எஸ்.பி.வேலுமணியை வரவேற்க செல்லாத அதிமுக முக்கிய நிர்வாகிகள் – காரணம் என்ன?
Polymatech: சென்னையில் ஒரு செமிகண்டக்டர் ஆலை!
ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் தமிழ்நாடு பல விஷயங்களிலும் முன் உதாரணமாக இருப்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், செமிகண்டக்டர்கள் உற்பத்தியிலும் தமிழ்நாடுதான் முதல் என்பது பலரும் அறியாத ஒரு செய்தி.
செமிகண்டக்டர்கள்தான் அடுத்த பெட்ரோல்! கைபேசி தொடங்கி, லேப்டாப், டி.வி., கார்... என்று எதுவாக இருந்தாலும் இவை அனைத்துமே செமிகண்டக்டரை அடிப்படையாகக் கொண்டுதான் இயங்குகின்றன. IoT - `இன்டர்னெட் ஆஃப் திங்ஸ்', பயன்பாடு அதிகமாக ஆக, வீடுகளில் இருக்கும் ஏசி, குளிர்சாதனப் பெட்டி, மின்விசிறி, சிசிடிவி... என அனைத்துக்குமே இந்தச் செமிகண்டக்டர் சிப்புகள் மேலும் அதிகமாகத் தேவைப்படும்.

இந்தச் செமிகண்டக்டர் உற்பத்தியில் சீனா, தாய்வான், அமெரிக்கா போன்ற நாடுகள்தான் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. பெருந்தொற்றுக் காலத்தில் செமிகண்டக்டர் தட்டுப்பாடு ஏற்பட்டபோது, நம் நாட்டில் கார் உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது நினைவிருக்கலாம். இந்தச் செமிகண்டக்டர்களை உள்நாட்டிலேயே தயாரிக்க இப்போதுதான் நம் நாட்டில் முயற்சி எடுத்து வருகின்றன.
ஆனால், நம் சென்னையை அடுத்திருக்கும் ஒரகடத்தில் செமிகண்டக்டர்கள் தயாரிக்கும் ஒரு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது என்றால் ஆச்சரியமாக இருக்கிறது, இல்லையா? Opto-semiconductors எனப்படும் செமிகண்டக்டர்களைத் தயாரிப்பதில் முன்னணியில் இருக்கும் இந்த நிறுவனத்தின் பெயர் பாலிமெட்டெக்.
நம் கைபேசி, மடிக்கணினி, டிவி திரை என்று ஒளித்திரை கொண்ட எந்த மின்னணு உபகரணங்களாக இருந்தாலும் அவை செயல்பட முக்கியத் தேவையாக இருப்பது இந்த ஆப்டோ செமிகண்டக்டர்கள்தான்.
பாலிமெட்டெக் நிறுவனத்துக்குத் தமிழ்நாட்டைத் தாண்டி ராய்பூரில் மேலும் ஒரு செமிகண்டக்டர்கள் உற்பத்தி செய்யும் நிறுவனம் இருக்கிறது.
அதேபோல இந்தியாவைத் தாண்டி ஐரோப்பிய நாடான எஸ்டோனியாவிலும் ஒரு செமிகண்டக்டர்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. 2024ம் ஆண்டிலிருந்து செயல்பட்டுக்கொண்டிருக்கும் இந்தத் தொழிற்சாலையில் பாலிமெட்டெக் 100 மில்லியன் யூரோக்களை முதலீடு செய்திருக்கிறது. ஆண்டுக்கு 50,000 Sq.mt HDI பிரிண்டட் சர்க்யூட் போர்டுகளும் (PCB), 250 மில்லியன் சிப்புகளும் இங்கே உற்பத்தி செய்யப்படுகின்றன.
சமீபத்தில் இந்த எஸ்டோனியா நாட்டின் இந்தியாவுக்கான தூதர் தங்கள் நாட்டின் முக்கியமான தொழில் அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் சென்னையை அடுத்திருக்கும் ஒரகடத்தின் பாலிமெட்டெக் தொழிற்சாலைக்கு வந்தபோது, அவரை இந்நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஈஸ்வர ராய் வரவேற்று, Opto-semiconductors களை எப்படி உலகத் தரத்தில் தயாரிக்கிறோம் என்று விளக்கினார்.

எஸ்டோனியா நாடு இந்த Opto-semiconductors மீது ஆர்வம் காட்டுவதற்கு மேலும் ஒரு முக்கியக் காரணம் இருக்கிறது. இந்த ஆப்டோ செமிகண்டக்டர்களின் சிறப்பே, சூரிய ஒளி இல்லாமலேயே இவற்றை வைத்துத் தாவரங்களை வளர்க்க முடியும் என்பதுதான்.
எஸ்டோனியாவில் சூரிய ஒளிக்கு எப்போதும் பஞ்சம். அதுவும் டிசம்பர் போன்ற குளிர்காலங்களில் நாள் ஒன்றுக்கு ஆறு மணி நேரம்தான் சூரியனையே பார்க்க முடியும். எஸ்டோனியா பாலிமெட்டெக் மீது ஆர்வமாக இருப்பதற்கு அவர்களின் தட்பவெப்பச் சூழலும் ஒரு முக்கியக் காரணம்.



















