ஈரோடு: 'குலுக்கல் முறையில் தங்கக் காசு' - கூட்டம் சேர்க்க புது ஐடியா; பேசுபொருளா...
சிவகங்கை : கொலை முயற்சி வழக்கில் கைதான இளைஞர் உயிரிழந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் - காரணம் என்ன?
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஜீவா நகரைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். கோழிக்கடையில் வேலை செய்கிறார். இவரது நண்பர் ஆதனூரைச் சேர்ந்த அழகர். இவர் உணவகத்தில் பணிபுரிகிறார். கடந்த 5-ம் தேதி இரவு இருவரும் பணி முடிந்து இருசக்கர வாகனத்தில், கிருஷ்ணராஜபுரம் பகுதியில் சென்றபோது, அவர்கள் மீது அதே பகுதியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி ஆகாஷ் டெல்சன், குணா ஆகியோர் வந்த இருசக்கர வாகனம் மோதியது.
இதில், இரு தரப்புக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது நால்வரும் கலைந்து சென்றனர். பின்னர், கிருஷ்ணராஜபுரம் மயானம் அருகே ஜெயக்குமார், அழகர் ஆகியோர் பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது, அங்கு வந்த ஆகாஷ் டெலிசன், குணா ஆகியோர் இருவரையும் வாளால் வெட்டிவிட்டு தப்பியதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதலில் காயமடைந்த ஜெயக்குமார், அழகர்சாமி ஆகிய இருவரும் காயமடைந்தனர். இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பரபரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக மானாமதுரை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ஆகாஷ் டெலிசன் மற்றும் குணா ஆகிய இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கில் போலீஸாரிடமிருந்து தப்ப முயன்ற ஆகாஷ் டெலிசன் பாலத்திலிருந்து தவறி கீழே விழுந்ததில் வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து நேற்று முன்தினம் மானாமதுரை குற்றவியல் நீதித்துறை நடுவர் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு சென்று ஆகாஷ் மற்றும் குணா ஆகிய இருவரையும் 18 ஆம் தேதிவரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து ஆகாஷ்டெலிசன் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் உள்ள சிறைவாசிகளுக்கான சிகிச்சை மையத்தில் மாற்றப்பட்டார்.
இந்நிலையில் நேற்று அதிகாலை ஆகாஷ் டெலிசனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். போலீஸார் தாக்கியதால்தான் ஆகாஷ் டெலிசன் உயிரிழந்ததாகக்கூறி அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மதுரை- ராமேசுவரம் சாலையில் நேற்று காலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து பேசிய ஆகாஷ்டெலிசனின் தாயார் ஆனந்தி, “உன் மகன் கிடைத்தால் கொன்றுவிடுவோம் என சொன்னார்கள், இப்போது காவல் துறையினர் அடித்து கொன்று விட்டார்கள்" என கண்ணீர்விட்டபடி அழுதுகூறினார்.

இதையடுத்து தந்தை ராஜேஷ்கண்ணன் பேசியபோது, "எனது மகனை ஒரு வழக்கில் கைது செய்ய வேண்டும் என கூறி என்னையும் என் மனைவியையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று வைத்துக் கொண்டனர். பின்னர் எனது மகன் கிடைத்து விட்டதாக கூறி எங்களை அனுப்பி வைத்தனர். இதையடுத்து எனது மகனுக்கு கால் முறிவு ஏற்பட்டதாக கூறி மானாமதுரையில் சிகிச்சையில் இருப்பதாக தெரிவித்தனர்.
அப்போது எனது மனைவி நேரில் சென்று பார்த்த போது காவல்துறையினர் அடித்ததாக ஆகாஷ் கூறியிருக்கிறார். இந்த நிலையில் திடீரென இன்று காலை காவல்துறையினர் போன் செய்து எனது மகன் உயிரிழரந்து விட்டதாக கூறினர். இது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது காவல்துறையினர் விசாரணை என்ற பெயரில் காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று காலில் கற்களை வைத்து அடித்து காலை உடைத்து தாக்கியுள்ளனர். என் மகன் தவறு செய்திருந்தால் அதற்கு தூக்கு தண்டனை கூட கொடுத்திருக்கலாம் இதுபோன்று அடித்து கொலை செய்ததை ஏற்றுக் கொள்ள முடியாது” என்றார்

இந்த சம்பவம் பூதாகரமான நிலையில் ஆகாஷ் டெலிசன் இறப்பு குறித்து காவல்துறை சார்பில் விளக்கம் கொடுக்கபட்டது. அதில், “ 6ம் தேதி அழகர் மற்றும் அவரது நண்பரை, ஆகாஷ் டெலிசன் அவரது நண்பர்களுடன் சேர்ந்து தாக்கியுள்ளார். ஆகாஷ் டெலிசன் அவரது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்யும் நோக்கத்துடன் ஆயுதங்களால் தாக்கினர். காயமடைந்த அழகர் அளித்த புகாரின் அடிப்படையில், மானாமதுரை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அழகர், ஆகாஷ் டெலிசன் இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் ஒருவருக்கொருவர் தெரிந்தவர்கள்.
ஆகாஷ் டெலிசனை கைது செய்யும்போது பாலத்தில் இருந்து விழுந்து அவரது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் ஆகாஷ் டெலிசனை மார்ச் 18 வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. மதுரை ராஜாஜி மருத்துவமனையில் நேற்று காலை ஆகாஷ் டெலிசனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. மதுரை ராஜாஜி மருத்துவமனையில் இன்று காலை 5.45 மணிக்கு ஆகாஷ் டெலிசன் உயிரிழந்தார் ” என தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ஆகாஷ் டெலிசன் உயிரிழந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் செய்யபட்டுள்ளது



















