2026 உலகக்கோப்பை இறுதிப்போட்டி: ஒரு டிக்கெட் விலை ரூ.95 கோடியா? விண்ணை தாண்டும் ...
`இன்றுவரை அதுதான் டாப் மார்க்' 16 வயதினிலே டு கடல் பூக்கள்! - பாரதிராஜாவும் விகடனின் மதிப்பெண்களும்!
கிராமத்து மண்ணின் வாசனையை வெள்ளித்திரையில் வீசச்செய்த ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா அவர்களின் மறைவு ஒட்டுமொத்த தமிழகத்தையும் ஆறா துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. அவருடைய மறைவிற்கு அரசியல் தலைவர்களும், திரை உலகினரும், ரசிகர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

திரைப்படங்களில் அவர் கையாண்ட யதார்த்தமும், புதுமையும் தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றி, ஸ்டுடியோக்களுக்குள் முடங்கிக் கிடந்த கேமராவை கிராமத்துத் தெருக்களுக்குக் கூட்டிச் சென்றன. இணையத்தில் அவரது சாதனைகளும் நினைவுகளும் வைரலாகி வரும் இவ்வேளையில், 'ஆனந்த விகடன்' பாரதிராஜாவின் முக்கிய படங்களுக்கு ஆனந்த விகடன் வழங்கிய மதிப்பெண்கள் குறித்து பார்ப்போம்.
* 1977ல் வெளியான இயக்குநர் பாரதிராஜாவின் '16 வயதினிலே' திரைப்படத்துக்கு 62.5 மதிப்பெண்கள் அளித்திருந்தது விகடன். இதுவே இன்றுவரை ஆனந்த விகடன் விமர்சனக் குழுவால் அளிக்கப்பட்ட உச்சபட்ச மதிப்பெண்ணாக இருந்து வருகிறது.
* அறிமுகப் படம் கொடுத்த பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, கிராமத்துத் தண்டவாளத்தை மையமாக வைத்து பாரதிராஜா இயக்கிய இரண்டாவது படம் 'கிழக்கே போகும் ரயில்' இதற்கு ஆனந்த விகடன் 55 மதிப்பெண்களை வழங்கி இருக்கிறது.

* நடிகர் திலகம் சிவாஜி கணேசனையும், இயக்குநர் இமயம் பாரதிராஜாவையும் இணைத்த ஆகச்சிறந்த காவியம் 'முதல் மரியாதை' தேசிய விருது வென்ற இந்தப் படத்திற்கு 54 மதிப்பெண்களை வழங்கி இருக்கிறது அனந்த விகடன்.
* காதலைப் பேசிய பாரதிராஜாவின் மற்றுமொரு கிளாசிக் படைப்பு 'அலைகள் ஓய்வதில்லை'. கார்த்திக் மற்றும் ராதாவை இந்தப் படத்தின் மூலம் தான் பாரதிராஜா அறிமுகப்படுத்தினார். 'அலைகள் ஓய்வதில்லை' படத்திற்கு விகடன் அளித்த மதிப்பெண் 50+.
* அண்ணன்-தங்கை பாசத்தை தமிழர்களின் வாழ்வியலோடும், கிராமத்து மண் வாசனையோடும் உணர்வுப்பூர்வமாகக் கொண்டாடிய உன்னதமான படைப்பு 'கிழக்கு சீமையிலே'. இந்தப் படத்திற்கு விகடன் அளித்த மதிப்பெண் 50.
* சமூகத்தில் நிலவும் சாதியக் கட்டமைப்புகளையும், மதச் சடங்குகளையும், போலித்தனங்களையும் துணிச்சலோடு தட்டிக்கேட்ட புரட்சிகரமான திரைப்படம் 'வேதம் புதிது'. 1987-ல் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான இந்தப் படத்திற்கு விகடன் அளித்த மதிப்பெண் 50.

* பெண் சிசுக்கொலை என்னும் சமூக அவலத்தை உலகிற்குத் வெளிச்சமிட்டுக் காட்டிய படம் 'கருத்தம்மா'. பாரதிராஜா இந்தப் படத்திற்காக தேசிய விருதையும் வாங்கி இருக்கிறார். 'கருத்தம்மா' படத்திற்கு விகடன் அளித்த மதிப்பெண் 45.
* வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் ஏமாற்றங்களையும், திரையுலகில் நுழையத் துடிக்கும் மனிதர்களின் வலியையும் எதார்த்தமாகப் பேசிய புதுமையான முயற்சி 'நிழல்கள்'. இந்தப் படத்திற்கு ஆனந்த விகடன் 45 மதிப்பெண்களை வழங்கி இருக்கிறது.
* கடலோர மக்களின் வாழ்வியலையும், இரு நண்பர்களுக்கு இடையேயான தியாகத்தையும் ஆழமாகப் பேசியதற்காக பாரதிராஜாவிற்கு 'சிறந்த திரைக்கதைக்கான' தேசிய விருதை தேடித்தந்த படம் 'கடல் பூக்கள்'. இந்தப் படத்திற்கு விகடன் அளித்த மதிப்பெண் 42.

பாரதிராஜா இன்று மறைந்திருந்தாலும் அவரது படைப்புகள் என்றென்றும் மக்கள் மனதில் இருந்து மறையாது!!!





















