`கை எப்படி குளர்ச்சியாக இருக்கு?' - ஆசிரியை சித்ரவதையால் மாணவி தற்கொலை; அடுத்தடு...
"என்னை அடிக்கிறாங்க அப்பா" - மராத்தி பேசாததால் அடி; அவமானத்தில் மாணவர் தற்கொலை; தந்தை சொல்வது என்ன?
மும்பையில் வசிப்பவர்கள் கட்டாயம் மராத்தி பேச வேண்டும் என்ற கோரிக்கையை மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சி முன்வைத்தது. அவ்வாறு மராத்தி பேசாத கடைக்காரர்களை அக்கட்சியினர் அடித்த சம்பவங்களும் இதற்கு முன்பு நடந்தன.
இந்நிலையில், மும்பை அருகில் உள்ள அம்பர்நாத்தில் வசித்து வந்தவர் அர்னவ் கெய்ரே(19). இவர் முலுண்டில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இதற்காக அவர் தினமும் புறநகர் ரயிலில் செல்வது வழக்கம். அவர் அம்பர்நாத்தில் இருந்து சி.எஸ்.டி செல்லும் ரயிலில் பயணம் செய்தார்.
ரயிலில் கூட்டம் அதிகமாக இருந்ததால் சக பயணியிடம், "சற்று முன்னால் செல்லுங்கள்" என்று கெய்ரே இந்தியில் பேசினார். முன்னால் நின்ற நபர் மராத்தியர். கெய்ரேயும் மராத்திதான். இந்தியில் பேசியதும் முன்னால் நின்ற நபர், "ஏன் இந்தியில் பேசுகிறாய்?" என்று கேட்டார்.

மேலும், "உனது மொழியைப் பேசுவதில் உனக்கு அவமானமா?" என்று கேட்டு கெய்ரேயிடம் சக பயணி வாக்குவாதம் செய்தார். உடனே கெய்ரே நானும் மராத்திதான் என்று சொல்லி புரிய வைத்தார்.
ஆனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கெய்ரேயை சக மாணவர்கள் சரமாரியாகத் தாக்கினர். இது குறித்து கெய்ரே தனது தந்தைக்கு போன் செய்து, "அப்பா சிலர் என்னை அடிக்கிறார்கள்" என்று தெரிவித்தார்.
இதையடுத்து தானே ரயில் நிலையத்தில் இறங்கி வேறு ரயில் மூலம் முலுண்ட் சென்று கல்லூரிக்குச் சென்றார். ஆனால் கல்லூரியில் எந்த வித வகுப்பிலும் கலந்து கொள்ளாமல் வீட்டிற்கு வந்துவிட்டார். வீட்டிற்கு வந்த பிறகு தனது அறை கதவைப் பூட்டிக்கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து அம்மாணவனின் தந்தை கூறுகையில், ''எனது மகன் புறநகர் ரயிலில் கல்லூரிக்குச் சென்றபோது எனக்கு போன் பண்ணி சிலர் என்னை அடிக்கிறார்கள் என்று தெரிவித்தான். முன்னால் நின்றவரிடம் சற்று தள்ளி நிற்கும்படி சொன்னதற்கு ஏன் மராத்தியில் பேசவில்லை என்று கேட்டு அடிப்பதாகத் தெரிவித்தான்.
அதோடு அதிகமானவர்கள் இருக்கிறார்கள். எனக்கு பயமாக இருக்கிறது என்று என்னிடம் தெரிவித்தான். அவன் தானேயில் இறங்கி வேறு ரயில் மூலம் கல்லூரிக்குச் சென்றுவிட்டு வகுப்பு எதிலும் கலந்துகொள்ளாமல் வீட்டிற்கு வந்து நடந்த சம்பவம் குறித்து தெரிவித்தான்.
நான் வேலை முடிந்து தாமதமாகத்தான் வந்தேன். வீட்டில் கதவு உள்பக்கமாகப் பூட்டப்பட்டு இருந்தது. நான் பக்கத்து வீட்டுக்காரர்கள் துணையோடு கதவைத் திறந்தபோது உள்ளே எனது மகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்திருந்தான்'' என்றார்.
இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மும்பை புறநகர் ரயில்களில் காலை மற்றும் மாலை நேரத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். இருக்கையில் அமர்வது அல்லது, கை, கால் பட்டுவிட்டதாகக் கூறி அடிக்கடி ரயிலில் பயணிகளிடையே சண்டை வருவது வழக்கமாகும்.


















