”கோவை, மதுரை மெட்ரோ திட்ட விவகாரம்; யார் சொல்வதை நம்புவது என்றே தெரியவில்லை!”- அ...
``என் தீர்ப்புகளில் மிக முக்கியமானது" - புல்டோசர் வழக்கு குறித்து பகிர்ந்த பி.ஆர்.கவாய்
உச்ச நீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பணியாற்றிய பி.ஆர். கவாய் நாளையுடன் ஓய்வு பெற உள்ளார். அதனால் நேற்று கடைசி வேலை நாளின்போது, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் (SCBA) பிரிவு உபசார விழா நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய பி.ஆர்.கவாய், ``ஒரு சட்ட மாணவனாக வாழக்கையை தொடங்கி, நீதியின் மாணவனாக வெளியேறுகிறேன். நான் எழுதிய தீர்ப்பில் மிக முக்கியமான தீர்ப்பைத் தேர்ந்தெடுக்கச் சொன்னால், அது சந்தேகத்திற்கு இடமின்றி புல்டோசர் நீதிக்கு எதிராக நான் கொடுத்த தீர்ப்பாக இருக்கும்.
புல்டோசர் நீதி என்பது சட்டத்தின் ஆட்சிக்கு எதிரானது. ஒரு நபர் மீது குற்றம் சாட்டப்பட்டாலோ அல்லது அதற்காக தண்டனை பெற்றாலோ ஒரு வீட்டை எப்படி இடிக்க முடியும்? அவரது குடும்பத்தினர் மற்றும் பெற்றோரின் தவறு என்ன? தங்குமிடம் பெறும் உரிமை ஒரு அடிப்படை உரிமை.
அடுத்து பட்டியல் சாதிகள் (SC) மற்றும் பட்டியல் பழங்குடியினர் (ST) பிரிவுகளுக்குள் இருக்கும் சமத்துவமின்மையை நிவர்த்தி செய்ய அனுமதிக்கும் தீர்ப்பு.
ஏனெனில் ஒரு தலைமைச் செயலாளரின் குழந்தைகளையும், கல்வியோ, போதிய வாழ்வாதாரமோ இல்லாத விவசாயத் தொழிலாளியின் குழந்தைகளையும் எப்படி சமமாக மதிப்பிடப்பட முடியும்? இதைக் கற்பனை செய்வதே கடினமாக இருக்கிறது. சமத்துவம் என்பது அனைவரையும் சமமாக நடத்துவதைக் குறிக்காது, ஏனெனில் அது மேலும் சமத்துவமின்மைக்கு வழிவகுக்கும்.
உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதியை மையமாகக் கொண்ட நீதிமன்றம். இந்தப் பாரம்பரியக் கருத்திலிருந்து விலகி, நிறுவனம் தொடர்பான முடிவுகளை எடுப்பதற்கு, சக ஊழியர்கள் அனைவரையும் கலந்தாலோசிப்பேன். எனது குறுகிய காலத்தில், 107 நீதிபதிகள் உயர் நீதிமன்றங்களுக்கு நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.

எனக்கு இணக்கமான சூழலை ஏற்படுத்திக் கொடுத்த கொலீஜியம் மற்றும் சக ஊழியர்களுக்கு நன்றி. கடந்த மூன்று ஆண்டுகளாக உச்ச நீதிமன்றத்தில் பசுமை பெஞ்சிற்கு தலைமை தாங்கி வந்தேன்.
தலைமை நீதிபதியாக முதல் வழக்கின் தீர்ப்பு புனேவில் உள்ள ஒரு வன நிலத்தைப் பாதுகாக்க வழங்கப்பட்டது. என்னுடைய கடைசி தீர்ப்பு ஆரவல்லி மலைகள் மற்றும் மலைத்தொடரைப் பாதுகாக்க வழங்கப்பட்டிருக்கிறது.
சட்டத் துறையில் 18 ஆண்டுகள் வழக்கறிஞராகவும், 22 ஆண்டுகள் அரசியலமைப்பு நீதிமன்ற நீதிபதியாகவும் என 40 ஆண்டுக்கால பணி, பாபாசாகேப் பீம்ராவ் அம்பேத்கரின் நீதி, சமத்துவம் மற்றும் சுதந்திரம் பற்றிய தத்துவத்தால் இயக்கப்பட்டது" எனக் குறிப்பிட்டார்.
நீதிபதிகள் வழக்கமாக தங்கள் சொந்த தீர்ப்புகள் குறித்து பொதுவில் கருத்து தெரிவிப்பதைத் தவிர்ப்பார்கள், ஆனால் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் அந்த விதிமுறையிலிருந்து விலகி தனது தீர்ப்பின் முக்கியத்துவம் குறித்து பேசியது கூடுதல் கவனம் பெற்றது.


















