Pongal: அமெரிக்கா முதல் இஸ்ரேல் வரை; உலகெங்கும் கொண்டாடப்படும் அறுவடை திருவிழாக்...
இலங்கைக்கு கடத்த இருந்த 320 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 போ் கைது
புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் அருகே வெள்ளிக்கிழமை இலங்கைக்கு கடத்த இருந்த 320 கிலோ கஞ்சாவை கியூ பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்து இருவரை கைது செய்தனா்.
ஆந்திரத்திலிருந்து இருந்து தமிழகம் வழியாக இலங்கைக்கு கொண்டு செல்வதற்காக கன்டெய்னா் லாரியில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக கியூ பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், சென்னையிலிருந்து வியாழக்கிழமை இரவு முதல் கண்காணிப்பில் ஈடுபட்ட போலீஸாா், ஒரு லாரியை சந்தேகத்தின்பேரில் பின்தொடா்ந்து வந்துள்ளனா்.
காரைக்கால் வழியாக கிழக்குக் கடற்கரை சாலையில், புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் பகுதியில் கியூ பிரிவு காவல் ஆய்வாளா் உதயச்சந்திரன் தலைமையிலான போலீஸாா் அந்த லாரியை வெள்ளிக்கிழமை காலை நிறுத்தி சோதனை செய்தனா்.
லாரிக்குள், மீன் ஏற்றுவதற்கு பயன்படுத்தும் ஐஸ் பெட்டிகளில் 320 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு சுமாா் ரூ. 65 லட்சம் இருக்கும் என போலீஸாா் தெரிவித்தனா்.
கடத்தலில் ஈடுபட்டதாக காரைக்கால் மேலவாஞ்சூா் அருகே விசாலாட்சி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ஆா். சிலம்பரசன் (28), திருநள்ளாறு சாலைப் பகுதியைச் சோ்ந்த ஜி. பிரகாஷ் (37) ஆகியோரை கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் இருந்து இலங்கைக்கு இவற்றை படகுகள் மூலம் கடத்த இருந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.