"என் கல்யாணத்தை பத்தி யாராச்சும் கேட்டா Irritating-ஆ இருக்கு" - நடிகை மும்தாஜ் B...
UGC : `இதில் நீதிமன்றம் தலையிடாவிட்டால்.. புதிய UGC சட்டத்துக்கு இடைக்காலத் தடை!' - உச்ச நீதிமன்றம்
கல்வி நிலையங்களில், குறிப்பாக கல்லூரிகளில் மதம், இனம், சாதி, பாலினம், பிறந்த இடம் அல்லது மாற்றுத்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் நிலவும் பாகுபாடுகள் அதிகரித்திருக்கின்றன. இதைக் கட்டுப்படுத்தும் விதமாக, 2012-ம் ஆண்டு சில விதிகளை அறிமுகப்படுத்தியது. அதற்குப் பிறகும் தொடர்ந்த அநீதிகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
அதன் அடிப்படியில், நீதிமன்ற ஆலோசனையின் பேரில் பல்கலைக்கழக மானியக் குழு (UGC) இந்த மாத தொடக்கத்தில் 'உயர்கல்வி நிறுவனங்களில் சமபங்கை மேம்படுத்துதல் (Promotion of Equity) ஒழுங்குமுறை 2026' என்ற விதிமுறைகளை வெளியிட்டது. இந்த விதிகள் இந்தியாவின் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் (HEIs) பொருந்தும்.

இந்தப் புதிய விதி, எஸ்.சி/எஸ்.டி, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு எதிரான பாகுபாடுகளைத் தடுப்பதில் இது கவனம் செலுத்துகிறது. ஆனால், வட இந்திய மாநிலங்களில் இந்த புதிய விதிகளுக்கு எதிராக ஒரு தரப்பு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை முன்னெடுத்து வந்தன. மேலும், இந்தப் புதிய விதியை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதி ஜாய்மால்யா பக்ஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ``புதிய விதிமுறைகளின் மொழி மிகவும் தெளிவற்றதாக உள்ளது. இது நிர்வாக ரீதியிலான குழப்பங்களுக்கு வழிவகுக்கும். இந்த விதிகள் தவறாகப் பயன்படுத்தப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளன. எனவே, நிபுணர்களைக் கொண்டு இந்த விதிகளின் மொழியைச் செம்மைப்படுத்த வேண்டும்.

மேலும், இந்தப் புதிய வழிகாட்டுதல்கள் சமூகத்தைப் பிளவுபடுத்தும் தன்மை கொண்டவை. இதில் நீதிமன்றம் தலையிடாவிட்டால், அது சமூகத்தில் ஒரு ஆபத்தான மற்றும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். எனவே, புதிய யு.ஜி.சி விதிகளுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. மறு உத்தரவு வரும் வரை இந்த புதிய விதிமுறைகள் நிறுத்தி வைக்கப்படும். அதனால், 2012-ஆம் ஆண்டின் வழிகாட்டுதல்களே உயர்கல்வி நிறுவனங்களில் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்" எனத் உத்தரவிட்டிருக்கின்றனர்.

















