செய்திகள் :

கழற்றிவிட்ட திமுக; கைகொடுத்த அதிமுக - கிருஷ்ணகிரி நகர்மன்ற முன்னாள் தலைவர் கட்சி மாறியப் பின்னணி!

post image

கிருஷ்ணகிரி நகராட்சித் தலைவராக இருந்தவர் ஃபரிதா நவாப். இவர், தி.மு.க-வில் தலைமைச் செயற்குழு உறுப்பினராகவும் கட்சிப் பொறுப்பில் இருந்துவந்தார். இவருக்கு எதிராக 16-10-2025 அன்று ஆளுங்கட்சி கவுன்சிலர்களே நகராட்சி ஆணையரிடம் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எழுத்துபூர்வமாக முன்வைத்தனர். மொத்தமுள்ள 33 கவுன்சிலர்களில், 27 பேர் ஆதரிக்க வேண்டும். தலைவராக இருக்கும் ஃபரிதா நவாப் நீங்கலாக, தி.மு.க கவுன்சிலர்கள் மொத்தமே 21 பேர்தான் என்பதால், கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சி கவுன்சிலர் ஒருவரிடமும், சுயேச்சை கவுன்சிலர்கள் நால்வரிடமும் ஆதரவு திரட்டினார்கள்.

அப்போதும், இன்னும் ஒரு கவுன்சிலரின் ஆதரவு தேவைப்பட்டது. அ.தி.மு.க கவுன்சிலர்கள் ஐந்து பேரிடம் நடத்திய பேச்சுவார்த்தையில், ஒன்பதாவது வார்டு கவுன்சிலரும் கிருஷ்ணகிரி நகர அ.தி.மு.க மகளிரணிப் பொருளாளருமான எம்.நாகஜோதி உடன்பட்டிருக்கிறார். இதையடுத்து, நவம்பர் 10-ம் தேதி, ஆணையர் முன்னிலையில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அ.தி.மு.க-வினரின் கண்களில் படாமல், கவுன்சிலர் நாகஜோதியை பத்திரப்படுத்தி அழைத்து வந்த தி.மு.க-வினர், அவரைத் தீர்மானத்தின் மீது வாக்களிக்கச் செய்தார்கள்.

எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்த ஃபரிதா நவாப், எஸ்.கே.நவாப்...

அப்படியும் இந்த விஷயம் லீக்காகி, நகராட்சி அலுவலகத்துக்கு வெளியே கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளரும் அந்தத் தொகுதி எம்.எல்.ஏ-வுமான அசோக்குமார் தலைமையில் ஏராளமான அ.தி.மு.க-வினர் குவிந்துவிட்டனர். ``எங்கள் கட்சி கவுன்சிலரை வெளியே அனுப்புங்கள்...’’ என்று கூறி தர்ணாவில் ஈடுபட்டார்கள். கொஞ்ச நேரத்தில் அ.தி.மு.க-வினர் கப்சிப் எனக் கலைந்து சென்றுவிட்டார்கள். இதையடுத்து, `தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றிபெற்றதாக’ நகராட்சி ஆணையர் அறிவித்தார்.

நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் கலந்துகொண்டு வாக்களித்த அ.தி.மு.க கவுன்சிலர் நாகஜோதியை, கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கியது கட்சித் தலைமை. ``என்ன நடந்தது... ஏன் ஆளுங்கட்சி நகர்மன்றத் தலைவருக்கு எதிராகத் தீர்மானம்?” என்று, கிருஷ்ணகிரி நகர அரசியல் புள்ளிகள் சிலரிடம் கேட்டபோது, ``ஃபரிதா நவாப், நகராட்சித் தலைவராக இரண்டாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவரின் கணவர் எஸ்.கே.நவாப், தி.மு.க-வில் 2008-லிருந்து கிருஷ்ணகிரி நகரச் செயலாளர் பொறுப்பை வகித்துவந்தவர்.

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டச் செயலாளராக இருக்கும் மதியழகன், 2019-க்குப் பிறகுதான் தி.மு.க-வுக்கே வந்தார். வசதி படைத்தவர் என்பதால், வந்த வேகத்திலேயே மா.செ பதவி, பர்கூர் தொகுதியில் எம்.எல்.ஏ சீட் வாங்கி வென்று ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினார். இதை விரும்பாத நகரச் செயலாளராக இருந்த எஸ்.கே.நவாப்பும், அவரின் மனைவியும் நகராட்சித் தலைவருமான ஃபரிதா நவாப்பும் மா.செ மதியழகனை எதிர்க்கத் தொடங்கினார்கள். இந்த நிலையில், கடந்த ஜனவரி மாத இறுதியில், ‘நகராட்சி ஆணையரின் அறைச் சுவர் கடிகாரத்தில் ரகசிய கேமரா இருந்ததாக’ சர்ச்சை வெடித்தது.

`நகரச் செயலாளர் எஸ்.கே.நவாப்தான் இந்த வேலையைப் பார்த்திருக்கிறார்’ என்று புரளியைக் கிளப்பி, அவரைச் சிக்கவைத்து விட்டார்கள். தி.மு.க தலைமையும் விசாரிக்காமல், பிப்ரவரி 8-ம் தேதி `ஒழுங்கு நடவடிக்கை’ என்கிற பெயரில், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் எஸ்.கே.நவாப்பை நீக்கிவிட்டது.

எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்த ஃபரிதா நவாப், எஸ்.கே.நவாப்...

அன்றைய தினமே, கிருஷ்ணகிரி நகரத்தை, `கிழக்கு, மேற்கு’ என்று இரண்டாகப் பிரித்து, புதிய பொறுப்பாளர்களையும் நியமித்தது தி.மு.க தலைமை. அந்த இரு பொறுப்பாளர்களுமே மதியழகனின் விசுவாசிகள் தான். நகரத்தைக் கைப்பற்றிய மாவட்டச் செயலாளர் மதியழகன், நகராட்சி அலுவலகத்தையும் கட்டுக்குள் கொண்டுவர முடிவுசெய்தார். அதன்படி, கவுன்சிலர்களும் அவர் சொல்லுக்கு அடங்கிப்போய் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்து தலைவரை காலி செய்துவிட்டார்கள்’’ என்றனர் விரிவாக.

இது குறித்து, 19-11-2025 அன்று தேதியிட்ட ஜூ.வி இதழில், `` `தலைக்கு ரூ.25 லட்சம் பேரம்...’ - நகராட்சியை கபளீகரம் செய்தாரா தி.மு.க மாவட்ட செயலாளர்? கிறுகிறுக்கும் கிருஷ்ணகிரி!” என்ற தலைப்பில் நகர்மன்றத் தலைவரின் கணவர் எஸ்.கே.நவாப், தி.மு.க மா.செ மதியழகன், அ.தி.மு.க கவுன்சிலர் நாகஜோதி ஆகியோரின் விளக்கத்துடன் விரிவான கட்டுரை எழுதியிருந்தோம்.

இந்த நிலையில், நகர்மன்றத் தலைவர் பதவியை இழந்த ஃபரிதா நவாப் மற்றும் அவரின் கணவரும் தி.மு.க முன்னாள் நகரச் செயலாளருமான எஸ்.கே.நவாப் ஆகியோர் டிசம்பர் 15-ம் தேதியான நேற்றைய தினம் சென்னை பசுமைவழிச் சாலையில் இருக்கும் செவ்வந்தி இல்லத்தில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து அந்தக் கட்சியில் தங்களை இணைத்துக்கொண்டனர்.

இந்த தம்பதியுடன் கிருஷ்ணகிரி நகர தி.மு.க-வைச் சேர்ந்த மேலும் 20 பொறுப்பாளர்களும் அ.தி.மு.க-வில் இணைந்திருக்கின்றனர். ``எஸ்.கே.நவாப் கிருஷ்ணகிரி நகர தி.மு.க-வின் முகமாக அறியப்பட்டவர். மேலும், ஷாய் மசூதி தலைவர் மற்றும் தர்கா கமிட்டித் தலைவராகவும் தான் சார்ந்த இஸ்லாமிய சமூக மக்களிடமும் செல்வாக்குமிக்கவராக வலம் வந்துகொண்டிருக்கிறார். தி.மு.க அவரைக் கழற்றிவிட்ட நிலையில், அ.தி.மு.க தாமாக முன்வந்து கைகொடுத்து அரவணைத்திருக்கிறது. சிறுபான்மையினர் சமூகத்தைச் சேர்ந்த ஓர் முக்கிய பிரமுகர் தனது ஆதரவாளர்களோடு கட்சி மாறியிருப்பது, 2026 சட்டமன்ற பொதுத்தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதியில் கட்டாயம் எதிரொலிக்கும்’’ என்கின்றனர் அரசியலை உற்றுநோக்கும் புள்ளிகள்.

'அரசியல் லாபத்துக்காக ஐயப்ப சுவாமி பெயரை பயன்படுத்துவதா?'- திருவாபரண பாதை பாதுகாப்பு குழு புகார்!

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் துவார பாலகர்கள் சிற்பம் மற்றும் திருநடை கதவுகள் ஆகியவற்றில் செம்பு தகட்டின் மீது பதிக்கப்பட்டிருந்த தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு விசாரணை நடைபெற்றுவருகிறது. அந்த வழக்க... மேலும் பார்க்க

'நிதிஷின் மனநலம் பரிதாபகராமக உள்ளது' - பெண் மருத்துவரின் ஹிஜாப்பை இழுத்த முதல்வர்; வழுக்கும் கண்டனம்

நேற்று பீகாரில் ஆயுஷ் மருத்துவர் பட்டமளிப்பு விழா நடந்தது. அதில் பீகாரின் முதலமைச்சர் நிதிஷ் குமார் கலந்துகொண்டு பட்டமளித்தார். அந்த விழாவில் பெண் ஒருவர் ஹிஜாப் அணிந்து பட்டம் பெற வந்தார். அவரை ஹிஜாப்... மேலும் பார்க்க

``வாக்குப்பதிவு இயந்திரத்தால்தான் 4 முறைவெற்றி பெற்றேன்" - ராகுலுக்கு ஷாக் கொடுத்த சுப்ரியா

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடி நடப்பதாகவும், வாக்குகள் திருடப்படுவதாகவும் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். இதற்காக நாடு முழுவதும் போராட்டமும் நடத்... மேலும் பார்க்க

'ஸ்வர்ணம் கட்டவன் யாரப்பா சகாக்களாணே அய்யப்பா...'- நாடாளுமன்றம் வரை ஹிட்டான கேரள அரசியல் பகடி பாடல்!

கேரளத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது. பா.ஜ.க குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது. சி.பி.எம் கட்சி பின்னடைவை சந்தித்துள்ளது. உள்ளாட்சி தேர்தல் சமயத... மேலும் பார்க்க

100 நாள் வேலை திட்டம் : அறிமுகமாக இருக்கும் புதிய நடைமுறைகள் என்னென்ன?

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் - இந்திய அரசியல் களத்தில் இப்போதைய தலைப்பு செய்தி. 2008-ம் ஆண்டு முதல், இந்தியா முழுவதும் அமலுக்கு வந்தது இந்தத் திட்டம். இந்தத் திட்டத்தை 'மகாத்மா காந்தி... மேலும் பார்க்க