``25 வருடங்களாக ஷூட்டிங், வீடு என்றுதான் வாழ்ந்து வருகிறேன்'' - மனம் திறந்த நடிக...
ஈரோடு: `தவெக விஜய் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கிடைக்குமா? இல்லையா?' - எதிர்பார்ப்பில் தொண்டர்கள்
அதிமுகவில் ஏற்பட்ட முரண்பாட்டால் அக்கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட மூத்த நிர்வாகி செங்கோட்டையன், தவெகவில் அண்மையில் இணைந்தார்.
தவெகவில் அவருக்கு கட்சியின் தலைமை நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து, மேற்கு மண்டலத்தில் தவெகவை வளர்க்கும் பணியில் செங்கோட்டையன் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
அதிமுகவில் தன்னுடைய ஆதரவாளர்களாக இருந்தவர்கள் மற்றும் அக்கட்சி நிர்வாகிகளை தவெகவில் இணைப்பதில் முனைப்புக் காட்டி வருகிறார்.
தனது பலத்தை நிரூபிக்கும் வகையில் ஈரோட்டில் தவெக தலைவர் விஜயை அழைத்து வந்து பிரமாண்ட பொதுக்கூட்டத்தை நடத்த செங்கோட்டையன் திட்டமிட்டுள்ளார்.
இதற்காக, ஈரோடு மாவட்டம் பவளத்தான்பாளையத்தில் டிசம்பர் 16ஆம் தேதி விஜய் தலைமையில் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டு, அதற்காக ஈரோடு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்டக் காவல் துறையிடம் அனுமதி கேட்கப்பட்டது. ஆனால், பவளத்தான்பாளையத்தில் இடம் குறுகியதாக இருப்பதால் அங்கு பொதுக்கூட்டம் நடத்த மாவட்ட நிர்வாகமும் காவல் துறையும் அனுமதி மறுத்தன.

பொதுக்கூட்ட தேதி, இடம் மாற்றம்:
இதையடுத்து, வேறு இடத்தில் பொதுக்கூட்டம் நடத்த செங்கோட்டையன் முடிவு செய்தார். அதற்காக, பெருந்துறை அருகே விஜயமங்கலம் சரளையில் 29 ஏக்கரில் டிசம்பர் 18ஆம் தேதி பொதுக்கூட்டம் நடத்த இடம் தேர்வு செய்யப்பட்டது. அங்கு பொதுக்கூட்டம் நடத்த மாவட்ட நிர்வாகத்திடமும், மாவட்ட காவல் துறையிடமும் அனுமதி கோரி கடிதம் அளிக்கப்பட்டிருந்தது.
பொதுக்கூட்டம் நடத்த காவல் துறை தரப்பில் இருந்து தவெகவுக்கு 84 நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன. அதில், குறிப்பாக கூட்டத்திற்கு முக்கிய நிர்வாகிகள் யார் யார் வருகிறார்கள்? எத்தனை பேர் கலந்து கொள்வார்கள்? எத்தனை வாகனங்கள் வரும்? என்பன உள்ளிட்ட கேள்விகள் தவெகவிடம் கேட்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், போலீஸாரின் நிபந்தனைகளுக்கான ஆவணங்களை 90 சதவீதம் பூர்த்தி செய்து தவெகவினர் மாவட்ட நிர்வாகத்திடம் மற்றும் காவல் துறையிடம் சமர்ப்பித்துள்ளனர். ஆனால், காவல் துறை தரப்பில் இருந்து பொதுக்கூட்டத்துக்கான அனுமதி இதுவரை வழங்கப்படவில்லை.

நீதிமன்றத்தை நாட முடிவு:
இதுதொடர்பாக தவெக நிர்வாகிகள் நம்மிடம் பேசுகையில், “காவல் துறையின் அனுமதிக்காக காத்துக்கொண்டு இருக்கிறோம். ஒருவேளை காவல் துறை தரப்பில் அனுமதி வழங்கவில்லை என்றால், நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளோம். நீதிமன்றத்தில் எப்படியும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கிடைத்துவிடும் என நம்பிக்கை உள்ளது.
கரூர் துயரச் சம்பவத்துக்குப் பிறகு, மிக கவனமாக தொண்டர்களை ஒருங்கிணைத்து வருகிறோம். புதுச்சேரியில் நடைபெற்ற கூட்டத்தில் போலீஸார் கடும் நிபந்தனைகள் விதித்தபோதும், அதை முறையாக கையாண்டு கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்தோம்.
ஈரோட்டில் நடைபெறும் கூட்டத்துக்கான ஏற்பாடுகளை செங்கோட்டையன் மிக கவனத்துடன் செய்து வருகிறார். கூட்டங்களை நடத்துவதில் அவருக்கு அதிக அனுபவம் இருப்பது எங்களுக்கு கூடுதல் பலமாக உள்ளது.
இக்கூட்டத்தில் 25 ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கிறோம்” என்றனர்.

இதுகுறித்து ஈரோடு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சுஜாதா கூறுகையில், “பொதுக்கூட்டத்திற்கு முக்கிய நிர்வாகிகள் யார் யார் வருகை தர உள்ளனர்? எத்தனை பேர் கலந்து கொள்ள உள்ளனர்? எத்தனை வாகனங்கள் வரும்? அவர்களுக்கான பாதுகாப்பு வசதிகள் என்ன செய்யப்பட்டுள்ளது? போன்ற கேள்விகளை தவெக நிர்வாகிகளிடம் கேட்டுள்ளோம்.
அதில், 28 முக்கிய கேள்விகளுக்கு தவெக தரப்பில் இருந்து இன்னும் பதில் தரப்படவில்லை. அவர்கள் பதில் தரும் பட்சத்தில், அதை ஆய்வு செய்து உயரதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.
ஈரோட்டில் விஜய் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கிடைக்குமா, இல்லையா என்ற எதிர்பார்ப்பு தவெக தொண்டர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.















