Pawan Kalyan: 'OG' பட சக்சஸுக்குப் பரிசு; 3 கோடி ரூபாய் மதிப்பிலான கார் பரிசளித்...
'ஸ்வர்ணம் கட்டவன் யாரப்பா சகாக்களாணே அய்யப்பா...'- நாடாளுமன்றம் வரை ஹிட்டான கேரள அரசியல் பகடி பாடல்!
கேரளத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது. பா.ஜ.க குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது. சி.பி.எம் கட்சி பின்னடைவை சந்தித்துள்ளது. உள்ளாட்சி தேர்தல் சமயத்தில் சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் துவார பாலகர்கள் சிற்பம் மற்றும் திருநடை ஆகியவற்றில் செம்பு தகட்டின் மீது பதிக்கப்பட்டிருந்த தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் உன்னிகிருஷ்ணன் போற்றி கைதுசெய்யப்பட்டதையும், ஆளும் சி.பி.எம் கட்சியையும் இணைத்து பகடியாக பாடப்பட்ட பாடல் ஹிட் ஆனது. பள்ளிக்கட்டு சபரிமலைக்கு கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை... என்ற பிரபல பாடல் மெட்டுக்கு ஏற்ப பாடப்பட்ட அந்த பாடலில்,
"போற்றியே கேற்றியே சொர்ணம் செம்பாய் மாற்றியே
சொர்ணப் பாளிகள் மாற்றியே சாஸ்தாவின் தனம் ஊற்றியே
ஸ்வர்ணம் கட்டவன் யாரப்பா சகாக்களாணே அய்யப்பா..." என்ற பாடல் வரிகளில் போற்றி மூலம் செம்பு எனக்கூறி தங்கத்தகடுகள் திருடப்பட்டதாகவும், தர்மசாஸ்தாவின் சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டதாகவும். தங்கத்தை திருடியது சகாக்கள்தானே அய்யப்பா எனவும் பொருள் கொண்ட அந்த பாடல் உள்ளாட்சி தேர்தல் முடிந்த பிறகும் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. நாடாளுமன்ற வளாகத்தில் கேரள மாநில காங்கிரஸ் எம்.பி-க்கள் அந்த பாடலைப் பாடியதைத் தொடர்ந்து டெல்லி வரை பாடல் ஹிட்டாகி உள்ளது.

அந்தப் பாடலை கோழிக்கோடு நாதாபுரத்தைச் சேர்ந்த குஞ்ஞப்துல்லா என்பவர் எழுதி உள்ளார். மூன்றாம் வகுப்புவரை படித்துள்ள குஞ்ஞப்துல்லா 46 ஆண்டுகளுக்கு முன் கத்தார் நாட்டுக்கு வேலைக்குச் சென்றார். அங்கிருந்துதான் அந்த பாடலை எழுதி வாட்ஸ் அப் மூலம் கேரளாவைச் சேர்ந்தவர்களுக்கு அனுப்பி உள்ளார். இதுகுறித்து குஞ்ஞப்துல்லா கூறுகையில், "நான் தேர்தலுக்காக சுமார் 600 பாடல்கள் எழுதியுள்ளேன். சபரிமலை கோயில் கருவறை கதவுகளில் இருந்துவரை தங்கம் கொள்ளையடிக்கப்பட்டதை அறிந்து அதை பாடல் வரிகளாக எழுதினேன். எந்த கட்சிக்காகவும் நான் அந்த பாடலை எழுதவில்லை. முதலில் அந்த பாடலை காங்கிரஸ் நிர்வாகிகளுக்கும், முஸ்லிம் லீக் நிர்வாகிகளுக்கும் அனுப்பினேன். அவர்கள் கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில்தான் கோழிக்கோட்டைச் சேர்ந்த ஹனீபா முடிக்கோடன் என்பவர் அந்த வரிகளுக்கு பள்ளிக்கட்டு சபரிமலைக்கு என்ற பாடலின் மெட்டைச் சேர்த்து இசையாக மாற்றினார். டேனிஷ் கூட்டிலங்காடி என்ற மேடைப்பாடகர் அதை பாடலாக பாடி சமூக வலைத்தளங்களில் ஹிட்டாக்கினார்" என்றார்.

இந்த பாடலை காங்கிரஸ் கூட்டணி கட்சிகளும், பா.ஜ.க-வும் கேரள உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்துக்காக பயன்படுத்தியதால் பிரசித்திபெற்றதாக மாறியது. இந்நிலையில்தான் சபரிமலையில் தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ் எம்.பி டீன் குரியகோஸ் தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் கேரள மாநில காங்கிரஸ் கட்சி எம்.பி-க்கள் நேற்று போராட்டம் நடத்தினர். அந்த போராட்டத்தின்போது 'ஸ்வர்ணம் கட்டவன் யாரப்பா சகாக்களாணே அய்யப்பா' என்ற பாடலை பாடி கவனம் ஈர்த்தனர். பிற மாநில எம்.பி-க்கள் இதை ஆச்சர்யமுடன் பார்த்துச் சென்றனர். சபரிமலை தங்கம் கொள்ளை குறித்த அரசியல் பகடி பாடல் தேசிய அளவில் பிரசித்திபெற்றதாக மாறி உள்ளது.




















