அதிமுக: `செங்கோட்டையன் விவகாரம்; திமுக மீது சந்தேகம்!' - பாஜக தலைவர் நயினார் நாக...
`எனக்கும் மன வருத்தம் உண்டென ஓர் உதாரணத்துக்குச் சொன்னேன்'- செல்லூர் ராஜூ
‘கட்சியில் எனக்கும் மன வருத்தம் உண்டு’ என்கிற பொருள்பட, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியிருப்பது, கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது!

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தேவர் ஜெயந்தி அன்று ஓ.பி.எஸ் - டி.டி.வி தினகரனுடன் இணைந்து சென்று எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சி கொடுத்தார். இதைத் தொடர்ந்து, அ.தி.மு.க-விலிருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டதாக அறிவித்தார் கட்சியின் பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி.
இது குறித்து 3-11-2025 அன்று மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜூ, “யாராக இருந்தாலும் தலைமைக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். எனக்கும் மன வருத்தங்கள் உண்டு... அதையெல்லாம் பொதுவெளியில் ஊடகங்களில் தெரிவிக்க முடியுமா? பொதுச்செயலாளரைச் சந்தித்துதான் முறையிட வேண்டும்” என்று வெளிப்படையாகப் போட்டுடைத்தார்.

இதையடுத்து, “செல்லூர் ராஜூவின் மனதில் உள்ளதுதான் வார்த்தையில் வந்துள்ளது” என்று மதுரை அ.தி.மு.க நிர்வாகிகளிடையே சலசலப்பு எழுந்துள்ளது. இது குறித்துப் பேசுபவர்கள், “எப்போதுமே ஓ.பி.எஸ், டி.டி.வி, சசிகலாவுடன் மென்மையான அணுகுமுறை வைத்துள்ள செல்லூர்ராஜூ, தி.மு.க-வினரோடும் தொடர்ந்து நட்பு பாராட்டி வருகிறார். 2021 சட்டமன்றத் தேர்தல், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கட்சி வேட்பாளர்கள் வெற்றிபெற வேலை செய்யவில்லை என்ற கட்சியினரின் குற்றச்சாட்டால், செல்லூர் ராஜூ மீது ஏற்கெனவே அதிருப்தியில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
அதனால்தான், ஆர்.பி.உதயகுமார் ஏற்கெனவே ஜெ பேரவைச் செயலாளராக உள்ள நிலையிலும், கூடுதலாக அவருக்குச் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியையும் வழங்கினார். அது மட்டுமன்றி, இவரிடம் கேட்காமலேயே டாக்டர் சரவணனுக்கு மருத்துவர் அணியின் மாநில இணைச் செயலாளர் பதவி வழங்கியதோடு, திருநெல்வேலி புறநகர் மாவட்டப் பொறுப்பாளராகவும் நியமனம் செய்தார். இதெல்லாம் எடப்பாடி பழனிசாமி மீது செல்லூராருக்கு எரிச்சலை உண்டாக்கி வருகிறது. அதன் வெளிப்பாடுதான் செல்லூர் ராஜூவின் இந்த ஆதங்கம்” என்றனர்.
இது குறித்து செல்லூர் ராஜூவிடமே நேரில் விளக்கம் கேட்டோம், “எடப்பாடி பழனிசாமியுடன் எனக்கு எந்த மனவருத்தமும் இல்லை. அன்று ஒரு உதாரணத்துக்காக அப்படி சொன்னேன். ஆனால், அதையே பெரிதாக்கிவிட்டார்கள். இதோ சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் நடப்பதைக் கண்காணிக்கும் பணிகளை ஆரம்பித்துவிட்டோம். மனவருத்தம் இருந்தால் ஈடுபடுவோமா?” என்றார். தொடர்ந்து, ‘உங்களுக்கு எதிராக, டாக்டர் சரவணனுக்கு எடப்பாடி பழனிசாமி அதிக முக்கியத்துவம் கொடுப்பதாகச் சொல்கிறார்களே?’ என்ற நமது கேள்விக்கு, “அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. சும்மா சிண்டுமுடித்து விடாதீர்கள். இப்போது வேறு எதுவும் கூற முடியாது...’’ என்று நம்மைத் தவிர்த்துவிட்டுக் கிளம்பினார்.













