'லட்சக்கணக்கில் முறைகேடு அம்பலம்? கிராமசபை கூட்டத்தில் கேள்விகளால் துளைத்த மக்கள...
'அமைச்சரவை மாற்றம்; இடைத்தேர்தலில் ஜெய் பவார்' - அஜித் பவார் மனைவி துணை முதல்வர்? அடுத்து என்ன?
மகாராஷ்டிரா மாநிலம் பாராமதியில் இரண்டு நாள்களுக்கு முன்பு நடந்த விமான விபத்தில் துணை முதல்வர் அஜித்பவார் அகால மரணமடைந்தார்.
அவரது உடல் நேற்று பாராமதியில் தகனம் செய்யப்பட்டது. இதில் பல ஆயிரம் பேர் கலந்துகொண்டனர். அஜித்பவார் மரணம் அடைந்து இருப்பதால் அவரது இடத்தை யார் நிரப்புவது என்ற கேள்வி எழுந்துள்ளது.
நேற்று இறுதிச்சடங்குகள் முடிந்த பிறகு தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் அஜித்பவாரின் மனைவி சுனேத்ரா பவாரைச் சந்தித்துப் பேசினர். இந்தச் சந்திப்பின்போது மகாராஷ்டிரா அமைச்சரவையில் சேர்ந்து துணை முதல்வர் பதவியை ஏற்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். ஆனால் இது குறித்து சுனேத்ரா உடனே பதில் சொல்லவில்லை.
இப்போது சுனேத்ரா பவார் ராஜ்யசபை உறுப்பினராக இருக்கிறார். அஜித்பவார் காலமானதைத் தொடர்ந்து நடைபெற இருக்கும் பாராமதி இடைத்தேர்தலில் அஜித்பவாரின் மகன்கள் இரண்டு பேரில் ஒருவரை நிறுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.

இது குறித்து அஜித்பவாருக்கு மிகவும் நெருக்கமான மாநில அமைச்சர் நர்ஹரி சரிவால் கூறுகையில், ''நான் பேசிய அனைவருமே மைத்துனி (சுனேத்ரா) அமைச்சரவையில் சேர வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர். இது குறித்து கட்சியின் மற்ற தலைவர்களுடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்துவேன்'' என்றார்.
கட்சி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தலைவர்கள் விரைவில் மும்பையில் கூடி தேசியவாத காங்கிரஸின் சட்டமன்றத் தலைவர் யார் என்பதை முடிவு செய்வார்கள். கட்சியின் மற்ற நிர்வாகிகளும் அஜித்பவார் இடத்தை சுனேத்ரா பவாருக்குக் கொடுக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர். ஆனால் கட்சியின் மற்ற தலைவர்கள் இது குறித்து கருத்து தெரிவிக்கவில்லை.
அஜித்பவார் உயிரோடு இருந்தபோது பாராமதியில் தனது மகன் ஜெய் பவாரை தேர்தலில் நிறுத்துவது குறித்து ஆலோசித்தார். இது தொடர்பாக அஜித்பவார் பாராமதி கட்சி நிர்வாகிகளிடமும் ஆலோசனை நடத்தினார்.
ஜெய் பவாரை பெரிய அளவில் கட்சிப் பணியில் ஈடுபடுத்த திட்டமிட்டு இருந்தார். இதனால் ஜெய் பவாரையே பாராமதி இடைத்தேர்தலில் நிறுத்தவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஆனால் தேசியவாத காங்கிரஸ் இணைப்பு முயற்சி தோல்வி அடையும் பட்சத்தில் சுனேத்ரா பவார், கட்சிக்குத் தலைமை தாங்கவேண்டும் என்று கட்சித் தலைவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
சுனேத்ரா பவார் அரசியல் குடும்பத்தில் இருந்து வந்தவர் என்பதால் அவரால் கட்சியைத் திறம்பட வழிநடத்த முடியும் என்று கட்சியின் மூத்த தலைவர்கள் நம்புகின்றனர்.
அதேசமயம் ஜெய் பவாரை கட்சிக்குள் கொண்டு வர அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. பாரத் பவார் கடந்த 2019ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். சுனேத்ரா பவார் கடந்த மக்களவைத் தேர்தலில் பாராமதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார்.
சுனேத்ரா பவார் கட்சிக்குத் தலைமை தாங்க முன்வரத் தயங்கும் பட்சத்தில் கட்சியின் மூத்த தலைவர் பிரபுல் பட்டேலை கட்சிக்குத் தலைமை தாங்கும்படி கேட்டுக்கொள்வார்கள் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அமைச்சரவையில் விரைவில் மாற்றம்
அஜித்பவாரின் திடீர் மரணத்தைத் தொடர்ந்து மகாராஷ்டிரா அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட இருக்கிறது. ஏற்கனவே தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தனஞ்சே முண்டே தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். இப்போது அஜித்பவார் வகித்து வந்த பதவியும் காலியாகி இருக்கிறது.
இதனால் அப்பதவிக்கு அமைச்சர்களை நிரப்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இப்பதவிக்கு யாரை நியமிக்கலாம் என்பதை தேசியவாத காங்கிரஸ் கட்சி முடிவு செய்த பிறகு உடனே அமைச்சரவை விரிவுபடுத்தப்படும் என்று பா.ஜ.க வட்டாரங்கள் தெரிவித்தன.
அஜித்பவார் நிதியமைச்சராக இருந்தார். தற்போது பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டியிருக்கிறது. இதனால் தற்காலிகமாக முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் நிதித்துறையைத் தனது கட்டுப்பாட்டில் எடுத்து பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

















