``IIT மெட்ராஸ் பறை குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும்'' - விருதுநகரில் பறை இச...
``என் தந்தை 3 அடி, நான் 2 அடி'' - மூன்று முறை போராடி பேராசிரியர் வேலையை பெற்ற குஜராத் பெண்
ஊனம் ஒரு தடையில்லை என்று கருதி எத்தனையோ பேர் சாதித்து இருக்கிறார்கள். அந்த வரிசையில் குஜராத்தைச் சேர்ந்த, வெறும் 2 அடி உயரம் உள்ள ஒரு பெண் சாதித்து இருக்கிறார்.
குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்தவர் விருதானி பட்டேல் (28). குழந்தை பருவத்தில் இருந்தே படிப்பில் மிகவும் திறமைசாலியான விருதானி, உயரத்தில் மிகவும் குறைவாக இருந்தார்.
வெறும் 2 அடி உயரமே உள்ள விருதானி பள்ளி பருவத்தில் இருந்தே நன்றாக படித்தார். இரு சக்கர வாகனத்தில் கூட ஸ்டூலை போட்டுத்தான் ஏறி அமரும் அளவுக்கு உயரம் குறைவாக இருந்த விருதானி, தனது உயரத்தைப் பற்றி கவலைப்படாமல் படிப்பில் கவனம் செலுத்தினார்.

அவருக்கு சக மாணவர்கள் மிகவும் உதவியாக இருந்தனர். இதனால் பி.காம் முடித்துவிட்டு, சூரத்திலேயே எம்.காம் முடித்தார்.
சமீபத்தில் பி.எச்.டி படிப்பை முடித்து முனைவர் பட்டத்தையும் பெற்றார். அதனை தொடர்ந்து குஜராத் அரசு கல்லூரியில் வேலைக்கு விண்ணப்பித்தார். ஆனால் அவரது உயரத்தை காரணமாக காட்டி அவருக்கு வேலை மறுக்கப்பட்டது. மூன்று முறை போராடிய பிறகு நான்காவது முறையாக அரசு கல்லூரியில் வேலைக்கு சேர்ந்திருக்கிறார்.
இது குறித்து விருதானி கூறுகையில், “எனக்கு 1.5 வயது இருக்கும்போதே எனது பெற்றோர் பிரிந்துவிட்டனர். எனது தந்தைதான் என்னை வளர்த்தார். அவரும் 3 அடி உயரம் தான் இருப்பார். நான் இந்த அளவுக்கு சாதிப்பதற்கு எனது தந்தை கொடுத்த ஊக்கம் காரணமாகும்.
எனவே எனது வெற்றியை எனது தந்தைக்கு சமர்ப்பிக்கிறேன். நான் எப்போது சோர்வாக இருந்தாலும், சமுதாயத்தில் உரிமைக்காக போராட வேண்டும் என்று எனக்கு ஊக்கம் கொடுப்பார்.

எனக்கு ஆரம்பத்தில் டாக்டராக வேண்டும் என்று விருப்பம் இருந்தது. ஆனால் எனது தந்தை என்னை காமர்ஸ் பிரிவில் படிக்க வழி நடத்தினார்.
எனவே, மருத்துவர் கனவை மறந்துவிட்டு, எம்.காம் படித்து முடித்தேன். அதோடு சமீபத்தில் பி.எச்.டி முடித்து, எனது கனவை நிறைவேற்றிக்கொண்டேன். எனது தந்தை டியூஷன் கிளாஸ் நடத்தி வந்தார்.
நானும் அவருக்கு துணையாக டியூஷன் கிளாஸ் எடுக்க ஆரம்பித்தேன். 200க்கும் அதிகமான மாணவர்கள் தேர்ச்சி பெற பயிற்சி பெற்றனர்.
நான் டியூஷன் கிளாஸில் பாடம் நடத்துவதற்கு வசதியாக சிறப்பு மேடை அமைக்கப்பட்டது. கல்லூரியில் பேராசிரியர் வேலையில் சேருவதற்காக 7 கல்லூரிகளில் நேர்காணலுக்கு சென்றேன். ஆனால் எங்கேயும் வேலை கிடைக்கவில்லை.
குஜராத்தில் மாற்றுத்திறனாளிக்கான இடஒதுக்கீடு அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் பேராசிரியர் வேலைக்கு விண்ணப்பித்தேன்.
மூன்று முறை எனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இறுதியாக நான்காவது முறையாக நான் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டேன்.

சமுதாயத்தில் என்னைப் போன்ற மாற்றுத்திறனாளிகள் கூட என்னால் பேராசிரியராக வர முடியாது என்று நினைத்தனர். அதோடு குறைவான உயரம் காரணமாக மாணவர்களை சமாளிக்க முடியாது என்றும் எண்ணினர். ஆனால் என்னால் மாணவர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்த முடியும்போதே, அவர்களை சமாளிக்கவும் முடிந்தது.
எனது உயரம் காரணமாக எனக்கு டிரைவிங் லைசென்ஸ் கொடுக்க மறுத்தார்கள். நான் மூன்று ஆண்டுகள் போராடிய பிறகு, 2023ஆம் ஆண்டில் டிரைவிங் லைசென்ஸ் பெற்றேன்.
அதன் பின்னர் முதல் நான் கார் ஓட்டிக்கொண்டிருக்கிறேன். இப்போது எனக்கு வேலை கிடைத்திருக்கும் அகமதாபாத் கல்லூரிக்கு தினமும் காரில் சென்று வருகின்றேன்” என்று தெரிவித்தார். திறமை இருந்தால் சாதிக்க உயரம் ஒரு தடை அல்ல என்பதை இப்பெண் நிரூபித்து இருக்கிறார்.


















