செய்திகள் :

காற்றினிலே வரும் கீதம்...

post image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

"காலத்தை வென்றவன் நீ காவியமானவன் நீ வேதனை தீர்த்தவன் விழிகளில் நிறைந்தவன் வெற்றித் திருமகன் நீ" - மக்கள் திலகத்தின் அடிமைப்பெண் படத்தில் அவரைப் போற்றி பாடும் பாடல் இது. பாடலை தொடங்கி வைப்பவர் எஸ்.ஜானகி அவர்கள். குயில் போன்ற குரலால் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடிய அவருக்கும் அந்த வரிகள் பொருந்தும். 'ன்'னுக்கு பதில் 'ள்' போட்டால்...

நாதம் என்பது காதுக்கு இனிமையை தரும் ஒலி. அதிலிருந்து தான் அனைத்தும் உருவாகின்றன. இறைவன் நாத வடிவானவன். திருப்புகழில் அருணகிரிநாதர் 'நாத விந்துக லாதீ நமோநம வேத மந்த்ரசொ ரூபா நமோநம' -என்று பாடியுள்ளார். அந்த ஒலியை இனிமையான ஒரு குரல் மூலம் கேட்கும் போது நாம் நம்மை மறந்து ரசிப்போம். அப்படி ஒரு குரல் தான் ஜானகி அவர்களின் குரல்.

ஜானகி மறைவு
ஜானகி மறைவு

"நாதம் என் ஜீவனே...வா வா என் தேவனே.. உந்தன் ராஜ ராகம் பாடும் நேரம் பாறை பாலூறுதே பூவும் ஆளானதே..." காதல் ஓவியம் படத்தில் வைரமுத்து அவர்கள் எழுதிய மிகச் சிறந்த பாடல்களில் இதுவும் ஒன்று. படத்துக்காக எழுதினாலும் இது முற்றிலும் ஜானகி அவர்களுக்காக எழுதியது போலிருக்கும்.

'சிங்கார வேலனே தேவா' இந்த பாடல் 60 களில் வெளிவந்த 'கொஞ்சும் சலங்கை' படத்தில் இடம்பெற்றது. கு.மா.பாலசுப்ரமணியன் அவர்கள் எழுதி எஸ்.எம்.சுப்பையா நாயுடு அவர்கள் இசையமைத்தது. காருக்குறிச்சி அருணாசலம் அவர்கள் நாதஸ்வரம் வாசித்திருப்பார். இந்த பாடல் முதலில் வேறு ஒருவர் பாடுவதாக இருந்ததாம். சில காரணங்களால் அது நடக்கவில்லை. பின்னணி பாடகி பி.லீலா அவர்கள் இந்த பாடலை ஜானகி அவர்கள் தான் சிறப்பாக பாடுவார் என்று சிபாரிசு செய்ததாக நிகழ்ச்சி ஒன்றில் ஜானகி அவர்களே சொல்லி இருக்கிறார். தனக்கான பாடலை யார் பாட வேண்டும் என்று முருகனே தீர்மானித்தான் என்று சொல்லலாம்.

தமிழ் கடவுள் முருகனை போற்றி எத்தனையோ பாடல்கள் வந்திருக்கலாம். ஆனால் இதற்கு இணையாக ஒரு பாடல் இன்றுவரையில் வெளிவரவில்லை. நமக்குள் எத்தனையோ சோகங்கள், பிரச்சனைகள் இருக்கும். இந்த பாடலை கேட்டால் போதும் அவைகள் காணாமல் போய்விடும் மனசு லேசாகிவிடும். ஒலிப்பது ஜானகி அவர்களின் குரலா இல்லை நாதஸ்வரமா என்ற கேள்வி மனசுக்குள் ஓடும். இன்னும் 100 ஆண்டுகள் தாண்டியும் தமிழர்கள் மனதில் ஆட்சி செய்யும் இந்த பாடல்.

எஸ். ஜானகி

"மாதா உன் கோயிலில் மணி தீபம் ஏற்றினேன். தாயென்று உன்னை தான் பிள்ளைக்கு காட்டினேன் மாதா..." -மனதை உருக்கும் இந்த பாடல் காரைக்குடி நாராயணன் அவர்கள் தயாரித்து இயக்கிய 'அச்சாணி' திரைப்படத்தில் இடம்பெற்றது. அந்த பாடலின் இடையே.. "பிள்ளை பெறாத பெண்மை தாயானது அன்னை இல்லாத மகனைத் தாலாட்டுது கர்த்தரின் கட்டளை நான் என்ன சொல்வது மாதா" இந்த வரிகளை பாட முடியாமல் ஜானகி அவர்கள் கண் கலங்கி நின்று விட்டாராம். பாடல் ஒலிப்பதிவு சற்றுநேரம் தாமதமாகியது.

அந்த அளவுக்கு அந்த பாடலை வாலி அவர்கள் எழுதி இருப்பார். இசைஞானி இசையமைத்திருப்பார். இந்த பாடலை கேட்டால் பைபிள் முழுமையாக வாசித்தது போல ஒரு அனுபவம் கிடைக்கும். ஜானகி அவர்களின் திரைப்பயணத்தில் இந்த பாடல் ஒரு மைல்கல். இந்த பாடலின் சாயலில் உருவானதுதான் 'பயணங்கள் முடிவதில்லை' படத்தில் இடம்பெற்ற 'மணி ஓசை கேட்டு எழுந்து நெஞ்சில் ஆசை கோடி சுமந்து' பாடல். இந்த பாடலையும் ஜானகி அவர்கள் தான் பாடினார்கள் (எஸ்.பி.பி. யோடு இணைந்து).

70 களில் வெளியாகி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தப் படம் அன்னக்கிளி. முதல் வாரம் படத்தின் ரிசல்ட் சரியில்லை. 'மச்சானைப் பார்த்தீங்களா.." இந்த பாடல் ஒவ்வொரு தெருவிலும் இருந்த டீக்கடைகள் மற்றும் விசேஷங்களில் எல்லாம் ஒலிக்க ஆரம்பிக்க 'அன்னக்கிளி உன்னைத் தேடுதே' என்று மக்களும் பாட ஆரம்பிக்க மிகப்பெரிய வெற்றியை அந்த படம் பெற்றது. அந்த படத்தில் மூன்று பாடல்களை எஸ்.ஜானகி அவர்கள் பாடியுள்ளார்கள். அதுவரையில் சாதாரண நிலையில் இருந்த அம்மா அவர்கள் இசைஞானியின் வருகைக்கு பிறகு மிகப் பெரிய உயரத்திற்கு சென்றார்.

'மச்சானைப் பாத்தீங்களா' மாஸ் ஹிட் பாடல். 'அன்னக்கிளி உன்னைத் தேடுதே' பாடல் தனிமையில் வாழும் ஒரு பெண்ணின் சோகத்தை வெளிப்படுத்தும் கிளாஸ் பாடல். 'கனவோடு சில நாள்..நெனவோடு சில நாள்..உறவில்லை பிரிவில்லை தனிமை பல நாள்.. புள்ளிப் போட்ட ரவிக்கைக்காரி புளியம்பூ சேலைக்காரி நெல்லறுக்க போகையில் யார் கன்னி எந்தன் காவலடி...?' வரிக்கு வரி அவளின் நிலைமையை பஞ்சு அருணாசலம் அவர்கள் சொல்லி இருப்பார். இசைஞானி அதற்கு இசை வடிவம் கொடுத்திருப்பார். தன் குரலால் அந்த பாட்டை மிக மிக உயரத்தில் கொண்டு போனார் ஜானகி அவர்கள்.

ஜானகி மறைவு
ஜானகி மறைவு

இன்னொன்று 'சுத்த சம்பா பச்சை நெல்லு குத்தத்தான் வேணும்..' கல்யாண நிகழ்வு தொடங்கும் முன்னர் பாடும் பாடல். கல்யாணத்திற்கான பலகாரங்கள் செய்ய நெல் குத்த அழைக்கும் பாடல். அந்த பணியில் ஈடுபடும் போது களைப்பு தெரியாமல் இருக்க பெண்கள் பாட்டுப் பாடுவார்கள். அதற்கு 'வள்ளைப்பாட்டு' என்று பெயர். இதுபோன்ற பாடல்களை சங்ககால இலக்கியங்களில் காணலாம்.

70 கள் வரையில் இந்த பழக்கம் இருந்தது. காலப்போக்கில் அது மாறிவிட்டது. இலக்கியத் தரம் வாய்ந்த பாடல் . இன்றைய தலைமுறைக்கு இது முற்றிலும் புதிதாக இருக்கும். அவர்களிடம் இதைப் பற்றிய புரிதலை உருவாக்கும் வகையில் அவர்கள் பாணியில் இது தொடர்பான 'ரீல்ஸ்'வெளியிடலாம். ஒரு பாட்டு ஓராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் வாழ்வியல் முறையை நமக்கு எடுத்துக்காட்டும் விதமாக அமைந்ததற்கு காரணம் ஜானகி அவர்களின் அந்த குரல்.

'என் இனிய தமிழ் மக்களே' என்ற குரல் திரை உலகில் காலெடுத்து வைத்த '16 வயதினிலே' படத்தில் இடம்பெற்ற 'செந்தூரப் பூவே செந்தூரப் பூவே ஜில்லென்ற காற்றே என் மன்னன் எங்கே' பாடல் பட்டி தொட்டிகளில் எல்லாம் இவர் குரல் ஒலிக்க ஆரம்பிக்க...படம் சூப்பர் ஹிட்டானது. அவருக்கு தேசிய விருது வாங்கித் தந்தது.

"இஞ்சி இடுப்பழகா.." பாடல் நம்மை இன்னொரு தளத்திற்கு கடத்திச் செல்லும். கதாநாயகனோடு திடீர் திருமணம் நடந்த அதிர்ச்சியில் இருக்கும் மணப்பெண் தனது முதல் இரவில் பாடும் பாடல் இது. அழகாக மயிலிறகால் வருடுதல் போன்ற உணர்வை ஏற்படுத்திய பாடல். இந்த பாடல் மீண்டும் அவருக்கு தேசிய விருதை பெற்றுத் தந்தது.

ஜானகி அவர்கள் மாஸாகவும் பாடுவார். கிளாஸாகவும் பாடுவார். ஒரு சிலரால் மட்டுமே இதைச் செய்ய முடியும். அதில் முதன்மையானவர் திருமதி ஜானகி அவர்கள். 'டாடி, டாடி ஓ மை டாடி' என்று குழந்தையாகவும் பாடுவார். 'போடா போடா பொக்க எள்ளு காட்டுக்கு தெக்க..' என்று வயதான குரலிலும் பாடுவார்.

ஜானகி மறைவு
ஜானகி மறைவு

இன்று அவர் நம்மிடையே இல்லை. காற்றோடு கலந்து விட்டார். நம் காதுகளை கூர்மையாக வைத்துக் கொண்டு கேட்டால்... "காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றைத் தேடுதே..." "கண்டேன் எங்கும் பூமகள் நாட்டியம் காண்பதெல்லாமே அதிசயம் ஆனந்தம் காற்றினிலே வரும் கீதம்.." "காற்றுக்கென்ன வேலி கடலுக்கென்ன மூடி" ஜானகி அவர்கள் பாடிய பாடல்கள் காற்றில் கலந்து வந்து ஒலிக்கும். நம்மை மறந்து ரசிப்போம். இதுதான் தியான நிலை. நம் மனதிற்கு அமைதியை தரும் நிலை.

"நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் புரியுமா அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா... உலகே அழிஞ்சாலும் உன் உருவம் அழியாதே..."

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!

Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

'எந்த மோதலும் இல்லை' - ஜானி மாஸ்டர் பதிவு; நடன சங்கப் பஞ்சாயத்தை தீர்த்து வைத்த சிரஞ்சீவி

தெலுங்குத் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடனக் கலைஞர்கள் சங்கத்தில் சமீபத்தில் ஒரு பிரச்னை. அந்தச் சங்கத்தின் தலைவர் நடன இயக்குநர் ஜானி மாஸ்டரின் மனைவி சுமலதா ஆவார். சங்கத்தில் சில நிர்வாகிகளுக்கான தே... மேலும் பார்க்க

Vikatan Cinema Awards மேடையில் 'South Indian Icon' நடிகை கீர்த்தி சுரேஷ்! | Photo Album

Vikatan Cinema Awards: "அடுத்த படத்துல இருந்து எனக்கு சம்பளம் தரணும்!" - 'சிறை' அக்‌ஷய் குமார் கலகல| Live மேலும் பார்க்க

'தென்னிந்தியாவின் நைட்டிங்கேல்' எஸ்.ஜானகி மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல்!

புகழ்பெற்ற பின்னணி பாடகியான எஸ். ஜானகி 'தென்னிந்தியாவின் நைட்டிங்கேல்' மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.முதல்வர் விஜய் தெரிவித்துள்ள இரங்கல் செய்தியில், `இந்தியத் திரையிசை உலகில் த... மேலும் பார்க்க

இசைக்குயில் எஸ்.ஜானகி காலமானார் - மைசூரில் உயிர் பிரிந்தது!

இசைக்குயில் எனத் தென்னிந்தியத் திரையுலகம் கொண்டாடிய பிரபல பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி, இன்று மாலை மைசூரில் காலமானார். அவருக்கு வயது 88.ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டத்திலுள்ள பலல்படலா என்ற ஊரில் 1938, ... மேலும் பார்க்க