பாவூர்சத்திரம்: போதையில் இளைஞர் அடித்து கொலை; `101'க்கு கால் செய்து நாடகம்- நண்ப...
IPL 2026: ஜவ்வு மிட்டாய் போல இழுக்கும் போட்டிகள்; பிசிசிஐ-க்கு கவாஸ்கர் வைத்த கோரிக்கைகள் என்னென்ன?
போட்டிகளின் ஒழுங்குமுறை மற்றும் நேர கட்டுப்பாட்டை உறுதிப்படுத்த பிசிசிஐ கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரரான கவாஸ்கர் கோரிக்கை வைத்திருக்கிறார்.
ஐபிஎல் 2026 சீசன் விறுவிறுப்பாக நடந்துகொண்டிருந்தாலும், ஆட்டத்தின் நேர அதிகரிப்பு என்பது ரசிகர்களின் பொறுமையைச் சோதிக்கத் தொடங்கியிருக்கிறது.

சமீபத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கிடையேயான போட்டி 4 மணி 22 நிமிடங்கள் ஜவ்வாக இழுத்தது.
இதனால், போட்டிகளின் ஒழுங்குமுறை மற்றும் நேர கட்டுப்பாட்டை உறுதிப்படுத்த பிசிசிஐ கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருக்கிறார் கவாஸ்கர்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கவாஸ்கர், "போட்டியின்போது தேவையற்ற தாமதங்கள் அதிகரித்து வருகின்றன. மைதானத்தில் தேவையில்லாமல் மாற்று வீரர்கள் மற்றும் ஆதரவு பணியாளர்கள் வருவதைக் கட்டுப்படுத்தப்பட வேண்டும்.
ஸ்ட்ராட்டஜிக் டைம்-அவுட் நேரத்தில் மிகக் குறைந்த பேர் மட்டுமே மைதானத்தில் அனுமதிக்கப்பட வேண்டும். விக்கெட் விழுந்த பிறகு பேட்ஸ்மேன்கள் வருவதற்கான நேரத்தை இரண்டு நிமிடங்களில் இருந்து ஒரு நிமிடமாகக் குறைக்கலாம்.
டைம்-அவுட் முடிந்ததும் துல்லியமான நேரத்தில் அடுத்த பந்து வீசப்பட வேண்டும். இதில் தாமதம் ஏற்படுவதால் இரண்டரை நிமிட டைம் அவுட் 3 நிமிடங்களாக அதிகரிக்கிறது.
தற்போது அபராதமாக விதிக்கப்படும் பண அபராதம் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

அதற்கு பதிலாக ரன்கள் அல்லது புள்ளிகள் குறைக்கும் தண்டனை பிசிசிஐ விதித்தால் மட்டுமே அணிகள் சீரிய நடவடிக்கை எடுக்கும். போட்டிகளின் ஒழுங்குமுறை மற்றும் நேர கட்டுப்பாட்டை உறுதிப்படுத்த பிசிசிஐ கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மைதானம் ஒரு புனிதமான இடம். விளையாடுபவர்கள் மற்றும் அதிகாரிகள் தவிர மற்றவர்கள் அங்கு செல்லக் கூடாது. இவ்வாறு ஒழுங்குகளைக் கடுமையாகப் பின்பற்றினால் மட்டுமே ஐபிஎல் மேலும் சிறப்பாக, சுறுசுறுப்பாகவும் உலகத் தரத்தில் திகழும்” என்று கவாஸ்கர் தெரிவித்திருக்கிறார்.



















