விருதுநகர்: பொன்மஞ்சள் விரிப்பாய் பூத்துக் குலுங்கும் சூரியகாந்தி மலர்கள்! - Sce...
அஜித் பவார்: மது, புகையிலைக்கு `நோ' ; ஒழுக்கம், கண்கண்ணாடியில் அதிக ஆர்வம்; சுத்தம் மிக முக்கியம்!
மகாராஷ்டிரா அரசியலில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக அசைக்க முடியாத சக்தியாக விளங்கிய துணை முதல்வர் அஜித் பவார் விமான விபத்தில் அகால மரணம் அடைந்தது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. அஜித் பவார் எப்போதும் வேலை வேலை என்று இருப்பார். அதிகமான நேரங்களை தொண்டர்களுடனும், கட்சிப்பணியிலும் ஈடுபடுத்திக்கொள்வார். அதனால்தான் தேசியவாத காங்கிரஸ் கட்சியை முழுமையாக தனது கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும் என்று கருதி தனது சித்தப்பா சரத் பவாரிடமிருந்து தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டார்.
பாராமதியின் செல்லப்பிள்ளையாகவும், புனேயில் வலுவான சக்தியாகவும் விளங்கிய அஜித் பவார் பொதுவாக ஒழுக்கத்தை விரும்பக்கூடியவர் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.
அவரும் ஒழுக்கத்தை கடைப்பிடிப்பார். அவர் கண்கண்ணாடிகளை தேர்ந்தெடுப்பதில் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்.

குறிப்பாக சன்கிளாஸ் வகைகளில் மேபேக் ரகங்களில் இருந்து வழக்கமான ரே பான் வரை பலதரப்பட்ட பிராண்ட் சன்கிளாஸ்கள் அஜித்பவாரிடம் இருந்தது. லென்ஸ்கள் எப்பொழுதும் தடிமனாகவும், சாய்வாகவும், சில சமயங்களில் மென்மையானதாகவும், பெரும்பாலும் தடிமனான பிரேம்களுடன் இருக்கும்.
கைக்கடிகாரங்கள் மற்றும் உடைகள் போன்றவற்றை தேர்ந்தெடுப்பதிலும் அதிக அக்கறை செலுத்தக்கூடியவர். எங்கு செல்கிறோம் என்பதை பொறுத்து தன் தோற்றத்தை மாற்றிக்கொள்வார். சட்டசபை கூட்டத் தொடர்களிலும், பட்ஜெட் தாக்கல் செய்யும்போதும் சஃபாரி சூட் மற்றும் பூட்ஸ் அணிவது வழக்கம். அவர் பிரதமரைச் சந்திக்க அல்லது நிதியமைச்சராக ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டங்களில் பங்கேற்பதற்காகப் புது டெல்லிக்குச் செல்லும் போது, தனது பாரம்பரிய குர்தா பைஜாமாக்களைத் தவிர்த்துவிட்டு வழக்கமான பார்மல் உடைகளை அணிவது வழக்கம்.
புகையிலை, மதுவை வெறுத்தார்
சரத் பவார் புகையிலை பயன்படுத்தி வந்த நிலையில் அஜித் பவார் அதிலிருந்து விலகியே இருந்தார். சிறு வயதிலேயே அஜித் பவார் மது மற்றும் புகையிலையிலிருந்து விலகியே இருந்தார். அவர் மறைந்த மகாராஷ்டிரா முன்னாள் உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டீலிடம் புகையிலை மெல்லுவதை நிறுத்துமாறு எச்சரித்தார்.
அஜித் பவார் எப்போதும் தானும், தன்னை சுற்றி இருக்கும் இடமும் தூய்மையாக இருக்கவேண்டும் என்று விரும்பக்கூடியவர். சுத்தமாகவும் நேர்த்தியாகவும் இருப்பதும், பணியிடமும் வீடும் சுத்தமாக இருப்பதை உறுதி செய்வதும் பிறவிப் பண்புகளாகும் என்று எப்போதும் கூறுவார். ஒரு முறை அஜித் பவார் தனது பேட்டியில்,"பள்ளியில் இருந்தே புத்தகங்களை அலமாரியில் அழகாக வைப்பேன். உடைகளை சரியாக மடித்து, காலணிகளை அதன் குறிப்பிட்ட இடத்தில் வைப்பேன். எனது சைக்கிளை தவறாமல் சுத்தம் செய்வேன்.

எனது முதல் பைக் 1965 பதிவு எண் கொண்ட ராஜ்தூத். எனக்கு பேனாக்கள், கைக்கடிகாரங்கள் மற்றும் சன்கிளாஸ்கள் பிடிக்கும். விதவிதமான உடைகள் மற்றும் அணிகலன்கள் அணிந்தேன். அதிர்ஷ்டவசமாக என்னால் அவற்றை வாங்க முடிகிறது. ஏன் அவற்றை விரும்புகிறேன் என்று பரமேஷ்வருக்கு மட்டுமே தெரியும்" என்று கூறினார்.
அஜித் பவாரின் சுத்தம் குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அமைச்சர் ஹசன் முஸ்ரீப் கூறுகையில், ''நாங்கள் 2004-ல் முதல்முறையாக அமைச்சர்கள் ஆனோம், அப்போதிருந்து அவரை நான் அறிவேன். அவர் தூய்மையில் மிகவும் கண்டிப்பானவர். அவர் உங்களைச் சந்தித்தால் அழுக்குத் துணிகளையோ அல்லது தூசியோ கிடப்பதைக் கண்டால், அதைச் சுத்தம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துவார். அஜித் பவாரை இதற்காகவே ஒருமுறை எனது வீட்டிற்கு அழைப்பதைத் தவிர்த்தேன். அவர் ஒரு தொலைக்காட்சி பெட்டியின் மேல் அல்லது சோபாவின் பின்னால் தூசி இருந்தால் கூட அதை கவனிப்பார். மேலும், அவர் கட்டிடக்கலை குறித்து நன்கு அறிந்தவர் என்பதால் கட்டமைப்பு மற்றும் அமைப்புகளில் உள்ள தவறுகளைச் சுட்டிக்காட்டுவார்," என்று கூறினார்.














