``இந்தப் பிரச்னை குறித்து விவாதிப்போம்: இது நாடகமல்லவே" - பிரதமர் மோடிக்கு பிரிய...
``இந்தப் பிரச்னை குறித்து விவாதிப்போம்: இது நாடகமல்லவே" - பிரதமர் மோடிக்கு பிரியாங்கா காந்தி பதில்!
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கி நடந்து வருகிறது. இந்தக் கூட்டத்தொடரில் 15 அமர்வுகள் இருக்கும் எனக் கூறப்பட்டிருக்கிறது. இந்தக் கூட்டத்தொடரில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் (SIR), பல பூத் நிலை அதிகாரிகளின் (BLO) தற்கொலைகள், நவம்பர் 10 டெல்லி பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து ஏற்பட்ட தேசிய பாதுகாப்பு கவலைகள் உள்ளிட்ட பல பிரச்னைகள் குறித்து எதிர்க்கட்சிகள் விவாதங்களை நடத்த வேண்டும் எனக் கோரியுள்ளன.
இந்தக் கூட்டம் தொடங்குவதற்கு முன்பு பிரதமர் மோடி புதிய நாடாளுமன்ற அலுவலகத்துக்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, "எதிர்க்கட்சிகள் ஆக்கப்பூர்வமான விஷயங்களை விவாதிக்க வேண்டும். வெறும் கோஷங்களுக்கான இடமல்ல நாடாளுமன்றம்.
தோல்வியின் கசப்பையும், வெற்றியின் ஆணவத்தையும் வெளியே வைத்துவிட்டு நாட்டு மக்களின் நலனுக்காக உரையாற்ற வேண்டும். நாடாளுமன்றம் வெறும் நாடகம் நடத்துவதற்கான இடமல்ல. பேசுவதற்கான இடம்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
அதைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் பொதுச் செயலாளரும், எம்.பி-யுமான பிரியாங்கா காந்தி வத்ரா, "தற்போது நடந்துவரும் தேர்தல்களின் நிலை, எஸ்.ஐ.ஆர், டெல்லி மாசுபாடு ஆகியவை மிகப்பெரிய பிரச்னைகள். அவற்றைப் பற்றி விவாதிப்போம். நாடாளுமன்றம் எதற்காக? பேசுவதற்காகத்தானே...
எனவே, இவற்றைப் பற்றி பேசுவது நாடகமாகாது. பிரச்னைகளைப் பற்றிப் பேசுவதும், கேள்வி எழுப்புவதும் நாடகம் அல்ல. பொதுமக்களுக்கு முக்கியமான பிரச்னைகள் குறித்த ஜனநாயக விவாதங்களை நாடகங்கள் அனுமதிப்பதில்லை" எனத் தெரிவித்தார்.












