`சில நாய்கள் விசுவாசமாக இல்லை' - பிரிந்துசென்ற எம்.பி.க்கள் மீது எம்.பி. சஞ்சய் ...
திருவாரூர்: அரசுப்பள்ளி வளாகத்தில் பிறந்தநாள் கொண்டாடிய தவெக நிர்வாகி! - வீடியோ வெளியாகி சர்ச்சை
தவெக-வின் மாவட்ட துணை செயலாளராக இருப்பவர் அகிலன். இவர் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குன்னலூர் ஊராட்சியை சேர்ந்த எக்கல் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆய்வுக்கு சென்றிருக்கிறார். பள்ளி நிர்வாகத்திடம் பள்ளியில் உள்ள குறைகளை கேட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

எவ்வித அரசு பணியிலும் இல்லாத, கட்சி பொறுப்பில் மட்டும் உள்ள அகிலன் எப்படி ஆய்வு மேற்கொள்ளலாம், சட்டத்தில் இதற்கு இடம் இல்லாத போது யார் அதற்கு அதிகாரம் கொடுத்தார்கள் என எதிர்கட்சியினர் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இடும்பாவனம் அரசுப்பள்ளியில் அகிலன் தனது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடியிருப்பதும் சர்ச்சையாகியிருக்கிறது.
திருத்துறைப்பூண்டி முத்துப்பேட்டைக்கு இடையில் உள்ள இடும்பானவனத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதன் வளாகத்தில் தவெக மாவட்ட துணை செயலாளர் இருக்கிறார். அவருக்கு பிறந்தநாள் என்பதால் தவெக நிர்வாகிகள் சால்வை போத்தி மாலை அணிவிக்கின்றனர். பின்னர் டூவீலர் சீட்டில் கேக் வைத்து அதனை அகிலன் வெட்டி கட்சியினருக்கு ஊட்டி விடுகிறார். அப்போது அருகில் இருப்பவர்கள் கைத்தட்டி உற்சாகத்தை வெளிப்படுத்துகின்றனர்.
இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவ பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அரசுப்பள்ளி வளாகத்தில் எப்படி பிறந்தநாள் கொண்டாடலாம் என்று கேள்வி எழுப்புவதால் இந்த விவகாரம் சர்ச்சையாகியிருக்கிறது.
தொடர்ந்து தவெக நிர்வாகிகள் எதாவது ஒரு சர்ச்சையில் சிக்குவது வாடிக்கையாகி விட்டது. இதை முடிவுக்கு கொண்டு வர தலைமை கட்சியினருக்கு கடிவாளம் போட வேண்டும் என்ற கருத்தையும் முன் வைக்கிறார்கள் சமூக மற்றும் அரசியல் பார்வையாளர்கள்.















