உ.பி: கணவனை பழிவாங்க ஆண் நண்பருடன் சேர்ந்து திட்டம்; மாட்டிறைச்சியை அனுப்பி சிக்...
உ.பி: கணவனை பழிவாங்க ஆண் நண்பருடன் சேர்ந்து திட்டம்; மாட்டிறைச்சியை அனுப்பி சிக்கவைக்க முயன்ற பெண்!
உத்தரப்பிரதேச மாநிலம், அமீனாபாத்தை சேர்ந்த வாசீம் என்பவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வாசீம் பெயரில் 12 கிலோ மாட்டு இறைச்சி ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்யப்பட்டு இருந்தது. அதோடு அவருக்கு மாட்டு இறைச்சி டெலிவரி செய்யப்படுவது குறித்து போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
போலீஸார் விரைந்து சென்று இறைச்சி ஏற்றி வந்த ஆன்லைன் போர்டர் வாகனத்தை சோதனை செய்து மாட்டு இறைச்சியை பறிமுதல் செய்தனர். இது குறித்து போலீஸார் வாசீமிடம் விசாரித்த போது தான் அந்த இறைச்சியை ஆர்டர் செய்யவில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

இதையடுத்து அதனை யார் ஆன்லைனில் முன்பதிவு செய்தது என்பது குறித்து போலீஸார் விசாரித்தனர். விசாரணையில் வாசீமை சிக்கவைக்க வேண்டும் என்பதற்காக இது போன்று அவர் பெயரில் ஆன்லைனில் மாட்டு இறைச்சி ஆர்டர் செய்யப்பட்டு இருப்பதை போலீஸார் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து இது குறித்து வாசீமிடம் விசாரித்தபோது அவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்வது தெரிய வந்தது. வாசீம் மனைவி அமீனாவும், அவரது ஆண் நண்பர் அமீன் என்பவரும் சேர்ந்துதான் இந்த மாட்டு இறைச்சியை வாசீம் பெயருக்கு அனுப்பி இருந்தது தெரிய வந்தது.
இதற்கு முன்பும் இதே போன்று கடந்த செப்டம்பர் மாதம் வாசீம் வாகனத்தில் இருந்து மாட்டிறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. வாசீம் தனது வாகனத்தை நிறுத்தி இருந்தார். அதிலிருந்து மாட்டிறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. இதற்காக போலீஸார் வாசீமை கைது செய்தனர். விசாரணைக்கு பிறகு அவரை விடுவித்துவிட்டனர். திட்டமிட்டு வாசீமை சிக்க வைக்க அவரது மனைவி இது போன்ற காரியத்தில் ஈடுபட்டு வந்ததை போலீஸார் கண்டு பிடித்தனர். இதற்கு உதவி செய்த அமீனாவின் கூட்டாளி ஏற்கனவே கைது செய்யப்பட்டுவிட்டார்.
ஆனால் அமீனா தலைமறைவாகிவிட்டார். இது தொடர்பான வழக்கில் அமீனா லக்னோ உயர் நீதிமன்றத்தில் ஆஜராக வந்திருந்தார். அவரை கோர்ட் வளாகத்தில் கைது செய்ய போலீஸார் முயன்றனர். இதையடுத்து 3 போலீஸார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். உத்தரப்பிரதேசத்தில் மாட்டிறைச்சி வைத்திருப்பது கிரிமினல் குற்றமாக கருதப்படுகிறது.

















