பார்களே… அதற்கு மிகச் சிறந்த உதாரணம் ரஜினிகாந்த். தனது யோசனையைக் கூட இயக்குநர் அனுமதி இல்லாமல் காட்சியில் திணிக்காதவர். அதே நேரம் அவர் சொல்லும் யோசனை நிராகரிக்க முடியாததாக இருக்கும். நான் அவருக்காக 10 படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதியிருக்கேன். அதைவிட அதிகமான படங்களில் உடன் நடிச்சிருக்கேன். அந்த அனுபவத்தில் சொல்கிறேன். இந்த நூற்றாண்டின் ஒப்பற்ற கலைஞன் அவர்.” என்பார் விசு.
63. தமிழ் – அபூர்வ ராகங்கள், மலையாளம் – அலிபாபாவும் அற்புத விளக்கும், தெலுங்கு – அந்துலேனி கதா, கன்னடம் – கதா சங்கமம், பெங்காலி – பாக்யா தேவதா, இந்தி – அந்த கானூன், ஆங்கிலம் – பிளட்ஸ்டோன், அந்தந்த மொழிகளில் ரஜினிகாந்த் அறிமுகமான படங்கள்.
64. ரஜினியின் படங்களில் தீபாவளிக்குத் திரையைத் தொட்ட படங்களில் சில ‘மூன்று முடிச்சு’, ‘ஆறு புஷ்பங்கள்’, ‘தப்பு தாளங்கள்’, ‘தாய் மீது சத்தியம்’, ‘பொல்லாதவன்’, ‘ராணுவ வீரன்’, ‘தங்க மகன்’, ‘நல்லவனுக்கு நல்லவன்’, ‘மாவீரன்’, ‘அன்னை ஓர் ஆலயம்’, ‘மனிதன்’, ‘கொடி பறக்குது’, ‘மாப்பிள்ளை’, ‘தளபதி’, ‘பாண்டியன்’, ‘முத்து’, ‘அண்ணாத்த’ என ஒரு பட்டியல் உண்டு.

65. ரஜினியின் போயஸ் கார்டன் வீட்டிலேயே மினி அலுவலகம் ஒன்று இருக்கிறது. அவருக்கு வரும் கடிதங்கள், போன்கள், தகவல்களை குறித்து வைத்துக்கொண்டு, அன்றே ரஜினி தகவல்களை கேட்டறிந்து கொள்வார்.
66. முன்பு ஃபியட், இன்னோவா என்று எளிமையான கார்களிலேயே பயணம் செய்து வந்தவர், பேரன்களின் வரவுக்கு பின்னர் அவர்களுக்காக சொகுசு கார்களிலும் பயணம் செய்கிறார்.
67. ரஜினியும் கமலும் இதுவரை 17 படங்களில் இணைந்து நடித்திருக்கிறார்கள். இவர்கள் கடைசியாக இணைந்து நடித்தப் படம் ‘தில்லு முல்லு’. கூடிய விரைவில் அவர்கள் இருவரும் இணைந்து நடிக்க இருப்பதாகத் தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன.

68. ரஜினியை வைத்து ‘லால் சலாம்’ படத்தை இயக்கிய மகள் ஐஸ்வர்யா தன் அப்பாவைப் பற்றி சொன்னது இது. “ஆரம்ப காலங்களில் கே.பாலசந்தர் சார், மகேந்திரன் சார்னு அப்பாவை ஒவ்வொரு ஃப்ரேமிலும் செதுக்கி செதுக்கி இயக்கியிருப்பாங்க. இப்போ கார்த்திக் சுப்புராஜ் மாதிரி இயக்குநர்கள் ஒரு ரசிகராக அப்பாவைத் திரையில் கொண்டாடுறாங்க. அப்படி நானும் சூப்பர் ஸ்டார் ரசிகைதான். இந்தப் படத்துக்குள்ள அப்பா வந்த பிறகு, அவரை எப்படிக் காட்டப்போறோம்ங்கிறதே பெரிய சவாலா இருந்தது. ஒரு இயக்குநராக இல்லாமல் ‘அவரோட பொண்ணு அவரைப் படத்துல எப்படிக் காட்டப்போறாங்க?’ன்னு பலத்த எதிர்பார்ப்பு இருந்துச்சு. ஒரு ரசிகையா சொல்றேன், எனக்கு ரஜினிகாந்தை ஒரு பெர்ஃபார்மரா தெரியும் என்பதால் அவரை மாஸா காண்பிக்கறதை விட, ஒரு பெர்ஃபாமரா ‘லால் சலாம்’ல காட்டணும்னு நினைச்சேன். இதுல அவரோட அசாத்திய நடிப்பை கூட இருந்து பார்க்க முடிந்ததை பெருமையாகவும் நினைக்கிறேன்.” என்கிறார் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.
69. திரையுலகில் தனது 47வது ஆண்டை எளிமையான முறையில் வீட்டில் கேக் வெட்டிக் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறது ரஜினியின் குடும்பம். மகள்கள் ஐஸ்வர்யா, சௌந்தர்யா ஏற்பாட்டில் ‘47 years of rajinism’ என்ற பெயரில் வீட்டிலேயே பேனரெல்லாம் வைத்துக் கொண்டாடினார் ரஜினி.
70. 2014-ம் ஆண்டு வெளியான ‘லிங்கா’ திரைப்படம் மட்டுமே ரஜினி பிறந்தநாளில் வெளியான ஒரே திரைப்படம்.

71. தன்னிடம் நீண்ட காலமாக உதவியாளர்களாக இருப்பவர்கள் பலருக்கு அவர்களது பெயரில் சில லட்சங்களை டெபாசிட் செய்ததுடன், அதிலிருந்து கிடைக்கும் வட்டியைச் செலவு செய்துகொள்ளலாம். டெபாசிட் தொகையை எடுக்க வேண்டுமென்றால் ஊழியர்களின் குழந்தைகளின் மேற்படிப்பு மற்றும் திருமணத்தின் போது எடுத்துக்கொள்ளலாம் என்ற வகையில் உதவி செய்திருந்தார் ரஜினி. அதைப் போல ஊழியர்களுக்கு கேளம்பாக்கத்தில் கால் கிரவுண்ட் நிலங்களையும் அவர்களுக்கு கொடுத்திருக்கிறார்.
72. 70 களிலிருந்து இப்போது வரை, அந்தந்த காலகட்டத்தில் முக்கியமான இயக்குநர்களாக விளங்கிய அனைவருடனும் பணியாற்றிய பெருமைக் கொண்டவர் ரஜினி.
73. 'முள்ளும் மலரும்' பார்த்துவிட்டு இயக்குநர் பாலசந்தர் எழுதிய கடிதத்தை இப்போதும் பொக்கிஷமாகப் பாதுகாக்கிறார் ரஜினி
74. ரஜினிக்குத் தெரிந்த மொழிகள் தமிழ், ஆங்கிலம், கன்னடம், மராத்தி, மலையாளம், ஹிந்தி, தெலுங்கு.

75. சினிமா நகைச்சுவையில் ரஜினிக்கு இஷ்டமானவர் வடிவேலு. அவ்வப்போது அவருடன் பேசிச் சிரிப்பார். 'உங்ககிட்ட பேசினா, எனக்குப் புதுசா ரீ-சார்ஜ் பண்ணின மாதிரி இருக்கு வேலு' என்பார்!


















