``25 வருடங்களாக ஷூட்டிங், வீடு என்றுதான் வாழ்ந்து வருகிறேன்'' - மனம் திறந்த நடிக...
எடப்பாடி, கனிமொழி முதல் அன்புமணி வரை; ரஜினிகாந்த் பிறந்தநாள் வாழ்த்துகள் பகிரும் பிரபலங்கள்!
தமிழ்த் திரையுலகில் தவிர்க்க முடியாத ஆளுமையாக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். திரையுலகில் 50 ஆண்டுகளாக தன் ரசிகர்களை அதே உற்சாகத்துடன் வைத்திருக்கும் ரஜினி, தன் வயதையும் கடந்து தொடர்ந்து நடித்தும் வருகிறார். தமிழ் மட்டுமல்லாது உலகின் பல்வேறு நாடுகளிலும் ரஜினிக்கு தீவிர ரசிகர்கள் இருக்கின்றனர்.
நடிகர் ரஜினியின் உருவ சிலைகளை வைத்துக்கொண்டு தினமும் ஆரத்திக் காட்டுமளவிற்கு தீவிர ரசிகர்களை கொண்ட ரஜினிக்கு இன்று 75- வது பிறந்தநாள்.
இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு பலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துவருகின்றனர்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி:
தமிழ்த் திரையுலகின் அசைக்க முடியாத பேராளுமையாக 50 ஆண்டுகளாக கோலோச்சி வரும் சூப்பர்ஸ்டார் திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது இதயங்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள். திரையரங்குகளை திருவிழாக் கூடங்களாக மாற்றவல்ல தங்களின் Style Magic ரசிகர்களை மகிழ்விக்கட்டும் பல்லாண்டு!
திமுக எம்.பி கனிமொழி:
தமிழ்த் திரைத்துறையின் உச்ச நட்சத்திரமாகத் திகழ்பவரும், 50 ஆண்டுகளாக தமிழ் மக்களின் அன்பைப் பெற்றவரும், எப்போதும் தனது எளிமையால் அதிர வைக்கும் திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.
மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன்:
75 வருடங்கள் சிறப்பான நினைவுகூறத்தக்க வாழ்க்கை.
50 வருட சினிமா புகழ்.
பிறந்தநாள் வாழ்த்துக்கள், என் நண்பா ரஜினிகாந்த்.

முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்:
தனது வெற்றிகரமான திரையுலக பயணத்தோடு,தூய ஆன்மீக பயணத்தையும் அரவணைத்து, உலகளவில் மூன்று தலைமுறை ரசிகர்களின் மனதைக் கவர்ந்த உச்ச நட்சத்திரம் சூப்பர் ஸ்டார் சகோதரர் திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.... பல்லாண்டு காலம் நலமுடன் வாழ எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்...
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்:
தமிழ் திரையுலகின் மார்க்கண்டேயன்; மூன்று தலைமுறைகளை ஆக்கிரமித்தவர்; திரையுலக வானில் நட்சத்திரமாக மிளிர்பவர்; 50 ஆண்டுகளாக மக்களின் இதயங்களில் ஆதர்ச நாயகனாக கோலோச்சி வரும் சூப்பர்ஸ்டார் திரு. ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது இதயம் கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள். மேலும் பல ஆண்டுகள் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுள் பெற்று திரையுலகில் பல சாதனைகளைப் படைக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

அன்புமணி:
இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் நடிகர் நண்பர் ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நல்ல உடல்நலத்துடன் நூறாண்டுகள் வாழ்ந்து மேலும் பல சாதனைகளை படைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.


















