விருதுநகர்: "பிறந்த மண்ணுக்கு எதுவும் செய்யவில்லை" - 20 சென்ட் நிலத்தை சாலை அமைக...
இருமல் மருந்துக்கு புதிய கட்டுப்பாடு: மத்திய அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?
இருமல் மருந்து குடித்து குழந்தைகள் உயிரிழந்த சம்பவங்களைத் தொடர்ந்து, இருமல் மருந்துகளின் விற்பனையைக் கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது. மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் மருந்தகங்களில் நேரடியாக விற்கப்படும் இருமல் மருந்துகளின் விற்பனைக்குத் தடை விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
தற்போது, இருமல் மருந்துகள் 'ஷெடியூல் கே' ( Schedule K) என்ற பிரிவின் கீழ் வருகின்றன. இந்தப் பிரிவின்படி, இருமல் மருந்துகளை விற்பனை செய்ய முழுமையான மருந்து விற்பனை உரிமம் (full drug-sale licence) தேவையில்லை. இதன் காரணமாகவே, கிராமப்புறங்களில் உள்ள சிறிய கடைகளில்கூட இருமல் மருந்துகள் எளிதாக விற்பனை செய்யப்படுகின்றன.

சமீபத்தில், மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில், இருமல் மருந்தைக் குடித்து குழந்தைகள் உயிரிழந்தது நாட்டையே உலுக்கியது.
இந்த சோக சம்பவத்தைத் தொடர்ந்து தான் இருமல் மருந்து விற்பனையில் கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டுவர மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO) இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.
இந்தத் திட்டம் செயல்முறைக்கு வந்தால், மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இருந்தால் மட்டுமே இருமல் மருந்துகளை வாங்க முடியும் என்று கூறப்படுகிறது.
அனைத்து மருந்து தயாரிப்பு நிறுவனங்களும் உலகளாவிய உற்பத்தி நடைமுறைகளை (GMP) கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் இல்லையெனில் சம்மந்தப்பட்ட ஆலைகள் மூடப்படும் என்று மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு கடுமையாக எச்சரித்துள்ளது.

















