திருவள்ளூர்: ரூ.3 கோடி இன்சூரன்ஸ் பணம்; அரசு வேலை - பாம்பை வைத்து அப்பாவை கொலை ச...
மும்பை கட்டடத்தில் நுழைந்து 7 பேரை தாக்கிய சிறுத்தை புலி - பல மணிநேரம் போராடி பிடித்த வனத்துறை
மும்பை மத்திய பகுதியில் பல ஏக்கர் நிலப்பரப்பில் வனப்பகுதி இருக்கிறது. இங்கு சிறுத்தை புலிகள் அதிக அளவில் வசிக்கின்றன. அவை அடிக்கடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து பொதுமக்களை தாக்கிய சம்பவங்கள் நடந்திருக்கிறது. மும்பை பயந்தர் கிழக்கு பகுதியில் உள்ள நவ்கரில் இருக்கும் பரிஜித் என்ற குடியிருப்பு கட்டடத்திற்குள் சிறுத்தைபுலி ஒன்று காலை நேரத்தில் நுழைந்தது.
பெண் ஒருவர் தெருநாய்களுக்கு சாப்பாடு போட்டுக்கொண்டிருந்தபோது சிறுத்தை கட்டடத்திற்குள் நுழைந்ததை பார்த்தார். இதையடுத்து அப்பெண் கட்டட வாசிகளிடம் தெரிவித்தார். அவர்கள் உடனே போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். பொதுமக்கள் பரபரப்பும் அச்சமும் அடைந்தனர். போலீஸாரும், வனத்துறையினரும் விரைந்து வந்தனர்.
கட்டட வளாகத்திற்குள் நுழைந்த சிறுத்தைபுலி பின்புறமாக முதல் மாடிக்கு சென்றது. முதல் மாடியில் இருந்த வயதான இருவர் உட்பட 4 பேரை தாக்கி காயப்படுத்தியது. பின் அந்த வீட்டின் கழிவறைக்குள் சென்று பதுங்கிக்கொண்டது.

தீயணைப்பு துறையினரும், வனத்துறையினரும் சிறுத்தை புலியை பிடிக்க முயன்றனர். மேலும் வீட்டு ஜன்னல் கிரிலை உடைத்து அந்த வீட்டில் இருந்த குடும்பத்தினரை பத்திரமாக வெளியில் அழைத்து சென்றனர். சிறுத்தை உள்ளே நுழைந்த தகவல் தெரிய வந்தவுடன் அக்கட்டடத்திற்கு வெளியில் அதிகமானோர் கூடினர்.
அவர்களை போலீஸார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். சிறுத்தை புலியை பிடிக்க முயன்ற வனத்துறை ஊழியர்கள் 3 பேரையும் சிறுத்தை புலி கடித்து காயப்படுத்தியது. காலையில் தொடங்கிய மீட்பு பணி 7 மணி நேரம் கழித்து மாலையில் தான் முடிந்தது. சிறுத்தை புலிக்கு மயக்க ஊசி போட்டு அதனை பிடித்தனர். பயந்தர் பகுதியில் வனப்பகுதி கிடையாது. அப்படி இருக்கும்போது எப்படி அங்கு சிறுத்தை புலி வந்தது என்பது ஆச்சரியமாக இருக்கிறது.
சிறுத்தை புலி தாக்கி 7 பேர் காயம் அடைந்தனர். அவர்களின் உயிருக்கு ஆபத்து இல்லை. இரண்டு பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மீட்பு பணிகளை நேரில் பார்வையிட சிவசேனா அமைச்சர் பிரதாப் சர்நாயக் வந்திருந்தார். குடியிருப்பு கட்டடத்திற்குள் சிறுத்தை புலி நுழைந்தது குறித்து கவலை தெரிவித்த முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், மனித நடமாட்டம் உள்ள பகுதியில் இருந்து சிறுத்தை புலிகளை வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்வது குறித்து ஆய்வு செய்யப்படும் என்று தெரிவித்தார். அதோடு சிறுத்தை புலிகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த அதற்கு கருத்தடை ஆபரேசன் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 5 சிறுத்தைகளுக்கு கருத்தை ஆபரேசன் செய்யப்பட இருக்கிறது.



















