Quote of the day: 'நம்பிக்கையே முதல் வெற்றி!' - அமெரிக்க முன்னாள் அதிபர் சொல்வதை...
பொள்ளாச்சி: வாங்கிய லஞ்சத்தைத் திருப்பி தர முயன்ற எஸ்ஐ பணியிட மாற்றம்; வைரல் ஆடியோவின் பின்னணி என்ன?
கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த முகேஷ் என்பவருக்கும், ஏற்கனவே திருமணமான ஒரு பெண்ணுக்கும் திருமணத்திற்கு மீறிய உறவு இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனை அறிந்த அப்பெண்ணின் கணவன், மனைவியைச் சமாதானம் பேசி தனது வீட்டுக்கு அழைத்து வந்து வாழ்ந்து வந்துள்ளார்.
இதனால் கோபம் அடைந்த முகேஷ் அந்தப் பெண்ணிற்கும், அவரது கணவனுக்கும் மிரட்டல் விடுத்ததாகத் தெரிகிறது. இதையடுத்து கணவன் மற்றும் மனைவி இருவரும் கடந்த இரு தினங்களுக்கு முன்பு விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு, பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
இந்த விவகாரம் குறித்து பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய காவல் துறையினர் முகேஷை காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்க காவல் உதவி ஆய்வாளர் ஜான்சன் ரூ. 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றுக் கொண்டு, எச்சரித்து அனுப்பியதாகக் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் காவல் நிலையத்தில் பணியாற்றும் அனைவருக்கும் தெரியவந்துள்ளது. இதனால் சிறிது நேரத்தில் முகேஷை போனில் தொடர்பு கொண்ட தலைமை காவலர் நாகராஜன், “நீங்கள் கொடுத்த பணத்தைத் திருப்பி உதவி ஆய்வாளர் ஜான்சன் கொடுக்கச் சொன்னார். நீங்க எங்கே இருக்கிறீர்கள்?” எனக் கேட்டுள்ளார்.
அதற்கு முகேஷ், “நான் வெளியில் இருக்கிறேன். காலையில் கோவை சென்று விடுவேன். இப்போது வரமுடியாது” எனக் கூறியுள்ளார்.

தொடர்ந்து முகேஷ் தந்த லஞ்சப் பணத்தைத் திரும்ப பெற்றுக் கொள்ளுமாறு தலைமை காவலர் வற்புறுத்தவே, “காலில் வேண்டுமானாலும் விழுகிறேன். கொடுத்த பணம் கொடுத்ததாகவே இருக்கட்டும். பணம் எனக்கு வேண்டாம் இந்தப் பிரச்னையிலிருந்து எனக்கு தீர்வு கிடைத்தால் போதும். திருமணம் ஆகவில்லை என்று தான் அந்தப் பெண்ணிடம் பழகினேன். இனிமேல் நான் அந்தப் பிரச்னைக்கு வரமாட்டேன்” என முகேஷ் புலம்பியுள்ளார்.
இந்த ஆடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் லஞ்சப் புகாரில் சிக்கிய உதவி ஆய்வாளர் ஜான்சன் மற்றும் தலைமை காவலர் நாகராஜன் ஆகிய இருவரையும் ஆயுதப்படைக்குப் பணியிட மாற்றம் செய்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் நடவடிக்கை எடுத்துள்ளார்.













