Jana Nayagan: 'தங்கமே தளபதி!' - 'ஜனநாயகன்' படத்தின் ஆனந்த விகடன் எக்ஸ்க்ளூசிவ் ஸ...
இந்தூரில் அசுத்தமான தண்ணீரால் 7 பேர் பலி: `தேவையில்லாத கேள்வி வேண்டாம்'- சீறிய அமைச்சர்
மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் உள்ள பாக்யரபுரா என்ற இடத்தில் அசுத்தமான தண்ணீரை குடித்ததால் 200க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 7 பேர் உயிரிழந்திருப்பதாக மாநில அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மற்றவர்கள் அங்குள்ள 27 மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மாநில அரசு நிர்வாகம் விரைந்து செயல்பட்டு தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறது. முதல் கட்ட விசாரணையில் சாக்கடை நீர் குடிநீருடன் கலந்ததுதான் இந்த சம்பவத்திற்கு காரணம் என்று தெரியவந்துள்ளது.
உயிரிழப்புகள் 14 இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் அதனை மறுத்துள்ள இந்தூர் மேயர் புஷ்யமித்ரா, 7 பேர் தான் இறந்துள்ளனர் என்று தெரிவித்தார். அதேசமயம் முதல்வர் மோகன் யாதவ், நான்குபேர் தான் இறந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

மேற்கொண்டு முதல்வரிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது, ``பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை கிடைத்த பிறகு தான் இறப்பு குறித்த தகவல் தெரியும்" என்றார்.
இந்தியாவில் மிகவும் சுத்தமான நகரம் என்று 8வது முறையாக விருது பெற்றுள்ள இந்தூரில் அசுத்தமான தண்ணீரை குடித்து பொதுமக்கள் உயிரிழந்திருப்பது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதோடு உண்மையிலேயே இந்தூர் சுத்தமான நகரமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த மாநில அரசு உயர்மட்ட விசாரணைக்குழு அமைத்துள்ளது. மேலும் குடிநீரில் சாக்கடை நீர் கலப்பதை தடுக்க தவறிய பொறியாளர்கள் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இப்பிரச்னை குறித்து பத்திரிகையாளர்களுக்கு அமைச்சர் கைலாஷ் விஜய்வர்கியா பேட்டியளித்த போது, ஒரு நிருபர் `சம்பவத்திற்கு ஏன் ஜூனியர் அதிகாரிகளை மட்டும் குறை சொல்கிறீர்கள், மேல் மட்டத் தலைவர்களை பற்றி இதில் விவாதிப்பதில்லை' என்று கேட்டார். உடனே அமைச்சர் கைலாஷ், ''அதை விட்டுவிடுங்கள், தேவையில்லாத கேள்விகளை கேட்க வேண்டாம்'' என்று எரிச்சலுடன் தெரிவித்தார். இது தவிர மேலும் சில வார்த்தைகள் பேசினார்.
அவரது பேச்சு வைலரானது. இதையடுத்து அமைச்சர் கைலாஷ் தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்து எக்ஸ் தள பக்கத்தில் விளக்கம் அளித்து இருக்கிறார். தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இலவச சிகிச்சை கொடுக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது. சம்பவ பகுதியில் டேங்கர் மூலம் மக்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.




















