Ind vs Pak : 'இலங்கையில் பாகிஸ்தானை பந்தாடிய இந்தியா!' - சூப்பர் 8 சுற்றுக்கு தக...
Ind vs Pak : 'இலங்கையில் பாகிஸ்தானை பந்தாடிய இந்தியா!' - சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி!
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் “நடக்குமா, நடக்காதா?” என்று ஆரம்பத்திலிருந்தே காத்திருந்த இந்த T20 தொடரின் மிகப்பெரிய போட்டியான இந்தியா vs பாகிஸ்தான் ஆட்டம், பல சர்ச்சைகளுக்குப் பிறகு இன்று கொழும்பு மைதானத்தில் நடந்து முடிந்திருக்கிறது.

ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் சுவாரஸ்யமான போட்டியாக இருக்கும் என நினைத்தால், ஒன் சைடு ஆட்டமாக இந்தியாவுக்கு சாதகமாக முடிந்திருக்கிறது இந்தப் போட்டி.
இந்திய அணியில் சஞ்சு சாம்சனுக்கு பதிலாக அபிஷேக் சர்மாவும், அர்ஷ்தீப் சிங்க்கு பதிலாக குல்தீப் யாதவ்வும் களமிறங்கினர்.
டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து, ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட அபிஷேக் சர்மா முதல் ஓவரிலேயே தனது விக்கெட்டை இழந்ததால், தொடக்கத்திலேயே இந்திய அணிக்கு ஏமாற்றம் ஏற்பட்டது.

பின்னர் இஷான் கிஷன் அதிரடியாக விளையாடி 77 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
அதன் பின்னர் பாகிஸ்தான் அணி, தொடர்ச்சியாக ஹர்திக் பாண்ட்யா மற்றும் திலக் வர்மா ஆகியோரின் முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி, போட்டியின் போக்கை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. சில விக்கெட்களை இழந்தாலும், இறுதியில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்களை ரன்களை சேர்த்தது.
பாகிஸ்தான் அணிக்கு டார்கெட் 176.
இந்த இலக்கை விரட்டி களமிறங்கிய பாகிஸ்தான் அணியை, இந்திய பந்துவீச்சாளர்கள் தொடக்கத்திலேயே சரவெடியாக தாக்கினர். முதல் 6 ஓவர்களிலேயே 4 விக்கெட்களை கைப்பற்றிய இந்திய அணி, போட்டியில் முழு ஆதிக்கம் செலுத்தியது. பொறுப்புடன் விளையாடி வந்த பாகிஸ்தான் வீரர் உஸ்மானும் 44 ரன்களில் ஆட்டமிழக்க அந்த தருணத்திலேயே, பாகிஸ்தான் அணியின் தோல்வி உறுதியானது.

அடுத்தடுத்து இந்தியாவின் வேகத்திலும் சுழலிலும் சிக்கி, பாகிஸ்தான் அணி 18 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்களையும் இழந்து, 61 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் தோல்வியைத் தழுவியது.பும்ரா, ஹர்திக் பாண்ட்யா, அக்சர், வருண் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர்.
77 ரன்கள் விளாசிய இஷான் கிஷன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம், இந்திய அணி முதல் அணியாக சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.




















