``இந்தப் பிரச்னை குறித்து விவாதிப்போம்: இது நாடகமல்லவே" - பிரதமர் மோடிக்கு பிரிய...
US: `டவுன் சென்டர் மாலில் துப்பாக்கிச் சூடா?' - காவல்துறை சொல்வது என்ன?
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் போகா ரேடன் பகுதியில் உள்ளது டவுன் சென்டர் மால்.
இந்த மாலில் கடந்த சனிக்கிழமை (நவம்பர் 29-ம் தேதி) துப்பாக்கிச் சூடு நடந்ததாக சமூக ஊடகங்களில் தகவல் வெளியாகின. இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பான சூழல் நிலவியது.
சிலர் முகநூல், எக்ஸ் தளம் போன்ற சமூக ஊடகங்களில், "எனது மருமகள் பணிபுரியும் போகா ரேடன் மாலில் துப்பாக்கிச் சூடு நடக்கிறது. தயவுசெய்து பிரார்த்தனை செய்யுங்கள்" என்றும்,
மற்றொருவர், "போகா ரேடன் மாலில் துப்பாக்கிச் சூடு, மக்கள் எல்லாத் திசைகளிலும் ஓடுகிறார்கள்" என்றும் பதிவிட்டிருந்தனர்.
உள்ளூர் ஊடக நிறுவனமான போகா நியூஸ் நவ், "டவுன் சென்டர் மாலில் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது" என்று செய்தி வெளியிட்டது. இது தொடர்பாகத் தகவலறிந்த போகா ரேடன் காவல்துறையினரும் போகா ரேடன் தீயணைப்பு மீட்புக் குழுவும் சம்பவ இடத்துக்கு விரைந்து, விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையின் முடிவில், "டவுன் சென்டர் மாலில் துப்பாக்கிச் சூடு எதுவும் நடக்கவில்லை, மாறாக அங்கே இருவருக்கு மத்தியில் வாக்குவாதம் மட்டுமே நடந்திருக்கிறது.
அப்போது ஏற்பட்ட தகராறில் ஒருவர் காயமடைந்திருக்கிறார். தற்போது மாலுக்குள் மக்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக நம்புவதற்கு எந்தக் காரணமும் இல்லை" என்று காவல்துறை தெளிவுபடுத்தியிருக்கிறது.
மால் உரிமையாளர்களான சைமன் பிராப்பர்ட்டி குழுமம், "டவுன் சென்டர் மாலுக்குள் துப்பாக்கிகளை அனுமதிப்பதில்லை. என்றாலும் துப்பாக்கிச் சூடு குறித்த அச்சம் பரவியதால் மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது" எனத் தெரிவித்திருக்கிறது.














