காவலர் எழுத்துத் தேர்வு; செல்போன் மூலம் காப்பியடித்தவர் கைது
ஊட்டி: டாஸ்மாக் பாராக மாறிய நீர்நிலை - வனவிலங்குகள் பாதிப்பு; வனத்துறை, வருவாய்த்துறை அலட்சியம்!
நீலகிரி மாவட்டம் ஊட்டியிலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது காட்டேரி அணை. நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்த அணையிலிருந்து அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலைக்கு குழாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்த அணைக்கான முக்கிய நீரோடைகளில் ஒன்றாகும் கேத்தி நீரோடை.

தொட்டபெட்டா மலை அடிவாரத்தில் உருவாகி, காட்டேரி அணைக்குச் செல்லும் இந்த நீரோடை, மலைப் பகுதிகளில் காய்கறி உற்பத்தி, கால்நடை மற்றும் வனவிலங்குகளுக்கான தண்ணீர் தேவையையும் பூர்த்தி செய்து வருகிறது.

இந்த நீரோடையை முறையாக தூர்வாருவதில்லை, ஆக்கிரமிப்புகளை அகற்றி எல்லைகளை பராமரிப்பதில்லை என வருவாய் துறையை மக்கள் சாடி வந்த நிலையில், கேத்தி பாலாடா பகுதியில் நீரோடையை திறந்தவெளி பாராக பயன்படுத்தி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து தெரிவித்த உள்ளூர் விவசாயிகள் கூறியதாவது:
“நீரோடைப் பக்கத்திலேயே இயங்கி வரும் டாஸ்மாக் கடையிலிருந்து மதுபாட்டில்களை வாங்கி வரும் நபர்கள், நீரோடை கரையில் உட்கார்ந்து மது அருந்துகின்றனர். தடை செய்யப்பட்ட டம்ளர்கள், ஜூஸ் பாக்கெட்டுகள் போன்றவற்றை இங்கேயே வீசி செல்கின்றனர்.
நீரோடையிலிருந்து விளை நிலங்கள் வரை இந்தக் கழிவுகளே குவிந்து கிடக்கின்றன. இதனால் கால்நடைகள் மற்றும் வனவிலங்குகள் பாதிப்படைந்து வருகின்றன.

இது குறித்து வனத்துறை மற்றும் குன்னூர் வருவாய்த்துறையினரிடம் பலமுறை புகார் அளித்தும், அவர்கள் கவனிக்கவில்லை என வேதனையுடன் தெரிவித்தனர்.
இது குறித்து குன்னூர் வருவாய்த்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டபோது, “நீரோடையில் அத்துமீறும் நபர்களை கேத்தி காவல்துறையுடன் இணைந்து, வருவாய்த்துறை அலுவலர்கள் மூலம் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்,” என்ற வழக்கமான பதிலையே தெரிவித்தனர்.


















