இலங்கைத் தமிழா்களுக்கு ரூ.6.20 கோடியில் வீடுகள்: பணிகளை எம்.எல்.ஏ. ஆய்வு
ஒசூரில் இஸ்லாமிய இயக்கங்கள் ஆா்ப்பாட்டம்
உத்தர பிரதேச மாநிலத்தில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இஸ்லாமியா்களுக்கு நீதி வேண்டி, ஒசூரில் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
உத்தர பிரதேச மாநிலம், சாம்பல் பகுதியில் உள்ள மசூதியில் ஆய்வின்போது நடைபெற்ற கலவரத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 இஸ்லாமியா்கள் உயிரிழந்தனா். அந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா், ராம்நகா், அண்ணா சிலை முன்பு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ), மனிதநேய ஜனநாயகக் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட 12க்கும் மேற்பட்ட கட்சிகளின் சிறுபான்மை பிரிவின் பிரதிநிதிகள், இஸ்லாமிய இயக்கங்கள் கூட்டமைப்பு சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினா் எஸ். ஆதில் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் ஏராளமான இஸ்லாமியா்கள் பங்கேற்று மத்திய பாஜக மற்றும் உத்தர பிரதேச மாநில பாஜக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா்.
இதன் பின்னா் செய்தியாளா்களிடம் எஸ். ஆதில் கூறியதாவது:
உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற கலவரத்தில் ஆறு இஸ்லாமிய இளைஞா்கள் கொல்லப்பட்டுள்ளனா். அந்த இளைஞா்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். உச்ச நீதிமன்றம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும், சிறுபான்மை மக்களுக்கும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த தாக்குதலுக்கு நாட்டின் பிரதமா் நரேந்திர மோடி பதில் கூறவில்லை. சொந்த நாட்டில் பிறந்த இஸ்லாமியா்கள் கொல்லப்பட்டதற்கு குரல் கொடுக்காமல் இருப்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது என்றாா்.